2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விசேட தேவையுடையோரின் பிரச்சினைகள்: சர்வரோக நிவாரணியா அரசியல் தீர்வு?

Administrator   / 2017 மார்ச் 27 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கருணாகரன்

நோர்வேயிலிருந்து சஞ்சயன் செல்வமாணிக்கம் என்பவர் தொடர்புகொண்டு, “வன்னியில் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட கொஞ்சப்பேருக்கு உதவிகளைச் செய்யச் சிலர் விரும்புகிறார்கள். உடல் பாதிப்புக்குள்ளான சிறார்களைப் பராமரிக்கும் அமைப்பு அல்லது, கூடுதலான பாதிப்பைச் சந்தித்துள்ள சிலரைத் தெரிவு செய்து தரமுடியுமா?” எனக் கேட்டார்.

ஏற்கெனவே, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலிருக்கும் முன்னாள் போராளிகள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு நண்பர்களுடன் இணைந்து, சஞ்சயன், உதவிகளைச் செய்திருக்கிறார்.

அந்தப் பணிகளின்போது, படுவான்கரைப் பிரதேசத்தில் அவர் பார்த்த, அறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு “படுவான்கரை” என்றொரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

போர் சிதைத்த மனிதர்களின் மெய்க்கதைகளைக் கொண்ட உண்மைப் பிரதி அது. அந்தப் புத்தகம், படுவான்கரையின் மீது கவனத்தை உண்டாக்கி, உதவிப் பணிகளுக்கு ஏராளமானவர்களை ஊக்குவித்தது.

நோர்வேயிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வரும்போதெல்லாம், இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது காரியத்தைச் செய்வது, அவருடைய வழமை. சஞ்சயனைப் போன்ற புலம்பெயரிகள் பலர், தங்களுடைய விடுமுறைக்காலத்தில் இலங்கைக்கு வந்து, வடக்கு - கிழக்கிலே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.

ஆனால், “பெரும்பாதிப்பைச் சந்தித்து, பெரிய வரண்டு, காய்ந்த  நிலத்தைப்போன்றிருக்கும் சமூகத்துக்கு, இந்த உதவிகள் எல்லாம் சிறிய மழைத்துளியே. இந்தச் சிறிய மழைத்துளியால், இந்தப் பெரும் வரட்சியைப் போக்க முடியுமா?” என்று சிலர் கேட்கிறார்கள்.

அவர்களுடைய கேள்வியிலும் நியாயமுண்டு. ஏனென்றால், போர் முடிந்து ஏழு ஆண்டுகள் முடிகின்றன. இந்த ஏழு ஆண்டுகளிலும் அரச, அரச சார்பற்ற மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவிகளும் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்புகளும் எல்லாம் கிடைத்தும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், இன்னும் மீளமுடியாப் பேரவலத்துள்ளேயே இருக்கிறார்கள்.

இப்படியிருக்கும்போது, இந்தப் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முறையாகத் திட்டமிடப்படாமல், இப்படிச் சிறிய சிறிய உதவிகளைச் செய்வது, வரண்ட மணலில் விழும் மழைத்துளியைப்போல காணாமலே போய்விடும் என்பது உண்மையே. ஆனால், சிறுதுளிதான் பெரு வெள்ளம் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.  

புலம்பெயர்ந்தவர்களின் இத்தகைய பங்களிப்புகளுக்கு, வரலாற்று முக்கியத்துவமும் சிறப்பும் உண்டு. போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர், கஞ்சியாவது இன்று குடிக்கிறார்கள் என்றால், அதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தவர்கள் புலம்பெயரிகளே.

தனியாகவும் கூட்டாகவும் இந்தப் பங்களிப்புகள் நடந்திருக்கின்றன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதை முறைப்படுத்தியிருந்தால், இந்தப் பயன், மிகச்சிறப்பானதொரு வாழ்க்கையை,  மீள்நிலையை அந்த மக்களுக்குக் கொடுத்திருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக தமிழ் அரசியல் நடத்தைகள், அதற்கான வாய்ப்பைச் சிதறடித்து விட்டன. அரசாங்கமும் இதில் சரியாக நடந்து கொள்ளவில்லை. இது தனியாக, விரிவாக, அவசியமாக ஆராயப்படவேண்டியது.

அரசாங்கத்துடன் நெருங்க முடியாத ஒரு முரண்வெளியை, புலம்பெயர் சமூகமும் புலம்பெயர் சமூகத்துடன் நெருங்க முடியாத இடைவெளியை அரசாங்கமும் கொண்டிருப்பது மிகமிகப் பாதிப்பானது. இதற்குக் காரணம், முரண்நிலை அரசியலே. மக்களின் நிலைமையைப் புரிந்து கொள்ள மறுக்கும், மக்களுக்கு அப்பாலான, யதார்த்தத்துக்குப் புறம்பான அரசியல் தீர்மானங்கள், இந்த இடைவெளியை உருவாக்கியுள்ளன.   

இப்படியே சிக்கலடைந்திருக்கும் அரசியல் பிளவுகளினால், பாதிக்கப்பட்ட மக்களே மேலும் பாதிக்கப்படுகின்றனர். இருந்தும், இதையெல்லாம் கடந்து, தங்களால் முடிந்த அளவுக்குச் சாத்தியமான வழிகளில் புலம்பெயரிகள் உதவிக்கொண்டிருக்கின்றனர். 

இந்த உதவிகள், பல வகையிலானவை, பல்வேறு தரப்பினாலானவை. இவற்றை, இந்தச் சிறிய பத்தியில் பட்டியல்படுத்துவது சாத்தியமில்லை.

சஞ்சயன், நோர்வேயிலிருந்து கொண்டே இந்தப் பத்தியாளரை சற்று முன் தொடர்பு கொண்டு பேசினார். தங்கள் உதவித்திட்டத்தின் வழியாக, மேலும் ஒரு தொகுதியினருக்கு உதவுவதற்குத் தாம் விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால், இந்தத் தடவை அவர் கேட்டது, மாற்றுத்திறனாளிகளுக்கு அல்லது சிறார்களுக்கு உதவுவதைப் பற்றி.

கடந்த மாதமும் அவர்கள் இதைப்போல இன்னோர் உதவியைச் செய்திருந்தனர். அப்போது கேப்பாப்புலவு  - பிலவுக்குடியிருப்பு மக்கள், போராடிக்கொண்டிருந்தனர். “அவர்களுடைய போராட்டத்துக்குத் தமது பங்களிப்பாக எத்தகைய உதவிகளைச் செய்யலாம்? என்ன மாதிரியான உதவிகள் தேவை?”  எனக் கேட்டனர்.

இது தொடர்பாக பிலவுக்குடியிருப்பு மக்களிடம் பேசியபோது, “எங்களுக்கு இப்போது எந்த உதவிகளும் அவசியமாக இல்லை. எங்களுடைய காணிகள் மீட்கப்படுவதே இன்று முக்கியம். அந்தக் காணிகள் மீட்கப்படுவதற்கான எங்களுடைய இந்தப் போராட்டத்துக்குத் தார்மீக ஆதரவைத் தந்தால், அதுவே போதும்.

காணிகளை மீட்டுக்கொண்டு, அந்தக் காணிகளில் நாங்கள் குடியேறும்போதுதான், எங்களுக்கான உதவிகள் அதிகமாகத் தேவைப்படும். அப்போது அதைச் செய்யுங்கள்” என, அந்த மக்கள் கூறினார்கள்.

இந்தத் தகவலை சஞ்சயனின் தரப்புக்கு நாம் சொன்னோம். அவர்கள் தாம் சேர்த்துக் கொண்ட பணத்தை, சேகரிப்பில் வைத்திருந்தனர்.

பிலவுக்குடியிருப்பு விடுவிக்கப்பட்டு, அங்கே அந்த மக்கள் மீளக்குடியேறியபோது அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று, தண்ணீர்ப் பிரச்சினை. இந்த நிலையில் சஞ்சயனின் தரப்பினர், அங்கே ஒரு கிணற்றினை அமைத்துக் கொடுப்பதற்கு தங்களிடமிருந்த நிதியை வழங்கினார்கள்.

அந்த வகையில், அடுத்த கட்டமாக இன்னொரு வகையில் இந்த உதவியைச் செய்ய இந்த புலம்பெயர் நண்பர்கள் முன்வந்திருக்கிறார்கள். மனமிருந்தால் இடமுண்டு என்பது உண்மையே. மனதில் இடமிருந்தால், உதவும் கரங்களை எங்கே இருந்து கொண்டும், எந்தப் பகுதிக்கும் நீட்டிக் கொள்ள முடியும்.

இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளைச் செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் எப்படியானவர்களுக்கான உதவி என்பதும் என்ன வகையான உதவி என்பதுமே, இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

மாற்றுத்திறனாளிகளாக இருப்போரில், மிகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதே இந்த உதவியாகும். இதை முறைப்படுத்திச் செய்வதற்கு, பெருந்தொகை நிதியும் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட திட்டமிடலும் கட்டமைப்பும் தேவை. சஞ்சயன் போன்ற தனி ஆர்வம் கொண்ட சிறிய குழுவினரால், இது முழுமைப்படுத்தக்கூடியதல்ல.

ஆனாலும், இது ஒரு தொடக்கமாக அமையலாம். முடிந்தவரையில் சிலருடைய அவலத்தையாவது தீர்க்கலாம். அந்த அடிப்படையில் இப்போது மேற்கத்தேய பாணியிலான (கொமட்) மலசலகூடத்தை அமைத்துக் கொடுப்பதற்கு, இந்த நண்பர்களின் உதவிகள் பயன்படவுள்ளன. இதை விரிவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்தப் பத்தி கவனம் செலுத்துகிறது.

உலகிலேயே மிகப்பெரிய பிரச்சினை, சாப்பிடுவதற்கும் மலங்கழிப்பதற்கும் வழியில்லாமல் இருப்பதாகும். இது இரண்டுக்கும் வழியில்லாமல் இருப்பவர்களே, மிகக் கொடுமையான சூழலில் வாழ்கின்றவர்கள்.

போரினால் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு, குந்தியிருந்து மலங்கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றவர்களாக, சுமார் 12,760 பேர் இருக்கிறார்கள். இது, மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் புள்ளிவிவரம். இதில் இரண்டு கால்களும் இல்லாதவர்கள், இரண்டு கைகளும் இல்லாதவர்கள், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் நிலை, மிக மோசமானது.

இவர்களுக்குத் தனியான ஏற்பாடுகள் தேவை. ஒட்டுமொத்தத்தில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே, மேற்கத்தேயப் பாணியிலான மலசலகூடங்கள் உள்ளன. ஏனையவர்களுக்கு இந்த வசதி கிடையாது. இதனால் இவர்கள், தினமும் படுகின்ற சிரமம் சாதாரணமானதல்ல. ஆனால், இதைப்பற்றி இன்னும் யாரும் முறையாகச் சிந்தித்ததில்லை.

சில தொண்டர் அமைப்புகள், மிகச் சிறிய அளவில் சிலருக்கு “கொமட்”  வசதியுடைய மலசலகூடங்களை அமைத்துக் கொடுத்திருக்கின்றன. ஏனையவர்கள், பிளாஸ்டிக் கதிரையை வெட்டி, அதையே சாதாரண மலசலகூடத்தில் வைத்து, தற்காலிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இது, ஆபத்துகள் நிறைந்தது. எந்த மருத்துவரும் இந்த முறையைச் சிபாரிசு செய்யவில்லை. இதேவேளை, வடக்கு மாகாணசபை, கொமட் வசதியுடைய மலசல கூடங்களை அமைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுக்கப்போவதாக அறிவித்திருந்தது. முதலமைச்சரின் நிர்வாகம் நேரடிக் கவனமெடுத்து, இதற்கான விவரங்களும் திரட்டப்பட்டது.

இதன்படி, இதுவரையில் 298 மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒரு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரம் ரூபாய், ஒரு மலசல கூடத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இதைப்பெறும் பயனாளி தரப்பு நாற்பது ஆயிரம் ரூபாயைப் பங்களிப்பாகச் செய்ய வேண்டும். மொத்தமாக 162,000 ரூபாய் மதிப்பிடப்பட்ட திட்டம் இது.

இந்தத் திட்டத்தின்படி, இன்னும் 240 மலசல கூடங்களுக்கு, முதற்கட்டக் கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, 1,000 வரையான மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்கான திட்டமிடல் உண்டென்று தெரிவிக்கப்படுகிறது.

இது வரவேற்கப்படவேண்டியதே. ஆனால், இதை முழுமையாகச் செய்து கொடுப்பதே சிறப்பானது. குறிப்பாக, பயனாளிகளின் பங்களிப்பை இதில் எதிர்பார்க்காமல், முழுமையான நிர்மாணப் பொறுப்பை மாகாணசபை எடுத்திருக்க வேண்டும்.

இந்தப் பயனாளிகளின் பங்கேற்பு என்ற நிலைப்பாட்டினால், ஒவ்வொரு பயனாளரும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டவாறே உள்ளனர். ஏற்கெனவே உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உழைப்பு, வருமானம் போன்றவற்றைச் சீராகப் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர்.

இப்படியிருக்கும்போது, இதற்கான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றால், அவர்களால் என்னதான் செய்ய முடியும்? இதைப் பற்றி ஒவ்வொரு பயனாளியும் கவலையே தெரிவிக்கின்றனர்.

இதைப்பற்றி, எங்களுடைய நிலையைப் பற்றி யாரிடமாவது சொன்னால்,  “அரசியல் தீர்வு கிடைத்தால், எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் எண்டு சொல்லுகினம். அரசியல் தீர்வு வாற வரைக்கும், கக்கூசுக்குப் போகாமல் இருக்க முடியுமோ?” என்று, ஒரு மாற்றுத்திறனாளி கவலையோடு சொன்னார்.  

இந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள வலி, சாதாரணமானதல்ல. அது, மிக வலியது. இதை நமது சமூகம், உணர்ந்து கொள்ள வேண்டும். மிகச் சிறிய, எளிய தேவை ஒன்றை, பாதிக்கப்பட்ட நிலையில் தினமும் அவலப்படுகின்ற மக்களுக்குச் செய்து கொடுக்க முடியாத நிலையில்தான், தமிழ்ச்  சமூகம் இன்னும் இருக்கிறது.

நாட்டிலே சமாதானத்தையும் சுபீட்சத்தையும் உண்டாக்குவதாகக் கூறிக்கொண்டிருக்கிற  அரசாங்கமும் இதையிட்டு, இந்த மனிதர்களையிட்டுக் கவனம் கொள்ளவில்லை.

குறைந்தபட்சம், சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் ஆர்வமாக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூட, இந்த மாதிரிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியும். நல்லிணக்கத்தின் அத்திவாரம் என்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்தே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியும்.

அவர்கள் அவநம்பிக்கைப்படும்போது, அவர்களின் நிலையைக் காணுகின்ற சமூகம் நம்பிக்கை இழக்கும். இதுதான் யதார்த்தம். இதற்குள்தான் ஆயிரமாயிரம் பெருங்கதையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாகவே, எந்தப் பிரச்சினைக்கும் சொல்லப்படுகின்ற பதில், அரசியல் தீர்வு கிடைத்தால் எப்ல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்பது தான். அரசியல் தீர்வு என்பது, சர்வரோக நிவாரணி என்ற விதமாகக் கட்டமைக்கப்படுகின்ற தோற்றப்பாடு.

எத்தனை மாயையானது? அதுவரையிலும் இதுபோன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீள முடியுமா?
இப்போது, சஞ்சயன்  தரப்புத் தொடங்குகின்ற  இந்தப் பணி, இந்தப் பிரச்சினையை முழுதாகத் தீர்ப்பதற்கு உதவ வேண்டும். இதை இன்னும் இன்னும் வெளிப்பரப்பெங்கும் உள்ள உறவுகள் இணைந்து, செய்ய வேண்டும்.

இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை, மிஞ்சியிருந்த உறவுகளே இணைந்து மீளமைத்தனர். அவர்களால் அப்போது உருவாக்கப்பட்ட அமைப்புகளே, இன்று உலகமெங்கும் இருக்கின்ற பல தொண்டர் அமைப்புகளாகும்.

இன்று, எமது மக்களுக்காக உருவாக்கப்படுகின்ற அமைப்புகளும் உதவிகளும் இந்த மக்களுக்கு மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவும் உதவிச் செயற்பாடுகளாகவும் நாளை மாற வேண்டும்.

உலகமெங்கும் தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள். திக்கெட்டும் தமிழர்கள் உள்ளனர் என்று, சொல்வது முக்கியமில்லை. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், இந்த உலகம் அவர்களை எப்படித் தன்னுடைய பதிவில் கொண்டிருக்கிறது என்பதே முக்கியமானது.

அதிலும் முக்கியமானது, உலகமெங்கும் உள்ள தமிழர்கள், எங்களுக்கு என்ன செய்தார்கள், எங்கள் அவலங்களைத் தீர்ப்பதற்கு எப்படி உதவினார்கள், குறைந்த பட்சம் நாங்கள் உண்பதற்கும் மலங்கழிப்பதற்கும் எப்படி ஆதரவாக இருந்தனர் என்று பாதிக்கப்பட்டவர்கள், போரின் குழந்தைகள் நினைவெடுத்துப் பேச வேண்டும்.

போரின் காயங்களை ஆற்றுவதற்கு, இப்படி ஏராளமான முறைகள் உள்ளன. இதைச் செய்தே, பாதிக்கப்பட்ட சமூகத்தை ஈடேற்ற, மீள்நிலைப்படுத்த முடியும். அல்லற்பட்டு, அவதியுறும்வேளை, சொல்லாமல் செய்யும் உதவியே பேருதவியும் சிறப்புமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X