காத்தான்குடியில் டெங்கு செயலணி உருவாக்கம்
19-03-2017 11:10 AM
Comments - 0       Views - 32

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் அங்கு டெங்கு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக சனிக்கிழமை (18) சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், டெங்குக் காய்ச்சலினால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இதனை அடுத்து, அங்கு டெங்கு நோயைக்  கட்டுப்படுத்துவதற்கான கூட்டம்,  காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களினுடைய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.இக்கூட்டத்தின்போதே மேற்படி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

அச்செயலணியில்  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர், காத்தான்குடி நகர சபைச் செயலாளர், காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்,  காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை; பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் சம்மேளனப் பிரதிநிதிகள், காத்தான்குடி வர்த்தக சங்கப்  பிரதிநிதிகள் ஆகியோர் அடங்குகின்றனர்.

இச்செயலணி மூலம்  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், புகை அடித்தல், வீடுகளில் சோதனை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில்; 20 பேரைக் கொண்ட அவசர வேலையாட்கள் 24 மணிநேரமும் செயற்படும் வகையில் பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான அனைத்து  வளங்களைப் பயன்படுத்தவும் தேவையான உதவிகளை  வழங்கவும் கிழக்கு மாகாண சபை தயாராக உள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மேலும், காத்தான்குடியில் இன்று (19) வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, சிரமதான நடவடிக்கை இடம்பெற்றது.

 

" காத்தான்குடியில் டெங்கு செயலணி உருவாக்கம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty