'மூன்றாந்தரப்பு நாடு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை'
19-03-2017 10:41 AM
Comments - 0       Views - 28

-வா.கிருஸ்ணா

மூன்றாந்தரப்பு நாடு வந்து தமிழ் மக்களின் பிரச்சினையைத்  தீர்க்கப் போவதில்லை. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே தமிழ் மக்களுக்கு நீடித்து நிலைத்து நிற்கும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, சத்துருக்கொண்டான்  மீன்பிடி நிலையத்தில் சனிக்கிழமை (18)  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் உரையாற்றியபோது, 'தமிழ்த்; தேசியக்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். பல நூல்களை வாசித்துள்ளார். அதிகளவான இராஜதந்திரிகளையும் அவர் சந்தித்துள்ளார். அவற்றின் மூலம் பல  அனுபவங்களை அவர் பெற்றுள்ளார். இவற்றைக் கொண்டு பிரச்சினையை எப்படித்  தீர்ப்பது என்பது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றார்' என்றார்.

'பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். கால அவகாசம் வழங்குவதா, இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

இலங்கையை அகற்றிவிட்டு, இலங்கை வந்து ஐக்கிய நாடுகள் சபை எதுவும் செய்யப் போவதில்லை. ஒரு நாட்டை வைத்தே ஐ.நா. செயற்படுமே தவிர, ஐ.நா படையைக் கொண்டுவந்து ஒரு நாட்டின் இறைமைக்கு எதிராக ஐ.நா செயற்படாது. அவ்வாறு செய்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை.

'மேலும் எமக்கான சமாதானத்தை ஐக்கிய நாடுகள் சபையோ, வேறு எந்தச் சபையோ வந்து பறித்து எங்களிடம் தந்துவிட்டு காவல் காக்காது. அரசாங்கத்திடம் அதன் பொறுப்புகளைக் கூறி அவர்களாகவே அதனைச் செய்ய வேண்டும். எங்களுக்கான தீர்வானது நீடித்து நிலைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்' என்றார்.
 

 

" 'மூன்றாந்தரப்பு நாடு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty