2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியாவில் நடந்த ‘மினி’ வாக்கெடுப்பு

Administrator   / 2017 மார்ச் 20 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திரமோடியின் நிர்வாகத்துக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை வழங்கியிருக்கிறது.   

பாரதிய ஜனதாக் கட்சியின் வெற்றி, மணிப்பூரிலும் உத்தரபிரதேசத்திலும் குறைத்து மதிப்பிட முடியாத வெற்றி. அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேசத்திலும் மணிப்பூரிலும் கவலையளிக்கக்கூடிய படு தோல்வி கிடைத்துள்ளது. 

இந்தியாவில் 403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் கடந்த பத்து ஆண்டுகள் (2004 முதல் 2014) வரை தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு ஏழு எம்.எல்.ஏக்கள் மட்டுமே கிடைத்திருக்கிறார்கள்.   

ஆனால், உத்தரபிரதேசத்தில் 15 வருடங்களாக ஆட்சியில் இல்லாத பா.ஜ.கவுக்கு 312 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். 

ஆகவே, அகில இந்திய அளவில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் வரைபடம் இந்திய வரைபடத்தில் முக்கால் வாசியை இப்போதே தொட்டு விட்டது.   

முற்றிலுமாக பா.ஜ.கவின் ஆட்சியிலிருந்து விலகி நிற்பது இப்போதைக்கு தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள்தான்.   

அந்த அளவுக்கு வட இந்திய மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.கவின் ஆளுமை கொடி கட்டிப் பறக்கிறது. அதனால்தான் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பா.ஜ.கவின் முதலமைச்சர்கள் அமருகிறார்கள்.   

இந்த வெற்றி பிரதமர் நரேந்திரமோடிக்கும் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு கிடைத்த வெற்றி. அவர்களின் தீவிர உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்று போற்றப்படுகிறது.   

நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் மொத்தமுள்ள 690 சட்டமன்றத் தொகுதிகளில் 405 எம்.எல்.ஏக்களைப் பெற்று பா.ஜ.க முதன்மைத் தேசியக் கட்சியாக மாறியிருக்கிறது.  

மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஒரு கட்சிக்கு, ஆரம்பக் கட்டத்தில் இப்படியொரு வெற்றி கிடைப்பது ஒன்றும் புதிதல்ல; என்றாலும், பிரதமர் மோடியின் தலைமைக்கு வாக்காளர்களை வளைத்துப் போடும் ஆற்றல் இருக்கிறது என்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது.   

மத்திய அரசில் கடந்த மூன்று வருடத்தில் பெரிய ஊழல் புகார்கள் ஏதுமில்லை என்பது மோடிக்கு உத்தரபிரதேச வாக்காளர் மத்தியில் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.   

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை உச்சத்துக்கு எடுத்துக் கொண்டு போய் பிரசாரம் செய்தாலும் எதிர்கட்சிகள் உயர உயரப் பறக்க முடியாது என்பது புலப்பட்டுள்ளது.   

குடும்ப அரசியல், நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கித் தவித்த முலயாம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, ‘ஆட்சிக்கு எதிரான’ போராட்டத்தில் பதவியை இழந்து விட்டது.   

இருந்தபோதிலும், அக்கட்சி காங்கிரஸுடன் அமைத்த கூட்டணி பா.ஜ.கவுக்குக் கைகொடுத்து விட்டது. மாயாவதி தலைமையிலான பகுஜன் கட்சிக்கு உத்தரபிரதேச வாக்காளர்களுடனான உறவு முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.  

முற்பட்ட வாக்காளர்கள், யாதவ் தவிர உள்ள மற்ற, பிற்படுத்தப்பட்ட வாக்காளர்கள் எல்லாம் பிரதமர் மோடியின் பக்கம் அணி திரண்டு விட்டார்கள்.

 ஏன், இஸ்லாமிய வாக்காளர்களே சில தொகுதிகளில் மோடியின் பக்கம் திரண்டு போய் நின்றது பல அரசியல் நோக்கர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   

பிரதமர் அளித்த ‘நல்லாட்சி தருவேன்’ என்ற வாக்குறுதியை நம்பி உத்தரபிரதேச மக்கள் கொடுத்துள்ள இந்த வெற்றியை, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை, அதாவது 2019 வரை எப்படி நிதானமாக பா.ஜ.க தலைமை எடுத்துச் செல்லப் போகிறது என்பதில் அடுத்த கட்ட நாடாளுமன்ற வெற்றி அந்தக் கட்சிக்கு அமைந்திருக்கிறது.   

ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ‘பஞ்சாப் மாநிலத்தில்’ மட்டும் ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. அங்கு பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால், காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.   

அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக பஞ்சாப் மாநிலத்தில் பதவியேற்றுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் நவ்சோத் சிங் சித்து, அவரது அமைச்சரவையில் ‘கபினெட்’ அமைச்சராகியிருக்கிறார்.  

ஆகவே, கடைசிக் கட்டத்தில் சித்து காங்கிரஸுக்கு வந்தது, அக்கட்சியின் வெற்றிக்கு கைகொடுத்திருக்கிறது. அப்படியில்லையென்றால் ஒரு வேளை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் பஞ்சாப் மாநிலத்தையும் காங்கிரஸ் கட்சி பறிகொடுத்திருக்கும்.  

அக்கட்சிக்கு மணிப்பூரில் ஏற்பட்ட சறுக்கலும் கோவாவில் ஏற்பட்ட தோல்வியும் உத்தரபிரதேசத்திலும் உத்தரகாண்டிலும் ஏற்பட்ட படுதோல்வியும் அகில இந்திய தலைமை மீதுதான் எதிரொலிக்கிறது.   

காங்கிரஸைப் பொறுத்தவரை அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக போராடிய கட்சி என்று பெயரெடுத்த கட்சி. அதேபோல், வலிமையான தலைமைத்துவத்தைக் கொண்ட கட்சி என்ற பெயரும் உண்டு.   

ஆனால், இப்போதுள்ள தலைமை காங்கிரஸுக்கு முன்பு இருந்த சீத்தாராம் கேசரி, நரசிம்மராவ் போன்றவர்களின் தலைமையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.   

காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை. அந்தத் தலைமை சொல்லும் கொள்கைகளுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.   

ஆகவேதான், பல தலைவர்களும் ஏன் காங்கிரஸ் கட்சிக்குள் இருப்பவர்கள் கூட ‘ராகுல் காந்தி ஆத்மபரிசோதனை’ செய்ய வேண்டிய நேரம் என்று தைரியமாகக் கூற முன்வந்திருக்கிறார்கள்.  

 பலமடைந்து வரும் பா.ஜ.கவைச் சமாளிக்கப் பலவீனமான காங்கிரஸ் கட்சி போதாது என்றாலும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் ஓர் அணியை உருவாக்க நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மூன்று வருடங்கள் ஆன பிறகும் ராகுல் காந்தி முன்வரவில்லை.   

அவருடைய அந்த அகங்காரத்துக்குக் கிடைத்த தோல்வியே இது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. தேசிய நீரோட்டத்தில் காங்கிரஸ் கட்சி மூழ்கடிக்கப்பட்டு, பா.ஜ.க முந்திச் செல்ல, ராகுல் காந்தியின் பலவீனமான தலைமையும் மற்ற மாநில கட்சிகளை மதிக்காத அவருடைய அணுகுமுறையுமே காரணம் என்றால் மிகையாகாது.   

ஆகவே, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளின்படி, இரு முக்கிய தேசியக் கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸுக்குள், பா.ஜ.க மட்டுமே தனிப்பெரும் கட்சி என்பதை நிரூபித்து விட்டது.   

இனி காங்கிரஸ் கட்சி தேசிய நீரோட்டத்தில் வலுவாகப் பயணிக்க வேண்டுமென்றால் பா.ஜ.க அரசாங்கம் தவறு செய்தால் மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.   

ஆகவே, காங்கிரஸ் கட்சி முதலில் தலைமையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்ற மனப்பான்மையிலிருந்து ராகுல் காந்தி விலகி, கட்சியில் உள்ள மூத்தவர்களுக்கு குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் போன்றவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.  

 மற்ற மதச்சார்பற்ற மாநில கட்சிகளுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு, வலுவான அணியின் கீழ், பா.ஜ.கவுடன் இனி வம்புக்கு நிற்க வேண்டும். 

அதைச் செய்யத் தவறும் வரை, தேர்தல் முடிவுகள் இப்படித்தான் வந்து கொண்டிருக்கும்.  
தேசியக் கட்சிகளின் நிலை இப்படியென்றால், மாநிலக் கட்சிகளைப் பொறுத்தமட்டில் இதுவரை ஆட்சியிலிருக்கும்போது கூட, காங்கிரஸால் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.  

ஆங்காங்கே உள்ள மாநில கட்சிகளில் எது பலமுள்ளதாக இருக்கிறதோ அந்தக் கட்சி ஆட்சிக்கு வரும். 
ஆனால், இன்றைக்கு உத்தரபிரதேசத்தில் பகுஜன் கட்சி, சமாஜ்வாடி கட்சியை பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து இருக்கிறது.  

2012 சட்டமன்ற தேர்தலில் 15 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்த பா.ஜ.க இந்தச் சட்டமன்றத் தேர்தல் வெற்றியில் 39.7 சதவீத வாக்குகளை வாங்கிக் குவித்துள்ளது. ஆனால், 12 சதவீத வாக்குகளை வைத்திருந்த காங்கிரஸ் கட்சி அங்கு ஆறு சதவீத வாக்கு வங்கியாகக் குறைந்து போய் நிற்கிறது.   

அதேபோல், சமாஜ்வாடி கட்சியும் ஆறு சதவீத வாக்கு வங்கியை இழந்திருக்கிறது. பகுஜன் கட்சியும் வாக்கைப் பறிகொடுத்திருக்கிறது.   

ஆகவே, காங்கிரஸுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளுக்கும் இனிமேல் குறிப்பாக பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.க சிம்ம சொப்பனமாகத் திகழும் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் பகிரங்கப்படுத்தி இருக்கின்றன.  

மாநிலக் கட்சிகள் இனி பா.ஜ.கவை அண்டிப் பிழைத்தால் மட்டுமே அவரவர் மாநிலங்களில் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, மாநிலக் கட்சிகளின் எதிர்காலத்துக்கும் இந்த ஐந்து மாநில தேர்தல் வித்தியாசமான பாதையை அடையாளம் காட்டியிருக்கிறது.  

இந்த ஐந்து மாநில தேர்தல் பிரதமர் நரேந்திரமோடியின் நிர்வாகத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு ‘மினி’ வாக்கெடுப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.

 மாநிலங்களில் உள்ள ஆட்சிகள், மக்கள் விரோத ஆட்சிகளாக இருந்ததால் இந்த ‘மினி’ வாக்கெடுப்பில் பிரதமர் நரேந்திரமோடியின் கையே ஓங்கியிருக்கிறது.  

அதற்கு முக்கியமாக ஐந்து மாநிலங்களிலும் ஆட்சி செய்த கட்சிகளுக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வெற்றி பா.ஜ.கவினர் கொண்டாடும் வெற்றி என்றாலும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் மத்திய அரசாங்கத்துக்கு எதிராகவும் 2019 இல் உருவாகலாம் என்பதை பா.ஜ.க தலைமை மறந்து விட முடியாது.   

இந்த நான்கு மாநில தேர்தல் வெற்றியும் இனி எஞ்சியிருக்கின்ற இரு வருடங்கள் மத்திய அரசாங்கத்தின் செயல்பாடும் பா.ஜ.கவின் எதிர்கால தேசிய அந்தஸ்தை நிர்ணயிக்கும் சக்திகளாக திகழும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .