அதிகாரிகள் முன்னிலையில் பரஸ்பர குற்றச்சாட்டு
20-03-2017 03:25 PM
Comments - 0       Views - 108

-நடராசா கிருஸ்ணகுமார்

“கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குரிய காணியை, இராணுவத்துக்கு தன்னிச்சையாக, முன்னாள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரும், தற்போதைய முல்லைத்தீவு மாவட்டச் செயலருமான ரூபவதி கேதீஸ்வரன், வழங்கினார்” என,  நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம்சாட்டினார்.

ஆனால், “இராணுவத்திடம் இருந்த கிளிநொச்சி மாவட்டச் செயலக காணியை அன்றைய சூழலில் மீளப்பெற்று, புதிய மாவட்டச் செயலகத்தை அமைத்தது நான்தான். இக்குற்றச்சாட்டு உண்மைக்கு புறமானது” என, நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அதே மேடையில் வைத்து கடும் தொனியில் கேதீஸ்வரன் பதிலளித்தார்.

கிளிநொச்சி இரணைமடு தாமரை தடாகம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) காலை இடம்பெற்ற “நில மெஹெவர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இவர்கள் இருவரும் இதனைக் கூறினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறிதரன் கூறுகையில், “கிளிநொச்சி மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக காணியை இராணுவத்தினருக்கு தன்னிச்சையாக வழங்கி விட்டார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்காமல் அவர் இவ்வாறு வழங்கியுள்ளார்.

இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமே மாவட்டச் செயலக காணியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது” என, பகிரங்கமாக ரூபவதி கேதீஸ்வரன் மீது குற்றஞ் சாட்டினார்.

இந்த நிலையில் ரூபவதி கேதீஸ்வரன், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி, “நீங்கள் உண்மைக்குப்புறம்பான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றீர்கள். ஆதாரமற்று பேசுகின்றீர்கள், நீங்கள் கூறுவதற்கு மாறாகவே, நான் அன்றைய சூழலில் செயற்பட்டிருக்கிறேன். இராணுவத்திடம் இருந்த காணியை மீளப்பெற்று நவீன முறையில் இன்றைய கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அமைய காரணமாக இருந்தவள் நான்.

தற்போது மாவட்டச் செலயகம் அமைந்துள்ள காணியின் பெரும் பகுதி இராணுவத்தின் வசம் இருந்தது. அது தங்களுக்கும் தெரிந்த விடயம்.  எனவே, அவ்வாறு இருந்த நிலத்தை மீட்டு இராணுவத்தை ஒரு பகுதிக்குள் ஒதுக்கி பெரும் பகுதி நிலத்தை மீட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் பலரும் பார்த்திருக்க இருவருக்கும் இடையில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றது.

 

"அதிகாரிகள் முன்னிலையில் பரஸ்பர குற்றச்சாட்டு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty