'சிறுபான்மையினர் நசுக்கப்படுவதற்கு இந்நாட்டின் கல்வி முறையே காரணம்'
19-03-2017 03:27 PM
Comments - 0       Views - 36

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இந்த நாட்டில் வாழும் தமிழ,; முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் நசுக்கப்படுவதற்கு இந்த நாட்டின் கல்வி முறையிலுள்ள குறைபாடே காரணமாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலயத்தின் 142ஆவது பாடசாலைத் தின நிகழ்வு, அப்பாடசாலையில் சனிக்கிழமை (18)  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நாட்டை மாறி, மாறி ஆண்டு வந்த பெரும்பான்மை  இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த நாட்டுக் கல்விக் கூடாகவே தலைமைத்துவத்தை ஏற்றார்கள்.

அவர்கள் பாடசாலைகளில் கற்றபொழுது பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, சகோதர வாஞ்சை, விட்டுக்கொடுப்பு, அடுத்தவரை நேசிக்கும்  பண்பு  என்பவை ஊட்டப்படவில்லை. அதனாலேயே, அடுத்தவனைத் தீர்த்துக் கட்டும் மனப்பாங்கு புற்றுநோய் போல் புடம் போட்டுள்ளது.

ஆயுதப் போராட்டமும் அதன் தோற்றுவாயாக பதிலடியாக வந்ததே. பலர் அழிய ஆயுதப் போராட்டமே காரணமாக அமைந்தது.

வீட்டினுடைய, சமூகத்தினுடைய, நாட்டினுடைய தலைவராக வருகின்றவர் பாடசாலையில் மற்றும் வீட்டுச் சூழலில் அத்தனை மனிதநேயப் பண்புகளையும் தன்னகத்தே தாங்கியவராக  வளர்க்கப்பட வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டில்  தலைமைத்துவத்தை ஏற்றால் எதிர்காலம்  சிறப்பாக அமையும்' என்றார்.

இந்த நல்லாட்சியை உருவாக்கியதில் வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மையினத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இனவாதத்தை வெறுக்கும்  பெரும்பான்மையின மக்களுக்கும் பெரும் பங்குண்டு. மேலும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றும்  நல்லாட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு மக்கள் போராடவில்லை.  போரினால் தாங்கள் இழந்த நிலத்தை, உறவுகளை அடையவே போராட்டங்களை நடத்துகின்றார்கள். அவர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி நியாயத்தை வேண்டி நிற்கின்றார்கள்' என்றார்.

 

"'சிறுபான்மையினர் நசுக்கப்படுவதற்கு இந்நாட்டின் கல்வி முறையே காரணம்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty