2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'ரணிலின் கைப்பொம்மையாக சுமந்திரன் செயற்படுகின்றார்'

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக அரசாங்கத் தரப்பால் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியினாலும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் பாவிக்கப்படுகின்ற கைப்பொம்மையாகவே சுமந்திரன் உள்ளார். இங்கு நடைபெறுகின்ற விடயங்களைப் பார்த்தாலும் அவ்வாறே எண்ணத் தோன்றுகிறது. அதற்கமையவே சுமந்திரனும் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்”  என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்கின்றது. அது மாத்திரமல்லாமல் அந்தப் பிளவை கூர்மையாக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க அல்லது ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுவதாக பரவலான கருத்தும் இருக்கின்றது.

அவ்வாறு சுதந்திரக் கட்சி இரண்டு படுமாக இருந்தால் அதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் வெற்றியடைய முடியும் என்றதொரு சிந்தனையும் இருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவைப் பிரித்த பெருமை தனக்குரியது என்றும் ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி சொல்லி வருவதும் எல்லோரும் அறிந்த விடயம்.

இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடக்கின்ற விடயங்களைப் பார்த்தால் த.தே.கூ உடைப்பதற்கானதொரு செயற்பாட்டையும் ரணில் விக்கிரமசிங்க அல்லது அவரது கட்சியினர்  மேற்கொண்டிருக்கின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.

ஏனெனில், கூட்டமைப்பில் இருக்கக் கூடிய வேறு கட்சிகளுடன் பேசாமல் பல்வேறுபட்ட நடவடிக்கைகளையும் முடிவுகளையும் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போன்றோர் தான்தோன்றித் தனமாக எடுத்து வருகின்றார். அந்த முடிவுகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமான முடிவுகளாகவே இருக்கின்றது.

இவர்களால் தமிழ் மக்களுக்கு கொடுத்த உறுதிமொழிகள் எதனையுமே காப்பாற்ற முடியாமல் அதாவது சிறைக்கைதிகளை விடுவிப்பு, மக்களுடைய மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு ஆக இருந்தாலும் சரி இவை எதனையுமே நிறைவேற்றாதிருந்தாலும் கூட அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டுமென்பதில் மிக அக்கறையாக இருக்கின்றார்கள்.

அரசாங்கத்துக்கு ஐ.நா சபையின் தீர்மானங்களில் இரண்டு வருட கால அவகாசம் கொடுக்கின்ற முடிவை சுமந்திரன் அவர்களே எடுத்துக் கொண்டார். ஆனால் அந்த முடிவுகளை எடுப்பதற்கு வேறு கட்சிகள் யாருடனும் பேசவில்லை.
அந்த முடிவை தனியாக எடுத்தது மாத்திரமல்லாமல் அந்த முடிவு கூட்டமைப்பின் முடிவாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிற்பாக அது பிழையான முடிவென்றும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய ஏனைய கட்சிகள் தனித்தனியே அறிக்கை விடுகின்ற அளவுக்கு அந்த விடயம் நீடித்தது.

இதைப் போலவே பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் ஏனைய கட்சிகளை அழைத்துப் பேசாமல் சுமந்திரனும், சம்மந்தனும் கூட்டாக அல்லது தனித்தனியாக தாங்களே முடிவுகளை எடுத்து வருகின்ற போக்கை காணக்கூடியதாக இருக்கின்றது. இது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் மத்தியிலும் பரவலான பிரச்சனைகளை அல்லது நம்பிக்கையீனங்களை அது உருவாக்கியிருக்கின்றது.

தான் விரும்பியதை சுமந்திரன் செய்வதென்பது உண்மையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி விரும்பிய நிலைப்பாட்டைச் செய்வதாகவே நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே அவ்வாறு நாங்கள் பார்க்கின்ற போது சுமந்திரனின் செயற்பாடு என்பது ஈபிஆர்எல்எப் கட்சியாக இருக்கலாம் அல்லது ஏனைய கட்சிகளாக இருக்கலாம் பல்வேறுபட்ட விடயங்களை வலியுறுத்தி வந்தாலும் அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக தனித்து நின்று தாங்களாகவே முடிவெடுப்பதென்பது ஏனைய கட்சிகளை ஊதாசீனப்படுத்துவதாகும்.

இவையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான சுமந்திரன் போன்றொருடைய முயற்சியாகவே நான் நம்புகின்றேன். அதற்குப் பின்னால் அவரை நின்று இயக்குகின்றவர்கள் யார் என்றால் அது நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியாக அல்லது அதனுடைய தலைமைத்துவமாகத் தான் அது இருக்க முடியும்.

ஏனெனில் இந்த மண்ணில் நீண்டகால ஒரு யுத்தம் நடைபெற்றது. இந்த மண்ணில் நீண்டகால விடுதலைப் போராட்டம் நடந்தது. இந்த விடுதலைப் போராட்டத்திற்குமோ அல்லது இந்த யுத்தத்திற்குமோ சுமந்திரனுக்கு எந்தவித சம்மந்தமும் கிடையாது. அவர் கொழும்பிலே பிறந்து கொழும்பிலே வளர்ந்து கொழும்புச் சிந்தனைகளுடன் வாழக் கூடிய ஒருவர்.
ஆகவே, தமிழ் மக்கள் என்ன காரணத்திற்காக போராடினார்கள் ஏன் தனிநாட்டிற்காகப் போராடினார்கள் இன்று அதனைக் கைவிட்டு வருகின்ற போது உயர்ந்த பட்சம் ஒரு சமஷ்டி அரசமைப்பை கோருகின்றார்கள் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பதனை விட சிங்கள சமூகத்தை திருப்திப்படுத்தினால் போதும் என்ற பல்வேறு பேச்சுக்கள் சொல்லப்படுகின்றன.

சிங்கள சமூகத்தை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பது. அது தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தா திருப்திப்படுத்துவது என்ற கேள்வியும் எழுகின்றது. இங்கு நாங்கள் பலவற்றை எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்தும் விட்டுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதே போல சமஷ்டியை எடுத்துக் கொண்டால் கூட அங்கு சமஷ்டி விடயங்கள் தொடர்பிலும் பேசப்படவில்லை. எங்களுக்கு பெயர்கள் முக்கியமில்லை. உள்ளுக்கு இருக்கக் கூடிய விடயங்கள் தான் முக்கியம் என்று கூறி எல்லா விடயத்தையும் விட்டுக் கொடுக்கின்றதையும் நாங்கள் பார்க்கின்றோம்.

ஆகவே இங்கு அரசாங்கத்திற்கு என்ன என்ன விருப்பங்களோ அந்த விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய ஒரு நபராக தான் செயற்படுகின்றார். அதன் பின்னர் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துப் போவதாக யாருடனும் பேசாது சுமந்திரன் அவர்கள் உடனடியாகவே அதற்கான பதிலை தாமாகவே வழங்கியும் விடுகின்றார்.

அந்தளவிற்கு அரசாங்கத்தின் விசுவாசியாக அரசாங்கத்திற்கு சேவை செய்பவர்களாக தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்தையும் ஒருபுறம் தள்ளிவிட்டு அரசின் விருப்பம் என்னவோ அதனையும் அரசதரப்பினர்;களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பாணியில் மாத்திரம் செயற்படுகின்ற ஒரு போக்கை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

ஆகவே, இதனை ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற பொழுது இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்கெனவே பாரிய விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த விரிசல்களை இன்னும் உக்கிரப்படுத்துகின்ற வேலையைத் தான் சுமந்திரன் அவர்கள் தன்னுடைய நடவடிக்கைகள் மூலமாகச் செய்து வருகின்றார். ஆகவே என்னைப் பொறுத்தவரையில் த.தே.கூ உடைப்பதற்கான ஒரு கைப்பொம்மையாக சுமந்திரன் அரச தரப்புக்களால் பாவிக்கப்படுகின்றார் என்பது மறுக்க முடியாத உண்மையாகவே கருதுகின்றேன்” என்றார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .