'நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்லவில்லை'
20-03-2017 10:25 AM
Comments - 0       Views - 28

-எஸ்.சபேசன்

நல்லாட்சி அரசாங்கத்தின்; ஆட்சி அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழ் மக்களின் மனங்களில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை. எனவே, அம்மக்களின் மனங்களை இந்த அரசாங்கம் வெற்றி கொள்ள வேண்டும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி 15ஆம் கிராமம் மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஆண்டு நிறைவையொட்டி விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி அங்கு ஞாயிற்றுக்கிழமை (19) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில்; பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு  உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'நல்லாட்சி மலர்ந்துள்ள இவ்வேளையில், தமிழ் மக்கள்  எதிர்பார்த்துள்ள தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்தபோதும், அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படாமல் உள்ளமை கவலையளிப்பதாக உள்ளது.

இந்த நாட்டில் சமாதானம் மற்றும் சமத்துவத்துடன்  எங்களை நாங்களே ஆளக்கூடிய அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்' என்றார்.   

'மேலும், 1960ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமே இருந்தது. பின்னர், இம்மாவட்டத்தைப் பிரித்தெடுத்து அம்பாறை மாவட்டம்  உருவாக்கப்பட்டது. அவ்வாறே, இலங்கை -இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டு, தமிழர்களிடம்; பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் மேற்கொண்டது.

தற்போது அம்பாறையில் மூன்றாந்தரப்பு பிரஜைகளாக  தமிழ் மக்கள் இருக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அது மட்டுமல்ல, தமிழர்களின் காணிகள் திட்டமிட்ட முறையில் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டுள்ள காணிகளை மக்களின் தேவைகளுக்கு  படையினர் விட்டுக்கொடுக்க வேண்டும். அப்போதே நல்லாட்சி எனும் பதம் பொருத்தமானதாக அமையும்.

கடந்த காலத்தில் எமது உயிரை எவ்வாறு காப்பாற்றுவது என்று  ஏக்கத்தில் இருந்தோம். ஆனால், தற்போது  தமிழ் மக்களுக்கான  அபிவிருத்தி பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதற்கு இளைஞர்களின் பங்கும் காலத்தின் தேவைப்பாடாக இருக்கின்றது' என்றார்.

 

" 'நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்லவில்லை'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty