2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இசைய(யை) மறு(ற)க்கும் இசைதுருவங்கள்

George   / 2017 மார்ச் 21 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் இசைத்துறையில் தவிர்க்க முடியாத கலைஞர்களாக விளங்கும் இசைஞானி இளையராஜாவும், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இருவேறு துருவமாக பிளவுபட்டு நிற்கின்றனர்.   

ராஜா - பாலா இவர்கள் இருவரும் எந்த அளவுக்கு நெருக்கமானவர்கள் என்பது திரையுலகம் அறிந்ததே. ஆனால், அண்மைக்காலமாக இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யாத தகவல் கோடாம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.   

இந்தநிலையில்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த இசை நிகழ்ச்சியில், சின்னக்குயில் சித்ரா உள்ளிட்ட பலர் பங்குபற்றியுள்ளனர்.   

இந்நிலையில் இசைஞானி இளையராஜா, “நான் இசையமைத்த பாடல்களை அமெரிக்காவில் நடக்கும் இசைநிகழ்ச்சியில் எஸ்.பி.பி பாடக்கூடாது. அவ்வாறு பாடினால் காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.   

‘இனிமேல் இளையராஜா பாடல்களை பாடமாட்டேன்’   

இளையராஜாவின் இந்த நோட்டீஸ் குறித்து, பாடகர் எஸ்.பி.பி., தனது கருத்தை சமூக வலைத்தளத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.   

இது குறித்து எஸ்.பி.பி., பதிவிட்டுள்ளதாவது, “இரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லொஸ் ஏஞ்சலஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.   
சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும் சரணுக்கும் பாடகி சித்ராவுக்கும் உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் ‘இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே, மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.   

என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். ‘எஸ்.பி.பி.50’ என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், டுபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை. ஆனால், அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை. முதலில் சொன்ன மாதிரி எனக்கு இந்தச் சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும், இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.   

இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். கடவுளின் ஆசிர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இனிவரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசிர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.   

உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விடயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால், இதுவே நடக்கட்டும்.” என்பதுதான் எஸ்.பி.பியின் பதிலாக இருக்கிறது.   

இவரது இந்தப் பதிவையடுத்து, இந்த விவகாரம் பாரியளவில் சூடுபிடித்த நிலையில், இளையராஜா நோட்டீஸ் குறித்து, அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.   

‘உரிமையைதான் கேட்கின்றோம்’   

எஸ்.பி.பிக்கு ஆதரவாக பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், இளையராஜாவின் தரப்பில் அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார், விளக்கம் அளித்துள்ளார்.   

இளையராஜா தரப்பு விளக்கம் இதுதான், “எங்களது கேள்வி, எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாகப் பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமைப் பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பிக்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்றுப் பாடுங்கள் என்றுதான் கூறுகிறோம்.   
கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள், பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர், வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.   

“அத்துடன், 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் பாடல்கள், இசையை உருவாக்கிய ஒரு மேதைக்கு உரிய காப்புரிமைத் தொகையை இன்று வரை யாரும் தராமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இளையராஜாவின் இசை, பாடல்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பல ஆயிரம் ஆர்க்கெஸ்ட்ராக்களை இளையராஜா எதுவுமே கேட்கவில்லை. அவர்களுக்கு இலவசமாகவே அனுமதி கொடுத்துவிட்டார்.   

ஆனால் அவர் பாடல்களை, படைப்புகளை வைத்து கோடிகளில் பணம் பார்க்கும் நிறுவனங்களிடம் சட்டப்படி உரிமை கோருகிறோம். எஸ்.பி.பி., இலவசமாக கச்சேரி நடத்தவில்லை. இந்த கச்சேரிகள் மூலம் பல கோடி ரூபாயை பாடகர்கள் சம்பாதிக்கிறார்கள். ஆனால் பாடல்களை உருவாக்கிய இசையமைப்பாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வருவதில்லை.   
 

இந்தப் பாடல்கள் இளையராஜாவின் உழைப்பு, படைப்பு. ‘எஸ்.பி.பி.50’  உலக சுற்றுப் பயணத்தை அவர் தொடங்குவதற்கு முன், முறையாக இளையராஜாவிடம் அனுமதி பெற்றிருக்கலாமே. இருவரும் நண்பர்கள். கடந்த ஓகஸ்டில் இந்தப் பயணத்தை எஸ்.பி.பி., தொடங்குவதற்கு முன், இளையராஜாவிடம் பேசி அனுமதி பெற்றிருக்கலாம்.   

இந்த கச்சேரிகளில் வசூலாகும் பணத்திலிருந்து குறிப்பிட்ட சதவீதத்தை பங்காகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பாடப்படும் பாடல்களுக்கு முறையான அனுமதியும், அதற்கு உரித்தான வருமான உரிமை (Royalty) மட்டும்தான் தரச் சொல்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

‘இளையராஜாவின் முடிவு தவறானது’   

இளையராஜா, தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்ப,
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளதால், இசையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

இந்த நிலையில், இளையராஜாவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், தனது அண்ணனின் முடிவு தவறானது என்று கருத்து வெளியிட்டுள்ளார்.   

இது குறித்து கங்கை அமரன், கூறியிருப்பதாவது, “இளையராஜாவின் முடிவு தவறானது. என்னுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள், பாடாதீர்கள் என்று மாணிக்கவாசகர், வள்ளலார் போன்றவர்கள் கூட சொன்னதில்லை, எதற்காக இந்த ஆசை. இனிமேலும் சம்பாதித்து என்ன செய்யப்போகிறீர்கள். அந்தளவுக்கா பணக் கஷ்டம் வந்துவிட்டது.?   

இசையை வியாபாரமாக்க கூடாது. பாடலுக்கான சம்பளத்தை ஏற்கெனவே வாங்கிவிட்டோம். நம்மைப் பின்பற்றி நம் பாடல்களை பாடுகிறார்கள், கேட்கிறார்கள் என்றால், நமக்குத்தானே அது பெருமை. நீங்கள் பாடல்களுக்கு இசையமைத்ததே மக்கள் பாடுவதற்குத்தான். பாடக்கூடாது என்றால் எதற்கு இசையமைக்க வேண்டும், அசிங்கமாக உள்ளது” என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்திருக்கிறார் கங்கை அமரன்.   

கங்கை அமரன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது, இசைக்கு அதிலும் தமிழ் சினிமா திரைப்பட இசைக்கு, தமிழ் சினிமா ஆரம்பித்து வளர்ச்சிபெற்ற காலத்தில் இருந்து மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பு இருக்கின்றது.   

ஆரம்பகால திரைப்படங்களில் அதிகமான பாடல்கள் இருந்தமை கண்கூடு. தமிழ் இசைத்துறையில் எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற இசை ஜாம்பவான்களுக்கு அடுத்த தலைமுறையாக, இளையராஜா உள்ளிட்டவர்கள் தமக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.   

இவர்களுடைய இசைக்கு உள்ள முக்கியத்துவம் போலவே பாடகர்களின் குரலும் முக்கியம். திறமையான, மக்களை கவரும் குரல்வளம் கொண்ட பாடகர்கள் இல்லாமல் எந்தவொரு இசையமைப்பாளராலும் இசையை மாத்திரம் வைத்துக்கொண்டு வெற்றிப்பெற முடியாதென்பது யாதார்த்தம்.   

அதனைபோல, என்னதான் இனிய குரல் வளம் இருந்தாலும் இசையமைப்பாளரின் சிறப்பான பங்கு இல்லாவிட்டால் அந்த பாடல் வெற்றிப்பெறமுடியாது என்பதும் யதார்த்தம்.   

அதுமட்டுமின்றி, பாடலாசிரியர் தயாரிப்பாளர்கள் ஆகியோரும் பாடலுக்குச் சொந்தமானவர்கள்தான். 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனையை, பாலசுப்ரமணியம் படைத்தார் என்றால், அது அவரது தனிப்பட்ட உழைப்பு மாத்திரம் இல்லை. அதற்கு பின்னால் பல இசையமைப்பாளர்கள் உள்ளனர்.   

எனவே, திரைப்படப் பாடல்களை பொறுத்த வரையில், இசையமைப்பாளரா பாடகரா என்றப் போட்டி இத்துறையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. திரையிசை ஜாம்பவான்களே இவ்வாறு செயற்படுவதால் இளைய தலைமுறை கலைஞர்களும் இதனை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .