2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ‘முட்டாள்தனமே காரணம்’

Kogilavani   / 2017 மார்ச் 26 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அரிசி விலையும் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கின்றமைக்கு, அரசாங்கத்தின் முட்டாள்தனமான முடிவுகளும் கவனமின்மையுமே காரணம் என, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  

காலியில் சனிக்கிழமை நடைபெற்ற, பெரலியக்க பெரமக என்ற, ஒன்றிணைந்த எதிரணியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

“45 தொடக்கம் 60 ரூபாய்க்கு, உங்களுக்கு இப்போது அரிசி கிடைக்கிறதா, தற்போது அது, 110 - 130 ரூபாய். இந்த நிலைமை, ஏன் வந்தது? நாட்டில், வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்தது?” என்று கேள்வியெழுப்பிய அவர், அரசாங்கத்தின் கவனயீனம் காரணமாகவும் விவசாயம் தொடர்பாக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முட்டாள்தமான முடிவுகளாலேயுமே, இந்நிலை ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.  

இந்த நிலை காரணமாக, அரிசியுடன் வரும் கப்பலை எதிர்பார்த்து, துறைமுகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை, தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

அரசாங்கம், நாட்டின் சட்டத்தை வளைப்பதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், விமல் வீரவன்சவுக்கு, பிணை கிடைக்காமை குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.  

“சட்டம் தற்போது, உதவியற்றது. விமல் வீரவன்சவுக்கு, இன்னும் பிணை கிடைக்கவில்லை. சிறைச்சாலையில் அவர் உள்ளார். அரசாங்கம், எதை எதிர்பார்க்கிறது?  

“நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு, சிறைச்சாலை ஆகியன, நாட்டை ஆள வேண்டுமென அரசாங்கம் நினைக்கிறது. அனைவரையும் சிறைச்சாலையில் அடைத்துவிட்டு, நாட்டை ஆள விரும்புகின்றனர். இது, குழப்பத்தை ஏற்படுத்துமென்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை” என்று, அவர் குறிப்பிட்டார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X