‘பெண் மேற்பார்வையாளர்களை நியமிக்கவும்’
20-03-2017 10:12 AM
Comments - 0       Views - 12

எம்.செல்வராஜா   

“பெருந்தோட்டங்களில் பணிப்புரியும் பெண் தொழிலாளர்களை கண்காணிப்பதற்கு, பெண் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்” என்று, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது.   

“பெருந்தோட்டங்களில் பணிப்புரியும் பெண் தொழிலாளர்களை மேற்பார்வை செய்பவர்கள், பெண்களாகவே இருக்க வேண்டியது அவசியம்” என, அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.   

இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பதுளையில், நேற்று(19) நடத்திய மகளிர் தின நிகழ்வின்போது, அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐந்து முக்கியப் பிரகடனங்களை வெளியிட்டிருந்தது.   

இப்பிரகடனத்திலேயே, மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.   

இதேவேளை, “பெருந்தோட்டப் பெண்கள், பாலியல் துன்புறுத்தல்கள், வீட்டு வன்முறை எனப் பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். இத்தகைய வன்முறைகளிலிருந்து, அவர்கள் பாதுகாக்கப்படுவதுடன், தொழில் ரீதியிலான காப்புறுதியும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.   

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாரின் நலனில் கூடியக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதோடு, சுகாதார ரீதியிலான அனைத்து சேவைகளும், அவர்களுக்குக் கிடைக்கும் வகையிலான செயற்பாடுகள், முன்னெடுக்கப்படல் வேண்டும்.   

தேயிலை, இறப்பர், முள்ளுத்தேங்காய் (பாம் எண்ணெய்) ஆகிய தொழில் துறைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண் தொழிலாளர்களுக்கு, வேலை நேரம் மற்றும் வேலையின் அளவு ஆகியன தொடர்பாக, குறைந்த பட்ச நிர்ணயம் செய்யப்பட வேண்டியதும், அவசியமாகும்.   

சர்வதேச மகளிர் தினத்தில், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படல் வேண்டும். அரச விடுமுறை தினத்தில் மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுமேயானால், அடுத்துவரும் வேலை நாள், சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினமாக, நடைமுறைப்படுத்தப்படல் வேண்டியது கட்டாயமாகும்.  

இந்த ஐந்து அதி முக்கிய பிரகடனங்கள் அடங்கிய ஆவணக் கோவை, அமைச்சரும், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவருமான ஹரீன் பெர்ணான்டோவிடம் நேற்றுக கையளிக்கப்பட்டது.  

இந்த ஆவணக் கோவையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை, அமைச்சரவை கூட்டத்திலும் முன்வைத்து, சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, இப்பிரகடனங்களை நிறைவேற்றித்தருமாறு, அமைச்சரிடம் மகளிர் அனைவரும் ஏகமனதான கோரிக்கையை முன்வைத்தனர். 

"‘பெண் மேற்பார்வையாளர்களை நியமிக்கவும்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty