சிறுவன் அடித்துக் கொலை; சிறுவனின் தாய் கைது
16-03-2017 03:16 PM
Comments - 0       Views - 64

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குடாப் பிரதேசத்தில்; நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அச்சிறுவனின்  தாயையும் புதன்கிழமை (15)  கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

நாவற்குடா மாதர் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றிலேயே செவ்வாய்க்கிழமை (14) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அச்சிறுவனை அடித்ததாகக் கூறப்படும் அவனது வளர்ப்புத் தாயே (வயது 50) ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அச்சிறுவனை சிகிச்சைக்காக அனுமதித்திருந்ததார்.  இருப்பினும், அச்சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்து காணப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸாருக்கு வைத்தியசாலை அதிகாரிகள் தகவல் வழங்கினர்.

இதனை அடுத்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அச்சிறுவனின் வளர்ப்புத் தாய்  புதன்கிழமை (15) கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இது இவ்வாறிருக்க, மேற்படி வளர்ப்புத் தாயிடமிருந்து 8 வயதுச் சிறுமி ஒருவரையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த அச்சிறுமியையும் வளர்புத் தாய்; பல தடவைகள் அடித்துச் சூடு வைத்துள்ளமை தொடர்பில் விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.

தன்னிடம் வசதி இல்லாமையால் நாவற்குடாவைச் சேர்ந்த மேற்படி  பெண்ணிடம் தனது மகனை ஒப்படைத்ததாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அச்சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

31 வயதாகிய தான்  புதுக்குடியிருப்பில் வசித்து வருவதுடன், தனது மகன்; 4 மாதக் குழந்தையாக இருக்கும்போது தனது கணவர் தன்னை கைவிட்டுச் சென்று வேறு திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கஷ்டப்பட்ட தான், அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று நடத்தும் உணவு  விற்பனை நிலையத்தில் பற்றுச்சீட்டு எழுதுபவராக கடமையாற்றி வந்தபோதே,  அங்கு இடியப்பம் வாங்க வந்த நாவற்குடாவைச் சேர்ந்த மேற்படி பெண் எனக்கு அறிமுகமானார். இந்நிலையிலேயே தனது மகனை அவரிடம் ஒப்படைத்ததாகவும் வாக்குமூலத்தில்  தாய் தெரிவித்துள்ளார்.

 

 

" சிறுவன் அடித்துக் கொலை; சிறுவனின் தாய் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty