“தேர்தலை நடத்த நான் தயார்”
19-03-2017 12:19 PM
Comments - 0       Views - 74

 

எம்.செல்வராஜா                       

 

“உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நான் தயார். ஆனால், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி  அமைச்சர்,  தேர்தலை எவ்வகையில், எந்த முறையில் நடத்துவதென்பதுக் குறித்து, வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வேண்டும்.  அதன்பிறகே,  தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை  முன்னெடுக்க முடியும்” என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பசறை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட சட்டதரணியுமான அமரர் சுனில் யசநாயக்கவின் நினைவு தினமும் நூல் வெளியீடு மற்றும் ஒன்றுகூடலும், ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஊவா சக்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை, நானே தள்ளிப் போட்டு வருகின்றேனென்று, பலரும் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர். நேரடியாகவும் பலர் என்னிடம் தேர்தல் குறித்து வினவுகின்றனர். தேர்தலை நடத்த, நான் ஆயுத்தமாகவே உள்ளேன். ஆனால், அதற்கான வர்த்தமானி அறிவிப்பை, உள்ளுராட்சி மன்ற அமைச்சு வெளியிட வேண்டும். அதன் பிறகுதான், என்னால் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும். குறிப்பிட்டக் காலத்தில் தேர்தலை நடத்துவதே முறையாகும். தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்” என்றார்.

“டொனமூர் அரசியல் யாப்புக் காலத்தில், சர்வஜன வாக்களிப்பு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்கள் 21 வயதிலும் பெண்கள் 30 வயதிலுமே வாக்களிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. அதையடுத்து, ஏற்பட்ட போராட்டத்தின் பயனாக,18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெற்றது.

ஏற்கனவே இவ் வாக்களிக்கும் முறைமையானது, படித்தவர்கள், வசதி படைத்தவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததை இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது. படிப்படியாக இத்தகைய பாரபட்ச முறைமைகள் அகற்றப்பட்டு, காலப்போக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட  அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

வாக்குரிமையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், நாட்டில் விழிப்புணர்வு பாத யாத்திரைகளையும் நான் மேற்கொண்டேன். மக்களை தெளிவுபடுத்தும் பொருட்டு, பதுளையில் ஐந்து நிகழ்வுகளிலும் நான் கலந்துகொண்டு, அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டேன்.

நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறைமைகளில், பெண்களும் இளைஞர் சமூகத்தினரும், விசேட தேவையுடையவர்களும், பாதிப்படைந்திருப்பதை இங்குக் கூற வேண்டியுள்ளது.

இதனாலேயே, இளைஞர் சமூகத்தினர் தேர்தல்களை புறக்கணித்து வருகின்றனர். நாட்டின் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் 100க்கு 52 சதவீதமானவர்கள் பெண்களாவர். ஆனால், அவர்கள் அரசியல் ரீதியில், மிகவும் பின்னடைவிலேயே இருந்து வருகின்றனர். பெண்களின் எண்ணிக்கைக்கமைய, அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவங்களும் இளைஞர் சமூகத்தினரின் எண்ணிக்கமைய  இளைஞர்களது அரசியல் பிரதிநிதித்துவங்களும் இல்லாதுள்ளன. இந்நிலை மாற்றப்பட வேண்டும்” என்றார்.

"“தேர்தலை நடத்த நான் தயார்”" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty