ஹெலித் தாக்குதலில் 42 அகதிகள் கொல்லப்பட்டனர்
20-03-2017 02:42 AM
Comments - 0       Views - 76

யேமன் கரையோரத்தில், ஹெலிகொப்டர் ஒன்று, கடந்த வியாழக்கிழமை (16) படகொன்றைத் தாக்கியதில், 42 சோமாலிய அகதிகள் கொல்லப்பட்டதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேற்படி சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொள்ளுமாறு, யேமனில் போரில் ஈடுபடும் சவூதி தலைமையிலான கூட்டணியை, சோமாலியா கோரியுள்ளது.  

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆவணங்களை வைத்திருந்த அகதிகள், யேமனிலிருந்து சூடானுக்கு சென்று கொண்டிருந்தபோது, முக்கியத்துவம் வாய்ந்த அல்-மந்தாப் நீரிணைக்கு அருகில், அப்பாச்சி ஹெலிகொப்டரின் தாக்குதலுக்கு இலக்கானதாக, ஹுதிகளால் கட்டுப்படுத்தப்படும் ஹொடெய்டா பகுதியிலுள்ள, கடலோரப் பாதுகாப்பு அதிகாரியான மொஹமட் அல்-அலே தெரிவித்துள்ளார்.  

வடக்கு மற்றும் மேற்கு யேமனின் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்படுத்துகின்ற, ஈரானினால் ஆதரவளிக்கப்படும் ஹுதி போராளிகளுடன், சவூதி தலைமையிலான அரபு நாடுகள் கூட்டணியால் ஆதரிக்கப்படும் யேமனிய ஜனாதிபதி அப்ட்-றப்பு மன்சூர் ஹாடிக்கு, விசுவாசமான படைகளுடன் மோதலில் ஈடுபடும் பகுதியொன்றிலேயே, குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், தாக்குதலை யார் நடத்தியது என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.  

42 அகதிகள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்த 39 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும், தமது டுவிட்டர் கணக்கில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

முன்னர், 33 பேர் இறந்ததாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் ஏனைய பயணிகளைக் காணவில்லை என, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்தது.  

தாங்கள் இன்னொரு படகிலிருந்து தாக்குதலுக்குள்ளானதாகவும், படகினை இயக்கியவர்கள், இதுவொரு சிவிலியன் படகு என ஒளி, சமிக்ஞை மூலம் வெளிப்படுத்தியிருந்ததாகவும், ஆனால் அதனால் பயனேதும் ஏற்படவில்லையென்றும், ஹெலிகொப்டரும் தாக்குதலில் இணைந்து கொண்டதாக, தப்பியோர் தெரிவித்ததாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் பெண்மணி இயோலான்டா ஜக்யுமெட் தெரிவித்துள்ளார்.    

"ஹெலித் தாக்குதலில் 42 அகதிகள் கொல்லப்பட்டனர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty