2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லொறி சாரதியின் மீது தாக்குதல்: ரூ 6 இலட்சம் கொள்ளை

Kogilavani   / 2017 மார்ச் 28 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா

வெள்ளை வானில் வந்த கும்பலொன்று, லொறி சாரதியை தாக்கிவிட்டு, 6 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று, தலவாக்கலை பூண்டுலோயா பகுதியில், நேற்று முன்தினம் மாலை  இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த லொறியின் சாரதியான ஆர்.சின்னைய்யா என்பவர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வட்டகொடை பசும்பால் உற்பத்தி நிலையத்தின் உரிமையாளருக்கு சொந்தமான லொறியில், மேற்படி சாரதி பணியாற்றி வந்துள்ளார்.

இவர், தலவாக்கலை பசும்பால் நிலையத்திலிருந்து தனது உரிமையாளர் வீட்டுக்குப் பணத்தை எடுத்துக்கொண்டுச் சென்ற போது, தலவாக்கலை, பூண்டுலோயா வீதி வழியாக வெள்ளை வானில் வந்த கும்பலொன்று, லொறிக்கு குறுக்காக வானை நிறுத்தியுள்ளது.

வானிலிருந்து இறங்கி வந்த ஐவரடங்கிய குழுவினர்,  தாங்கள் பினேன்ஸ் கம்பனியிலிருந்து வந்துள்ளதாகவும், இந்த லொறிக்கு தவணை பணம் செலுத்தாததால்,  லொறியை கொண்டுச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர், லொறியின் சாவியை கையிலெடுத்துள்ள அவர்கள், லொறியில் வைக்கப்பட்டிருந்த பணப் பையையும் எடுத்துள்ளனர். இதனை சாரதி தட்டிக்கேட்டபோது, கூரிய ஆயுதம், மரக் கட்டை என்பவற்றினால் சாரதியை தாக்கிவிட்டு பணத்தையும் லொறியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், லொறி சாரதி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்தப் தலவாக்கலை பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சாரதியை லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேற்படி கும்பலானது லொறியை, ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை செலுத்திச் சென்றுவிட்டுப் பின்னர் இடையில் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளை வானில் வந்தவர்கள், அரச உத்தியோகத்தர்களைப் போன்று ஆடை அணிந்திருந்ததாக லொறியின் சாரதி விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.   

இச்சம்பவம் தொடர்பில், தலவாக்கலை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .