'திட்டங்களை வகுத்தாலும், நிதிக்காக காத்திருக்கும் நிலைமை மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ளது'
19-03-2017 10:12 AM
Comments - 0       Views - 22

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பைஷல் இஸ்மாயில்

'டெங்கு நோயால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான திட்டங்களை நாம் வகுத்தாலும், மத்திய அரசாங்கத்தின் நிதிக்காக காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ளது' எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கோறளைப்பற்றுப் பிரதேச சபைக்கு ஒப்பந்த அடிப்படையிலான பொதுப் பணியாளர்கள் 68 பேருக்கு நியமனங்கள்  வழங்கும் நிகழ்வு, அப்பிரதேச சபையில் சனிக்கிழமை (18) நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'மாகாண சுகாதாரத் துறைக்கு 98 சதவீதமான அதிகாரங்கள் யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள போதும்,  அவை இன்றளவும்  வெறும் எழுத்தில்; மாத்திரமே உள்ளது.

மாகாண சுகாதார அமைச்சுக்கு 10 சதவீதமான நிதி ஒதுக்கீடே வழங்கப்பட்டுள்ளது, அந்த நிதிக்கு நாம்  காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.

தேசிய மற்றும் போதனா வைத்தியசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் மாகாண சபைகளின் கீழ் இருந்தாலும் அவற்றுக்கான திட்டங்கள், அவற்றில் எதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பவை தொடர்பில் கொழும்பிலிருந்தே தீர்மானிக்கின்றார்கள், ஆனால்,  இங்குள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி, தளபாடப் பற்றாக்குறை மற்றும் குறைபாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் மாகாண சபைகளிடமே உள்ளன. எனவே, எதை மையப்படுத்தி தேசிய அரசாங்கம் நிதி ஒதுக்குகின்றது எனக் கேட்க விரும்புகின்றேன்' என்றார்.

'கிண்ணியாவில்  டெங்குக் காய்ச்சலால்   பாதிக்கப்பட்டவர்களுக்காக வைத்தியசாலைக்குத் தேவையான  கட்டில்களைக் கொள்வனவு செய்வதற்காக  மத்திய அரசாங்கத்திடம் நாம் எத்தனையோ பத்திரங்களை வழங்கி விளக்கம் கூறி  நிதி  கோர  வேண்டிய நிலைமையே  உள்ளது.

எமக்கான நிதி எங்கிருந்து வழங்கப்படுகின்றது என்ற தெளிவு இல்லாமையால், மக்கள் எம்மைக்  குறை கூறுகின்றனர். கஷடங்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு  ஏதுவான திட்டங்களையும்  அபிவிருத்திகளையும் முன்னெடுத்து  மாகாண சபை ஊடாக நாம் இராஜதந்திர நகர்வுவோடு முன்னோக்கிச்  செல்கின்றோம்.

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில்  பிரதமரின் ஆலோசகருடன் கலந்துரையாடிபோது, இங்கு தற்காலிக நியமனங்களில் பணி புரிபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்பது தொடர்பிலும் வலியுறுத்தியிருந்தோம். அது மாத்திரமன்றி, விஞ்ஞானப் பாடத்துக்கு 104 ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கவுள்ளோம்,

வேலைவாய்ப்புக்காக போராடும் இளைஞர், யுவதிகளுக்கு  நியமனங்களை வழங்குவதற்கான  நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றோம், இவற்றுக்கான முயற்சி பல தடைகளைத் தாண்டி முன்னெடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

 

"'திட்டங்களை வகுத்தாலும், நிதிக்காக காத்திருக்கும் நிலைமை மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ளது'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty