2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நியமனம் வழங்கப்படாமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பட்டதாரி முறைப்பாடு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 28 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நான்காம் இடத்துக்கு தெரிவான பட்டதாரி ஒருவருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமை தொடர்பில் தமது அலுவலத்தில் குறித்த பட்டதாரி முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காத்தான்குடி, கடற்கரை வீதியைச் சேர்ந்த முஸ்தபா மிப்றாஹ் என்பவரே எழுத்து மூலம் இம்முறைப்பாட்டை திங்கட்கிழமை (27) மாலை செய்துள்ளார். இவர் சமூக விஞ்ஞானத்துறையில் ஆங்கிலமொழி மூலப் பட்டதாரி என்பதுடன், இலங்கை ஜாமியா நழீமியா கல்லூரியில் கல்வி கற்றவர் ஆவர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு நிலவும்  ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு போட்டிப் பரீட்சை கடந்த வருடம் நடத்தப்பட்டது.

இப்பரீட்சைக்குத் தோற்றிய குறித்த பட்டதாரி மாகாண மட்டத்தில் நான்காம் இடத்தில் தெரிவான நிலையில், இவருக்கு நேர்முகப் பரீட்சை 27.10.2016 அன்று நடத்தப்பட்டது. அதிலும் ஆசிரியர் நியமனத்துக்காக இவர்  தெரிவாகியிருந்தார்.

இவ்வாறு போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் கடந்த வருடம் டிசெம்பர் 31ஆம் திகதியும் இவ்வருடம் மார்ச் 19ஆம் திகதியும் வழங்கப்பட்டன. ஆனால், இந்த இரண்டு தடவைகளிலும் குறித்த பட்டதாரிக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை.

இதற்கிடையில், போட்டிப் பரீட்சையில் 35ஆவது இடத்தில் தெரிவாகியவருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நான்காம் இடத்துக்கு தெரிவாகி ஆசிரியர் நியமனத்தை பெறுவதற்கான தகுதி  இருந்தும், நியமனம் வழங்கப்படவில்லை தனது முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட பட்டதாரி கூறியுள்ளார்.

மேற்படி நியமனங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் பல தடவைகள் கேட்டபோது, தாமதிக்குமாறும் நியமனம் கிடைக்கும் எனவும் கூறிய போதிலும், இதுவரையில் தனக்கு நியமனம் வழங்கப்படவில்லை. எனினும், தனக்கு அடுத்த கட்டங்களில் உள்ளவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனது மனித உரிமை மீறப்பட்டுள்ளதுடன்,  உடனடியாக தனக்கு ஆசிரியர் நியமனத்தை பெற்றுத் தருமாறும் கோரி முறைப்பாட்டைச் செய்ததாகப் பாதிக்கப்பட்ட பட்டதாரி கூறினார்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .