'டெங்குவால் கல்முனையில் 735 பேர் பாதிப்பு'
18-03-2017 12:48 PM
Comments - 0       Views - 98

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில், கடந்த 2017 ஜனவரி தொடக்கம் இதுவரை 735 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது  தொடர்பாக விளையாட்டு கழங்கள், உள்ளுராட்சி மன்றம், திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றம பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர்களுடனான கலந்துரையாடல் இன்று அட்டாளைச்சேனை பிரதேச  சுகாதார வைத்தியதிகாரி  ஏ.எல். அலாவுதீன் தலைமையில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கடந்த வருடத்தை விட இவ்வருடம் 49 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைகளில் விசேட பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல் வந்து சில நாட்களின் பின்னரே சிகிச்சைக்காக மக்கள் வைத்தியசாலைக்க செல்கின்றார்கள். இப்படி இல்லாமல் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். குறிப்பாக டெங்கு காய்ச்சல் சிறுவர்களை அதிகமாக தாக்குகின்றது.

இது தொடர்பாக பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இதற்கு சமூகத் தலைவர்கள் மற்றும் கிராம மட்டத் தலைவர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

டெங்கு நுளம்பு பரவக் கூடிய வெற்றுக் காணிகளை வைத்திருப்பவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்கத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு அரசாங்கத்தினால், கிழக்கு மாகாணத்துக்கு கூடுதலான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

மக்கள் நலன் தொடர்பாக அரசாங்கத்தினால் எவ்வாறான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் மக்களின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாத வகையில் அவை நிறைவேறாது.

ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப்புறச் சூழலை கண்கானிப்பதோடு, வீதிகளிலோ, பொது இடங்களிலோ பிறர் மூலம் சேர்க்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பொருட்களை நாமாக முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.

"'டெங்குவால் கல்முனையில் 735 பேர் பாதிப்பு'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty