2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இந்திய தேர்தல் ஆணையத்தின் ‘இரட்டை’ இலை தீர்ப்பு

Administrator   / 2017 மார்ச் 27 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் நடைபெறும் ஆர்.கே நகர் சட்டமன்றத் தேர்தல் மிகவும் பரபரப்பான களத்துக்கு வந்து விட்டது. குறிப்பாக 
அ.தி.மு.கவின் ‘இரட்டை இலை’ சின்னம், தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு, இடைத் தேர்தல் களம் இரட்டிப்பு பரபரப்பில் சிக்கிக் கொண்டுள்ளது.  

 புதிய சின்னங்களாக தொப்பியும் இரட்டை மின் விளக்கும் ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதியில் ‘புதுமுகங்களாக’ உலா வந்து கொண்டிருக்கிறன.

இது, இடைத் தேர்தல் என்றாலும், அனைத்து அரசியல் கட்சிகளின் செல்வாக்கு என்ன என்பதைக் குறிப்பாக அ.தி.மு.கவுக்குள் இருக்கும் மூன்று அணிகளில் எந்த அணி உண்மையான அ.தி.மு.க என்பதை பகிரங்கமாக அறிவிக்கும் தேர்தலாக இருக்கப் போகிறது.  

இரட்டை இலைச் சின்னம், 1989 இல் முடக்கப்பட்டது. பிறகு திரும்பப் பெறப்பட்டது. முடக்கப்பட்ட சின்னம் மீண்டும் கிடைத்த வரலாறு அ.தி.மு.கவுக்கு மட்டுமே உண்டு. 1991 இல் இருந்து இரட்டை இலைச் சின்னம் மறைந்த ஜெயலலிதாவின் வெற்றிக்கு உயிர்மூச்சாகத் திகழ்ந்திருக்கிறது.   

‘எம்.ஜி.ஆர் கண்டெடுத்த சின்னம்’, ‘எம்.ஜி.ஆர் அடையாளம் காட்டிய சின்னம்’ என்று அந்த இரட்டை இலைக்கு கிராம அளவில், தாய்மார்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பு உள்ளது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னம் எப்படி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளதோ, அந்த மாதிரி இரட்டை இலைச் சின்னமும் மிகப் பிரபலமான சின்னம். 

இந்தச் சின்னத்தை முடக்கி விட்டால் தினகரனின் வெற்றி தடுக்கப்பட்டு விடும் என்பது, ஓ. பன்னீர்செல்வம் அணியின் எண்ணம். அதனால்தான், “இரட்டை இலை எங்களுக்கே வேண்டும்” என்று கோரிக்கை வைத்தது.   

குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் முலயாம் சிங் யாதவுக்கும் அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கும் ஜனவரி மாதத்தில் பெரும் ‘கலாட்டா’ அரங்கேறியது. அதனால் அவர்களில் சமாஜ்வாடி கட்சியின் ‘சைக்கிள்’ சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. அந்த முறையீடு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் போனது.   

அப்போது முலயாம் சிங் யாதவின் வழக்கறிஞர்கள், “அகிலேஷ் யாதவ் கட்சி விதிகளின்படி தேர்வு செய்யப்படவில்லை” என்ற வாதத்தை, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்பு வைத்தார்கள்.

அகிலேஷ் யாதவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “எங்களிடம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எங்களுக்குத்தான் சின்னம் ஒதுக்க வேண்டும்” என்று வாதிட்டார்கள்.   

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட இந்திய தேர்தல் ஆணையம், “கட்சிக்குள் பிளவு வரும்போது, எந்த அணிக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் யார் பக்கம் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் போதும். கட்சி விதிகளைப் பார்க்க வேண்டியதில்லை.

இதுதான் கடந்த காலங்களில் உச்சநீதிமன்றம், சின்னம் தொடர்பான வழக்குகளில் அளித்த தீர்ப்புகளும் கூட” என்பது போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டி, “அகிலேஷ் யாதவுக்குத்தான் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுடையதுதான் உண்மையான சமாஜ்வாடிக் கட்சி; சைக்கிள் சின்னம் அவர்களுக்கே” என்று ஜனவரி 2017 இல் தீர்ப்பளித்தது.   

இதன்படி, சைக்கிள் சின்னத்தைப் பெற்ற அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து உத்தரபிரதேசத் தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது தனிக் கதை. 

ஆனால், இரண்டே மாதங்களுக்குள் இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.   

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு ஆஜரான ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள், “சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சி விதிகளின்படி அங்கிகாரம் பெற்றவர்கள் அல்ல” என்ற கோரிக்கையை முன் வைத்தது. அது மட்டுமின்றி, தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட ஆணையம் போன்றவை பரிந்துரைத்து, இன்னும் சட்ட வடிவம் பெறாத சில பரிந்துரைகளையும் சுட்டிக்காட்டி வாதிட்டார்கள்.   

அதேநேரத்தில், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் “கட்சி விதி பற்றித் தேர்தல் ஆணையம் ஆராய வேண்டியதில்லை. பெரும்பா​ன்மை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பெரும்பான்மைக் கட்சி நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆகவே கட்சியில் பிளவே வரவில்லை” என்று வாதிட்டது.   

அனைவரையும் திகைக்க வைக்கும் விதத்தில் கட்சி விதியையும் சட்ட பூர்வ அங்கிகாரம் கிடைக்காத பரிந்துரைகளையும் மேற்கோள் காட்டி, இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியிருக்கிறது. குறிப்பாக 20 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் ஆதாரங்களை சமர்பித்துள்ளார்கள்.   

சின்னம் தொடர்பான வழக்குகளில் இதுவரை கடைப்பிடிக்காத புதிய அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து, இந்தியத் தேர்தல் ஆணையம் என்ற அரசியல் சட்ட அமைப்பு கூறியிருப்பது, மற்ற அரசியல் கட்சிகளைக் கூட வியக்க வைத்துள்ளது.

“படித்துப் பார்க்க நேரம் வேண்டும்” என்று கூறி, இரட்டை இலைச் சின்னக் கோரிக்கையை இரு அணிகளுக்கும் எதிரான ஓர் உத்தரவை, சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாகக் கருதப்படும் இந்திய தேர்தல் ஆணையம், பிறப்பித்த ‘இரட்டை’ இலைத் தீர்ப்பு இந்திய வரலாற்றில் முதல் உத்தரவு என்றே கருத இடமிருக்கிறது.  

ஆகவே, எப்படியோ ஒரு வகையில் இரட்டை இலைச் சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 ஆம் திகதி நடைபெறும் இந்த இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நிற்கிறார்.   

அ.தி.மு.கவுக்குள் ‘சசிகலா அ.தி.மு.க’ சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் களத்தில் நிற்கிறார். மூன்றாவதாக மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார்.   

தினகரன் அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவின் அவைத் தலைவராக இருந்தவர் மதுசூதனன். இதில் தீபா மட்டும்தான் ஜெயலலிதாவின் இரத்த உறவு என்ற அடிப்படையில் தொகுதியில் வலம் வருகிறார்.

பா.ஜ.கவின் சார்பில் திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். சினிமா கவர்ச்சியை வைத்து ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுவிட முடியுமா என்ற முயற்சியில் தமிழக பாரதீய ஜனதாக் கட்சி இறங்கியுள்ளது.  

இரட்டை இலைச் சின்னத்தின் தாக்கத்தில் மட்டுமல்ல, அ.தி.மு.கவுக்குள் உருவாகியுள்ள மூன்று அணிகளின் விளைவாக அ.தி.மு.க வாக்கு வங்கி மூன்றாகச் சிதறுண்டு போகும் வாய்ப்புகள் உள்ளன. 

இதுவரையுள்ள நிலவரப்படி, அ.தி.மு.க வாக்கு வங்கிக்குள் ஓ.பன்னீர்செல்வம் அணி முதலாவதாகவும் சசிகலா அணி இரண்டாவதாகவும் தீபா அணி மூன்றாவதாகவும் வரும் என்று தெரிகிறது. அ.தி.மு.க வாக்குகள் பிளவு பட்டு நிற்பதால் தி.மு.க தற்போது முதல் இடத்தில் நிற்கிறது.   

ஆனால், இடைத் தேர்தல்கள் எப்போதும் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் நேர்மையாக நடப்பதில்லை. அதற்கு என்னதான் உத்தரவாதத்தை தேர்தல் ஆணையம் அளித்தாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் என்று ஆளுங்கட்சியின் பக்கமே வெற்றிக் காற்று வீசி வந்திருக்கிறது.  

அதைத் தடுக்கும் நோக்கத்துடன், குறிப்பாக ஆளுங்கட்சிக்கு இடைத்தேர்தல் சலுகைகள் ஏதும் கிடைக்க விடக் கூடாது என்பதால்தான் சசிகலா அ.தி.மு.கவுக்குள் சாதகமாக செயல்பட்டதாகச் சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளர் ஜோர்ஜ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.   

ஏற்கெனவே, ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பத்மஜா நீக்கப்பட்டு அவருக்குப் பதில் பிரவீன் நாயர் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த கட்டமாக, சசிகலா அ.தி.மு.கவினர் பணம் கொடுப்பதைத் தடுக்க, எதிர்கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.   

ஆனால், சசிகலா அணியின் வேட்பாளராக நிற்கும் தினகரனின் தேர்தல் ‘மனேஜர்கள்’ ஏற்கெனவே, வட்டாரம் ரீதியாக 1,000 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி என்ற அளவில் ‘வாக்கு சேகரிக்கும் படை’யை உருவாக்கி விட்டார்கள். இது எல்லாமே, 
ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.கவின் வாக்குகளை அதிகம் பெற்று விட்டால் வீணாகி விடும் என்பதே இன்றைய நிலை.  

தி.மு.கவின் வாக்கு வங்கியா? அல்லது அதிகாரபலத்துடன் பவனி வரும் தினகரன் அணியா என்ற கேள்விதான் ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் பவனி வருகிறது. ஜெயலலிதாவின் மரணம் மிக முக்கிய தேர்தல் பிரசாரமாக தொகுதிக்குள் சூடு பிடிக்கிறது.

ஆகவே, இப்போதைக்கு கோடை வெயிலின் தாக்கம் போல் ‘உதய சூரியன்’ சின்னம் 
தி.மு.கவுக்குப் பலமாக பவனி வருகிறது. அந்த வேட்பாளர் வீடு வீடாகப் பிரசாரம் செய்கிறார். கும்பிட்டும், காலில் விழுந்தும் வாக்குகளை கேட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.   

அதைத் தாக்குப் பிடிப்பேன் என்று, தொப்பியுடன் சசிகலா அணியைச் சேர்ந்த வேட்பாளர் தினகரன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இடைத் தேர்தல் வெற்றி தி.மு.கவுக்குத் தெம்பைக் கொடுக்கும். 

அ.தி.மு.கவுக்குள் உள்ள மூன்று அணிகளுக்குள் யாருக்கு மக்கள் செல்வாக்கு என்பதற்கு அவர்களுக்கு இடைத் தேர்தல் முடிவுகள் கை கொடுக்கும்.   

டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றால் ‘இரட்டை இலை’ மீண்டும் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஆட்சியில் அடுத்த கட்டக் குழப்பம் உருவாக இடைத் தேர்தல் வெற்றியே நுழைவு வாயிலாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .