2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'இரண்டு வருடங்களில் பெருமளவு காணிகள் விடுவிப்பு'

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளை விடுவித்து தங்களை மீளக்குடியமர்த்துமாறு, யாழ். வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வலிகாமம் வடக்கிலிருந்த இடம்பெயரந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் யாழில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் மேற்படி பணியகத்தின் தலைவியுமான சந்திரிகா, யாழுக்கு இன்று (25) வருகை தந்திருந்தார்.

இதன்போது தெல்லிப்பழை வீமன்காமம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து அங்கிருந்த மக்களைச் சந்தித்தும் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போதே, அங்கிருந்த மக்கள், முன்னாள் ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாங்கள் எங்கள் சொந்தக் காணிகளிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம். யுத்தம் முடிவடைந்து எட்ட வருடங்கள் நிறைவுறும் நிலையிலும் தற்போதும் எங்கள் காணிகளில் படையினர் நிலை கொண்டுள்ளனர்.

இந்நிலையில், எங்கள் காணிகளை விடுவித்து எங்களை எங்கள் சொந்தக் காணியில் மீள்குடியமர்த்துமாறு நாங்கள் தொடர்ச்சியாக கோரி வருகின்றோம். இங்கு வந்த எம்மைச் சந்தித்திருந்த ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறுமாதகாலத்துக்குள் காணிகளை விடுவித்து எங்களைக் குடியேற்றுவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

ஜனாதிபதி வாக்குறுதி வழங்கி 2 வருடங்கள் முடிவடைந்திருக்கின்ற நிலையிலும் எங்கள் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் நாம் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கின்றோம். ஆகவே, எமது காணிகளில் இருக்கின்ற படையினரை வெளியேற்றி எங்கள் நிலஙகளை எங்களிடமே மீட்டுத் தந்து எம்மை மிள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் சந்திரிகாவிடம் கோரினர்.

இதற்குப் பதிலளித்த சந்திரிகா, "கடந்த இரண்டு வருடத்தில் நாங்கள் பெருமளவு காணிகளை விடுவித்திருக்கின்றோம். ஆனாலும், சுமார் ஆறாயிரம் ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றது. அவற்றையும் விடுவிக்க நாங்கள் முயற்சிகளை எடுப்போம்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .