2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜே.ஆர் வழி, குறுக்கு வழி

Administrator   / 2017 மார்ச் 27 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 85)

- என்.கே.அஷோக்பரன் LLB (Hons) 

பெரிதாக இனிக்காத வெற்றி  

1982 ஆம் ஆண்டின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றமை ஜே.ஆரின் திட்டத்தின் முதற்படி, வெற்றிகரமாக நிறைவேறியதையே குறிக்கிறது.   

முதலில் வரவேண்டியதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பதிலாக, தனது பதவிக்காலம் முடிய முன்பே ஜனாதிபதித் தேர்தலை நடத்தவதற்காக, அரசியலமைப்பில் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, அதில் வெற்றியும் பெற்றிருந்தார் ஜே.ஆர்.ஜெயவர்தன.   

ஆனால், இந்த வெற்றி அவர் பெரும் மகிழ்ச்சி கொள்ளத்தக்கதொரு மாபெரும் வெற்றியல்ல. 52.91 சதவீத வாக்குகளையே ஜே.ஆர் பெற்றிருந்தார். அதேவேளை, அவரது பிரதான போட்டியாளராக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேகடுவ 39.07 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.   

ஹெக்டர் கொப்பேகடுவ என்பவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மிகச் சிறந்த தெரிவு என்று சொல்வதற்குமில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டிருந்தார். அச்சூழலில், அவரது வாரிசுகளான அநுர பண்டாரநாயக்கவும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் சிறிமாவோவின் அஞ்ஞாதவாசத்தால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப, அதிகாரப் போட்டியில் இறங்கியிருந்தனர்.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் என்று அடையாளப்படுத்தக் கூடிய மைத்ரிபால சேனநாயக்கவும் இந்த அதிகாரப் போட்டிக்குள் சங்கமித்திருந்தார்.   

இச்சூழலில் இவர்களைத் தவிர்த்து சிறிமாவோவால் களமிறக்கப்பட்டவர்தான் ஹெக்டர் கொப்பேகடுவ. ஆகவே அவர், 39.07 சதவீத வாக்குகள் பெற்றமையானது மிகப்பெரியதொரு அடைவாகும்.   

ஜே.ஆர் 52.91 சதவீத வாக்குகள் பெற்றார் என்பது நாணயத்தின் ஒரு பக்கம். அவருக்கு எதிராக 47.09 சதவீத மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அந்த நாணயத்தின் மறுபக்கமாகும்.   

இந்தத் தேர்தலில், இந்த நாட்டு மக்கள் ஏறத்தாழ ஐந்து வருட ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் கொண்டிருந்த அதிருப்தியையும் பதிவு செய்திருந்தார்கள் என்பதும் மறுக்கமுடியாது.   

ஆகவேதான், இந்தத் தேர்தல் வெற்றியென்பது ஜே.ஆரைப் பொறுத்தவரையில் பெரிதாக மெச்சிக்கொள்ளத்தக்கதொன்று என்று சொல்ல முடியாது. ஆனால், ஜே.ஆரைப் பொறுத்தவரையில் அவர் நினைத்த காரியம் நடந்தேறிவிட்டது; அவரது தந்திரோபாய நகர்வு வெற்றியளித்துவிட்டது. அவருக்கு அது போதுமானதாக இருந்தது. அடுத்தகட்ட நகர்வுக்கு அவர் தயாராகிவிட்டிருந்தார்.  

ஜே.ஆரின் அடுத்த கட்ட நகர்வு  

ஜனாதிபதித் தேர்தலில் வென்றாகிவிட்டாயிற்று. 1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவுக்கு வருகிறது. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாத 5/6 பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றிருந்தது.   

இன்றைய சூழலில், அதுவும் தான் அறிமுகப்படுத்தியிருந்த 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் கீழமைந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் 5/6 பெரும்பான்மையை மீண்டும் பெறுவது சாத்தியமில்லை என்பதை ஜே.ஆர் நன்கறிந்திருந்தார்.   

ஒரே கட்சி நாடாளுமன்றத்தில் 5/ 6 பெரும்பான்மையைக் கொண்டிருப்பது என்பது அந்தக் கட்சி ஏறத்தாழ ஒரு நாட்டின் சர்வாதிகாரியாகச் செயற்படக்கூடிய வாய்ப்பை அளிக்கும். அதுவும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதியானவர் அதிகாரங்களின் குவியமாக வடிவமைக்கப்பட்டிருந்தார்.  

அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வைத்துப்பார்த்தால், உலகின் ஏனைய நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளைவிட 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ், ஜே.ஆர் உருவாக்கியிருந்த ஜனாதிபதியே, உலகில் பலம்மிக்க ஜனநாயக ஜனாதிபதியாக இருந்தார் என்று சில அரசறிவியல் அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள்.   

ஆகவே, இத்தகைய அதிகார பலத்தை இழப்பதற்கு ஜே.ஆர் தயாராக இருக்கவில்லை. இந்த 5/6 பெரும்பான்மையைத் தக்கவைக்க ஜே.ஆர் ஒரு தந்திரோபாய நடவடிக்கையை முன்னெடுத்தார்.   

அந்தத் தந்திரோபாயம் யாதெனில், மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போகாது அரசியலமைப்பில் மாற்றமொன்றைக் கொண்டுவந்து, சர்வசன வாக்கெடுப்பொன்றின் மூலம் அதற்கு அங்கிகாரத்தைப் பெற்று, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீட்டித்தலாகும். 

 சர்வசன வாக்கெடுப்பொன்றில் 50 சதவீதத்துக்கும் அதிகமான அங்கிகாரத்தைப் பெற்றாலே போதுமானது. ஜே.ஆரினால் அதனைப் பெற்றுக்கொள்வது சாத்தியம் என்பதை நடந்துமுடிந்திருந்த ஜனாதிபதித் தேர்தல் நிரூபித்திருந்தது.   

ஆகவே, 50 சதவீதத்துக்கும் அதிகமான அங்கிகாரத்தை மட்டும் பெற்று நாடாளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் இந்தத் தந்திரோபாயத்தை நிறைவேற்ற ஜே.ஆர். விளைந்தார்.   

இது கணநேரத்தில் ஜே.ஆரின் சிந்தையில் திடீரென்று உதித்த விடயமாக இருக்கமுடியாது. ஏனென்றால், இதற்கான சில அடிப்படைகள் ஏலவே நிறைவேற்றப்பட்டிருந்தன. 1978 ஆம் ஆண்டின், இரண்டாவது குடியரசு யாப்பு, சர்வசனவாக்கெடுப்பு என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது.   

அது நடத்தப்படுவதற்கான முறைகள் பற்றிக் குறிப்பிடும் சர்வசனவாக்கெடுப்புச் சட்டமானது, 1981லேயே நாடாளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆகவே, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போதே இதற்கான திட்டம் விதைக்கப்பட்டுவிட்டது என்றும் சொல்லலாம்.   

தலையசைத்த ஐ.தே.கவினர்  

நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் இந்தத் திட்டம் ஜே.ஆரின் அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினாலும் அங்கிகரிக்கப்பட்டது. 1982 ஒக்டோபர் 28 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு முன்வைக்கப்பட்டது.   

மீண்டும் பொதுத் தேர்தலின்றித் தமது பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதை பதவியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிப்பதற்கு ஜனநாயகத்தின் தாற்ப ரியத்தை மதித்தல் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்கமுடியாது.   

பதவியா? ஜனநாயகம் எனும் தாற்பரியமா என்றால், நடைமுறைச் சூழலில் பதவியே முக்கியத்துவம் பெறுகிறது. ஆகவே, இந்தத் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

1983 ஓகஸ்ட்டில் நிறைவு பெறும் இந்தப் நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு, அதாவது 1989 ஓகஸ்ட் வரை நீட்டிப்பதற்கு அமைச்சரவையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழுவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழுவும் அங்கிகாரம் வழங்கியிருந்தது.   

ஆனால், இந்த நகர்வுக்குள் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயத்தையும் ஜே.ஆர் உள்ளடக்கியிருந்தார். அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் திகதியிடப்படாத பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிடம் கையளிக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனை முன்வைக்கப்பட்டது.   

தேவையேற்படின் குறித்த கடிதங்களுக்கு திகதியிடப்பட்டு வலுவளிக்கும் எண்ணம் இருப்பதாக ஜே.ஆர் தெரிவித்திருந்தார். இந்த நிபந்தனையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினால் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.   

ஜே.ஆர் ஜனநாயக தார்ப்பரியத்துக்கு எதிராக, குறுக்கு வழியில் அதிகாரத்தைத் தக்க வைக்க விளைகிறார் என்ற விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன. ஒரு சர்வாதிகாரியாக ஜே.ஆர் மாறுவதாக எதிர்க்கட்சிகள் சாடின. ஜே.ஆர் இவை எதனையும் பொருட்படுத்தவில்லை.   

அமைச்சரவையின் அங்கிகாரம் பெறப்பட்டதும், நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் குறித்த முயற்சியானது, அரசியலமைப்புக்கான நான்காவது திருத்தமாக, அவசர மசோதாவாக அன்றைய பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.  

குறித்த நான்காவது திருத்தமானது, முதலாவது நாடாளுமன்றம் பற்றிக் குறிப்பிடும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 161 ஆம் சரத்திலே, முதலாவது நாடாளுமன்றமானது, முன்னரே கலைக்கப்பட்டாலன்றி 1989 ஓகஸ்ட் நான்காம் திகதி வரை தொடரும் என்ற விடயத்தை சேர்ப்பதாக அமைந்தது.   

அரசியலமைப்புக்கான இந்த நான்காம் திருத்தத்தை நாடாளுமன்றத்திலே முன்வைத்து உரையாற்றிய பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, 1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலிலே, இந்த நாட்டின் மக்கள் 1977 ஜூலைக்குப் பின்னர் ஒரு சுபீட்சமான, நீதியும் சுதந்திரமும் மிக்க சமூகத்தை கட்டியெழுப்ப எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் முயற்சிகள் தொடர்பில் தமது தொடர் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  

ஆகவே இலங்கை மக்களின் முன்னேற்றத்துக்கும், முற்செல்லுகைக்கும், அவர்களது அபிலாஷைகள் நிஜமாவதற்கும் அத்தியாவசியமான இந்த முயற்சிகள் தொடர்வதற்கு ஸ்திரத்தன்மை அவசியமாகும். அந்த ஸ்திரத்தன்மைக்கு இன்னொரு பதவிக்காலம் அவசியமாகிறது. அதன் பொருட்டே அரசியலமைப்புக்கு இந்த நான்காம் திருத்தம் முன்வைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.  

 உயர் நீதிமன்றின் தீர்மானம்  

குறித்த திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதுடன், சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் இலங்கை மக்களின் அங்கிகாரத்தைப் பெற்று, அதன் மூலம் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நிறைவேற்றுவதே ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது.   

நாடாளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையுடன் குறித்த திருத்த மசோதாவை நிறைவேற்றுவது ஒரு பிரச்சினையே இல்லை.

சர்வசனவாக்கெடுப்பு, கொஞ்சம் சவாலானது எனினும், ஜனாதிபதித் தேர்தலில் 52.91 சதவீத வாக்குகள் பெற்றுக்கொண்ட நிலையில், 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை சர்வசனவாக்கெடுப்பில் பெறுவதும் பெரும் சவாலாக இருக்காது என்ற நம்பிக்கையில்தான் ஜே.ஆர் இக்கைங்கரியத்தை முன்னெடுத்தார்.   

அன்றைய 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 122 ஆம் சரத்தின் கீழ், குறித்த அவசர மசோதாவின் அரசியலமைப்பு பொருத்தப்பாட்டினை அறிய ஜனாதிபதியினால் உயர் நீதிமன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அரசியலமைப்பின் அதே சரத்தின் கீழ், உயர் நீதிமன்றானது குறித்த மசோதா பற்றிய தன்னுடைய தீர்மானத்தை 24 மணித்தியாலங்களுக்குள் அல்லது மூன்று நாட்களுக்கு மேற்படாத, ஜனாதிபதி குறிப்பிடும் காலவரையறைக்குள் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கும் கடப்பாட்டைக் கொண்டிருந்தது.   

ஆகவே இந்த அரசியலமைப்புக்கான நான்காவது திருத்தமானது, உயர் நீதிமன்றின் விசேட தீர்மானத்துக்காக வந்தபொழுது, உயர் நீதிமன்றின் முன் ஆஜரான அன்றைய சட்ட மா அதிபர் சிவா பசுபதி, “அரசியலமைப்புக்கான குறித்த திருத்தமானது நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடனும் அத்தோடு இலங்கை மக்களால் சர்வசனவாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் நிறைவேற்றப்படுமானால், அதன் மீது உயர் நீதிமன்றத்துக்கு சட்ட அதிகாரம் (jurisdiction) இல்லை” என்று வாதிட்டார்.  

இந்த வாதம் முன்வைக்கப்பட்ட போது, குறுக்கிட்ட அன்றைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன், “உயர் நீதிமன்றத்துக்கு அவ்வாறு சட்ட அதிகாரம் இல்லையெனில், இது உயர்நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டது ஏன்” என்று வினாவினார்.  

அதற்குப் பதிலளித்த சட்ட மா அதிபர் சிவா பசுபதி, “அரசியலமைப்பின் 122 ஆவது சரத்தின் கீழ் இது உயர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியம்” என்று கூறினார்.

அதன்போது, “நான் என்னதான் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்” என்று பிரதம நீதியரசர் கேள்வியெழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த சட்ட மா அதிபர் சிவா பசுபதி, “உயர் நீதிமன்றானது, அதற்கு சட்ட அதிகாரம் இல்லை” என்று கூற வேண்டும் என்று தனது வாதத்தை முன்வைத்தார்.   

தனது கட்டுரையொன்றில் இந்த உரையாடலை மேற்கோள் காட்டும் கலாநிதி ராஜன் ஹூல், இதனைத் ‘தேசத்தின் முக்கியத்துவம்மிக்க விடயம், ஒரு கறுப்பு நகைச்சுவை விளையாட்டாக மாறிவிட்டது’ என்று கருத்துரைக்கிறார்.   குறித்த அரசியலமைப்புக்கான நான்காம் சரத்தினை எதிர்த்து சீ.வீ. விவேகானந்தன் சார்பில் சட்டத்தரணி எஸ்.கனகரட்ணமும் தன்னுடைய சார்பில் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் வாதிட்டனர்.   

தேர்தலை நடத்தாது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை இவ்வாறு நீடித்தலானது, அரசியலமைப்பின் செயற்பாட்டுக்கு குந்தகமாக அமையும் ஒரு விடயமாகும். அரசியலமைப்பின் செயற்பாட்டை தடுக்கும் எந்த சட்டத்தையும் நாடாளுமன்றம் உருவாக்காது என்று அரசியலமைப்பின் 75 ஆம் சரத்து குறிப்பிடுகிறது. 

ஆகவே நாடாளுமன்றத்தினால் அரசியலமைப்பின் செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் நான்காம் சீர்திருத்தத்தை நிறைவேற்றும் அதிகாரம் இல்லை என்று பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க வாதிட்டார்.  

ஏழு நீதியரசர்கள் இந்த விடயத்தை ஆராயும் அமர்வில் இருந்தார்கள். அவர்களிடையே இந்த விடயம் தொடர்பில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இறுதியில் உயர்நீதிமன்றமானது 4:3 என்ற பெரும்பான்மையில் நான்காம் திருத்தத்துக்கான பச்சைச் சமிக்ஞையை வழங்கியது.   

(அடுத்த வாரம் தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .