‘கம்பனிக்காரர்களை விரட்டியடிக்க வேண்டும்’
20-03-2017 10:09 AM
Comments - 0       Views - 3

எம்.செல்வராஜா   

“பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றிருக்கும் 22 கம்பனிகளின் முகாமைத்துவங்கள், எமது மக்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து எம்மால் அனுமதிக்க முடியாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு அமைவாக, நாம் வீறு கொண்டெழுந்து, இக் கம்பனிக்காரர்களை விரட்டியடிக்க வேண்டும்” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.   

இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாபெரும் மகளிர் தின நிகழ்வு, சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ தலைமையில், பதுளையில் நேற்று(19) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,  

“பெருந்தோட்டங்களில் முதலீடு செய்யவிரும்பும் புதியவர்களுக்கு, தோட்டங்களைப் பொறுப்பேற்குமாறு கூறவேண்டும். அல்லது நாமே பெருந்தோட்டங்களை முன்னின்று நடத்துவதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.   

இவ்விடயம் குறித்து, எதிர்வரும் 21ஆம் திகதி, தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில், தொழில் அமைச்சர் தலைமையில் 22 தோட்டக் கம்பனி முகாமைத்துவங்களுடன் தீர்மானம்மிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம். இதில், தொழிலாளர்கள் சார்பில், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினராகிய, நாம் கலந்துகொள்வோம்.   

இப்பேச்சுவார்த்தையின்போது, கூட்டொப்பந்தத்தில் குறிப்பிட்ட சம்பளம், தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என வலியுறுத்தவுள்ளோம், வேலையின் அளவு, வேலை நேரம் உள்ளிட்ட ஏனைய முக்கிய விடயங்கள் குறித்தும் பேசி முடிவு எடுக்கவுள்ளோம்.   
தோட்டக் கம்பனிகள், எமது கோரிக்கைகளுக்கு இணங்க மறுக்கும் பட்சத்தில், அவர்களை வெளியேற்றி, மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.  

“இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், புதிய பரிணாம வளர்ச்சியுடன், தற்போது வீறுநடை போடுகின்றது. பெருந்தோட்டத் தொழில் துறையில், முக்கிய தீர்மானங்களை எடுக்கக்கூடிய சக்தியாக, எமது தொழிற்சங்கம் இருந்து வருகின்றது.  

எமது சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கிடைத்திருப்பது, எமது மக்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும். அத்துடன் நானும், அச்சங்கத்தில் பொதுச் செயலாளராக இருப்பதனால், பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ஆக்கப்பூர்வ வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்” என்றார். 

" ‘கம்பனிக்காரர்களை விரட்டியடிக்க வேண்டும்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty