‘சிலாவத்துறை காணி தொடர்பில் புதுவருடத்துக்கு பின்னர் பேச்சு’
06-04-2017 04:59 AM
Comments - 0       Views - 61

ஜே.ஏ.ஜோர்ஜ்

சிலாவத்துறை கடற்படை முகாமினால் காணிகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சம்பந்தமாக புதுவருடத்துக்கு பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் பேச்சு நடத்தி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

பிரதமருடனான கேள்வி, பதில் நேரத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் நாடாளமன்ற உறுப்பினர் சல்மான், சிலாவத்துறை கடற்படை முகாம் சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். 

600 ஏக்கர் மொத்த நிலப்பரப்பைக் கொண்ட சிலாவத்துறையில் 450 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் வீடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட அப்பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட போதிலும் அங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு, 60 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார்க் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால், கடைத் தொகுதிகள், வீடுகள், பாடசாலை, வைத்தியசாலை, நூலகம் என பலவும் அதற்குள் உள்ளடங்குகிறது. கடற்படையிடம் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என, சல்மான் எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். 

இக்கேள்விக்குப் பதில் அளித்த பிரதமர், “போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கு சிலாவத்துறை கடற்படை முகாம் எமக்கு அத்தியவசியமாகிறது. எனக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய கடற்படை முகாமுக்காக 34 ஏக்கர்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் 6 ஏக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்களில் 38 பேர் உயிருடன் இல்லை. தற்போது 28 ஏக்கர்கள் மாத்திரமே சிலாவத்துறை கடற்படை முகாமுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றதுடன் பாதுகாப்பு சமநிலை கருதி இதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.  இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், “உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் தவறானது என நினைக்கின்றேன். சிலாவத்துறை நகரத்தில் உள்ள கடைத்தொகுதிகள் வீடுகள் என்பனவும் கடற்படை முகாமுக்குள்ளே உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நகரின் மையப்பகுதி பயன்படுத்தப்படுகின்றது. எனவே, மக்கள் நகரத்தை விடுவிக்குமாறே கோருகின்றனர்” என்றார். 

அதற்கு பதிலளித்த பிரதமர், “போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவே இந்த முகாம் அவசியம் என கடற்படை தெரிவிக்கிறது. நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைகள் சம்பந்தமாக சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் விரிவாக ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்போம்” என்றார். 

"‘சிலாவத்துறை காணி தொடர்பில் புதுவருடத்துக்கு பின்னர் பேச்சு’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty