அத்துமீறிய செயற்பாட்டால் மோதல்கள் உருவாகும் வாய்ப்புள்ளது
20-03-2017 03:48 PM
Comments - 0       Views - 4

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“முல்லைத்தீவு மாவட்டத்தின் கடல் வளம் அழிக்கப்படுவதால், கடலை நம்பி வாழும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றது” என, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் வளம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. மாவட்டத்தின் 73 கிலோமீற்றர் நீளமான கடற்பகுதியில், சுமார் 1400 தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டுவருகின்றன.

இந்த நிலையில், சுமார் 800க்கும் அதிகமான, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மீனவர்களின் படகுகள், தடைசெய்யப்பட்ட முறைகளை பயன்படுத்தி இங்கு கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக நாயாறு பகுதி மிக வேகமாக, சிங்கள மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இதனால், எமது மீனவர்கள் கடலுக்குள் இறங்க முடியாத நிலை நிச்சயமாக விரைவில் உருவாகும்.

அதேபோல், மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இராணவத்தினர், கடற்படையினர் ஆகியோரை இணைத்து குழுவொன்று உருவாக்கப்பட்டது.

மாவட்டத்தில்  சிங்கள மீனவர்களின் வருகை அதிகரித்துள்ளமையை அந்த குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், எதிர்காலத்தில் இன மோதல்கள் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில்,  அந்த அறிக்கை கூட கருத்தில் எடுத்து கொள்ளப்படாத நிலையில்,  முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் சுதந்திரமாக வரும் வெளியூர் மீனவர்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட சகல கடற்றொழில் முறைகளையும் கையாண்டு தொழிலை செய்கின்றார்கள்” என அவர் மேலும் கூறினார்.

"அத்துமீறிய செயற்பாட்டால் மோதல்கள் உருவாகும் வாய்ப்புள்ளது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty