உயர் உந்துவிசை இயந்திரத்தை சோதித்தது வடகொரியா
19-03-2017 10:35 PM
Comments - 0       Views - 17

தனது டொங்சாங்-றி றொக்கெட் ஏவுதள நிலையத்தில், புதிய உயர் உந்துவிசை இயந்திரத்தை வடகொரியா சோதித்துள்ளது.

இந்த வெற்றிகரமான சோதனையானது, தமது றொக்கெட் தொழிற்துறையில் புதிய பிறப்பு என வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்ததாக, வடகொரிய உத்தியோகபூர்வ ஊடகமான கே.சி.என்.ஏ, இன்று (19) தெரிவித்துள்ளது.

குறித்த இயந்திரமானது, உலகத்தரம் வாய்ந்த செய்மதிகளை ஏவும் வல்லமையை வடகொரியா பெறுவதற்கு உதவும் என கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

அதாவது, நீண்ட தூர ஏவுகணைகளுக்கான புதிய வகையான றொக்கெட் இயந்திரத்தின் சோதனை இதுவென  கே.சி.என்.ஏ குறிப்பால் உணர்த்தியுள்ளது.

மேற்படி சோதனையானது, சோஹேயி செய்மதி ஏவும் தளத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. இங்கே, நீண்ட தூர றொக்கெட் சோதனைகளை வடகொரியா மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க தென்கொரிய இராணுவம் மறுத்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 38 வடகொரியா என்ற அமைப்பு, செய்மதிப் புகைப்படங்கள், குறித்த தளத்தில் இயந்திர தாங்கியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை எடுத்துக் காட்டுவதாகவும், றொக்கெட் இயந்திரத்துக்கான தயார்படுத்தலாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கடந்த வாரம் கூறியிருந்தது.

குறித்த இயந்திரச் சோதனை இடம்பெற்ற சில மணித்தியாலங்களில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை ஐக்கிய அமெரிக்க இராஜங்கச் செயலாளர் றெக்ஸ் டிலெர்சன் சந்தித்திருந்தார்.

"உயர் உந்துவிசை இயந்திரத்தை சோதித்தது வடகொரியா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty