2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'பாட நூல்களில் தமிழர்களது வரலாறுக்கு பாரபட்சங்கள் நிகழாது'

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை வரலாற்றுப் பாட நூல்களில் இந்நாட்டு தமிழ் மக்களது வரலாறுகள் மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் வரலாறுகள் எழுதப்பட்டிருப்பதையும், சிங்கள மொழியில் எழுதப்படுகின்ற வரலாற்று பாடங்களே தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்படுவதையும், தமிழ் வரலாற்று வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்தோர் மொழி பெயர்ப்பாளர்களாகவும், எழுத்துப் பிழைகளை ஒப்பு நோக்குவோராகவும் பயன்படுத்தப்பட்டு வருவதையும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரிய தரப்பினரின் அவதானத்துக்குக் கொண்டு வந்த நிலையில், இவ்விடயம் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனின் தலைமையிலான கலந்துரையாடலொன்று ஏற்கெனவே நடத்தப்பட்டிருந்தது.

மேற்படி கலந்துரையாடலின் தொடர்ச்சியாக கடந்த 21ஆம் திகதி கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான தமிழ் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், துறை சார் வல்லநர்களுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, மேற்படி விடயம் தொடர்பில் சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம், பாடசாலை பாட நூல்களில் எமது வரலாற்று பாடங்களைத் தயாரிக்கும்போது, தமிழ் வரலாற்று வல்லுநர்களை பங்காளிகளாக இணைத்துக் கொள்வதென்றும், தமிழ், முஸ்லிம் மக்ளது தனித்துவங்களையும், தேசிய நல்லிணக்கத்தையும் பேணுகின்ற வகையில் பாடங்கள் தயாரிக்கப்படுமென்றும், சிங்கள மொழியில் எழுதப்படுகின்ற பாடங்களை மொழி பெயர்ப்புச் செய்யாது, தமிழ் மொழியில் தனியாக பாடங்கள் எழுதப்படும் என்றும், இதற்கென தமிழ், சிங்கள வரலாற்று வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இணக்க ரீதியிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென்றும் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுவரை காலம் நிலவிவந்த பாடசாலை வரலாற்று பாடநூல்கள் தொடர்பிலான தமிழ் மக்களது வரலாற்று உண்மைகள் புறக்கணிப்பு நிலையானது ஒரு முடிவுக்கு வந்துள்ள அதே நேரம், எமது நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கிடையே தனது கருத்துகளாலும், செயற்பாடுகளாலும் தொடர்ந்து நல்லுறவைப் பேணி வருகின்ற டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலையீடு காரணமாகவே, இது சாத்தியமானது என்றும் தமிழ் வரலாற்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், மேற்படி கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா,

“எமது பிரச்சினைகளின் நியாயங்களை உரிய முறையில் ஏனைய தரப்பினரிடம் எடுத்துச் செல்வதன் ஊடாகவே அந்தப் பிரச்சினைகளை சுமுகமாகவும், நிரந்தரமாகவும் தீர்த்துக் கொள்ள முடியும். அதைவிடுத்து, வெறும் அரசியல் சுய இலாபங்களுக்காக எமது பிரச்சினைகளை முன்வைத்து பிரசாரப்படுத்திக் கொண்டு மாத்திரம் இருப்பதில் எந்தவிதப் பயனும் கிட்டப் போவதில்லை.

கடந்த காலங்களில் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் எம்மால் இந்த வழிமுறைகளிலேயே தீர்க்கப்பட்டன. ஆனால், அப்போது தீர்க்கப்படாதுபோன சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சுமுகமான நிலை நாட்டில் தற்போது உருவாகியிருக்கிறது.

எனவே, இச் சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான் நான் தற்போது செய்து வருகின்றேன். இனிவரும் காலங்களில் தமிழ் மக்களது மட்டுமல்லாது முஸ்லிம் மக்களதும் உண்மை வரலாறுகள் பாடசாலை பாட நூல்களில் இடம்பெறக்கூடிய நிலை தற்போது ஏற்படத்தப்பட்டுள்ளது.

இதற்கு துறைசார் வல்லுநர்கள் தங்களது முழுமையான பங்களிப்புகளை வழங்க முன்வர வேண்டும்.  அந்த வகையில் மேற்படி முயற்சிக்கு பெரிதும் ஒத்துழைப்புகளை வழங்கிய கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் தேசிய கல்வி நிறுவக உதவிப் பணிப்பாளர் சுமனரத்ன தேரர் உள்ளிட்ட கல்வி அமைச்சின் அனைத்து அதிகாரிகளுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .