அசத்தும் மிமி சோய்
16-04-2017 04:26 PM
Comments - 0       Views - 51

கனடாவின் வான்கூவர் நகரில் வசிக்கும் 31 வயது மிமி சோய், அற்புதமான மாயத் தோற்றத்தை (Optical Illusion) தன் முகத்தில் வரைந்து அசத்துகிறார்.

சட்டென்று பார்த்தால், போட்டோஷாப் செய்தது போன்று தோன்றும். பள்ளி ஆசிரியராக இருந்தவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பனைக் கலையைக் கற்றுக்கொண்டார்.

“வழக்கமாக எல்லோரும் செய்யும் ஒப்பனையைவிட, வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் மாயத் தோற்றம் வரையும் எண்ணம் உருவானது. ஆரம்பத்தில் என் முகத்தில் நானே கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு வரைவதில் சிக்கல் இருந்தது. நீண்ட பயிற்சிக்குப் பிறகு, கலை வசப்பட்டுவிட்டது.

“மற்ற ஒப்பனைக் கலைஞர்களைவிட என்னுடைய ஒப்பனை வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதே போல ஒவ்வொரு நாளும் என்னுடைய ஓவியம் இன்னும் பிரமாதமாக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைத்தான், ஓவியங்களாகத் தீட்டுகிறேன். ஓர் ஓவியம் வரைந்து முடிப்பதற்கு 5 மணி நேரம் கூட ஆகிறது. தொடர்ச்சியாக வரைய முடியாததால், நடுவில் சிறிது நேரம் தூங்கிவிட்டு, வரைவதைத் தொடர்வேன்.

“லேஸ் ஓவியம் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. வரைந்து முடித்த பிறகு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன். என்னை 1,40,000 பேர் பின்தொடர்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் நான் போட்டோஷாப் செய்கிறேன் என்றே நினைக்கிறார்கள். அவர்களுக்காகவே நான் வரைவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறேன். நானே வரைவதில்தான் என்னுடைய திறமை அடங்கியிருக்கிறது. அதனால், டிஜிட்டல் எடிட்டிங்கை விரும்புவதில்லை. முதன்முதலில் ஐலைனரை மட்டும் வைத்து முகம் உடைந்தது போன்று வரைந்ததைப் பார்த்த என் அம்மா, அப்படியே அதிர்ச்சியடைந்துவிட்டார். இதைவிட வேறு என்ன வேண்டும்?” என்கிறார் மிமி சோய்.

 

"அசத்தும் மிமி சோய்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty