'இயற்கை அழிவின் விளைவு நம்மை அழிக்கும்'
18-03-2017 12:08 PM
Comments - 0       Views - 30

-வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்,ரீ.எல்.ஜவ்பர்கான்

“இயற்கையை நாம் அழிவுறச் செய்தால் அதன் விளைவு அது நம்மை அழிக்கும்” என, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாதுகாப்பான இலங்கை எனும் தொனிப்பொருளின் கீழ், மட்டக்களப்பு -செட்டிபாளையம் சிவன்கோயில் வீதியில் அமைந்துள்ள தோணாவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்  ஏற்பாட்டில் 12.5 மில்லின் ரூபாய் ஆசிய அபிவிருத்தி வங்கிளின் நிதி ஒதுக்கீட்டில் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (17) காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இயற்கை நீரோடும் வழிகள், கால்வாய்கள், நீரேந்துப் பகுதிகள் என்பனவற்றைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.

இப்பொழுது இந்த இயற்கை நீர் புகும் மற்றும் வெளிச் செல்லும் வழிகள் தடுக்கப்பட்டு அல்லது அந்தப் பிரதேசங்கள் சிலரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் நாம் இயற்கை இடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இப்பொழுது நாம் நாடுபூராகவும் இந்தப் பிரச்சினைகள் உள்ள பகுதிகளை வரைவு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன், அந்தப் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்டு எதுவிதமான அத்துமீறல்களும் ஏற்படாவண்ணம் எமது அலுவலர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் அக்கறையாகவும் அவதானத்துடனும் இருக்கின்ற அதேவேளை, இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுவதால் வரட்சியையும் இன்ன பிற இயற்கை இடர்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது பற்றி கவலையுடனும் இருக்கின்றோம்.

காலத்துக்குக் காலம் ஏற்படும் வரட்சியினால் இங்கு மட்டுமல்ல வேறுபல இடங்களிலும் பலர் பாதிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர் விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பும் எங்களுக்குள்ளது.

இன்று கூட கச்சேரியில் நடந்த கூட்டத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்களுக்கு பவுஸர்கள் மூலம் நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது. இயற்கையைப் பாதுகாப்பது அனர்த்தத் தடுப்பு மற்றும் அனர்த்தக் குறைப்புப் பிரிவினருக்கு மட்டும் உள்ள கடமையல்ல.

எங்களால் முடிந்தளவு இயற்கையைப் பாதுகாக்குமாறுதான் நாம் அலுவலர்களையும் பொதுக்களையும் அறைகூவல் விடுக்கிறோம்.

இந்தக் கடமையை நாம் எல்லோரும் இணைந்து செய்யத் தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் நாம் அநேக பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பதை மறக்கக் கூடாது” என்றார்.

“விவசாயிகள் இன்னுமின்னும் அதிக நிலங்களில் பயிரிடவே விரும்புவர், கிராமங்களில் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. அதிக வீடுகளைக் கட்டுவதற்கு நிலம் தேவை. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு பார்க்கும்போது, நாம் இயற்கைக்கு என்ன செய்கின்றோம் என்பது புரியும்” எனவும் குறிப்பிட்டார்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வெள்ளநீர் வடிந்தோடும் வகையிலான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்க முதல் கட்டமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 29.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு இடங்களில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

"'இயற்கை அழிவின் விளைவு நம்மை அழிக்கும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty