'முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்'
20-03-2017 03:51 PM
Comments - 0       Views - 148

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்,  படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டு வருகின்றது.

முழுமையாக விழுங்கப்படுவதற்கு முன்னர், மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (19) விஜயம் செய்த ஆகியோரிடம் மக்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ரோறான்ரோ மாநகர மேயர் ஜோன் ரொறி ஆகியோருடன் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் அமைப்புக்களுடனான கலந்துரைாயடலின்போது,  இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அந்த மக்கள் தொடர்ந்து கூறுகையில், “முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான இராணுவ மயமாக்கல் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதேபோல், மக்களுக்கு சொந்தமான பெருமளவு நிலங்களை படையினர் கையகப்படுத்தியிருக்கின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களுக்குரிய விவசாய நிலங்களை “மகாவலி எல் வலயம்” என அடையாளப்படுத்தி, சிங்கள மக்களுக்கு பறித்து கொடுத்திருக்கின்றார்கள். அதேபோல், கடல்வளத்தையும் சுரண்டுகின்றனர்.

மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம், சகல வழியிலும் விழுங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பெருமளவு இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் உள்ளனர். அதன்காரணமாக  அதியுச்ச வறுமை மாவட்டமாக முல்லைத்தீவு மாறியிருக்கின்றது.

இராணுவ மயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள், சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் பௌத்த மயமாக்கலில் இருந்து எமது மாவட்டத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"'முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty