இ.போ.சவில் ரூ.125 மில். மோசடி: நந்தனவுக்கு மறியல்
19-04-2017 05:01 AM
Comments - 0       Views - 80

பேரின்பராஜா திபான்

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் இடம்பெற்ற 125 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட உதிரிப்பாக விநியோகஸ்தரான நந்தன பிரியந்தவின் விளக்கமறியல், மே 2ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.  

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜே. ட்ரொஸ்கி முன்னலையில், நேற்று (18) எடுத்துக்கொள்ளப்பட் போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

முதலாவது சந்தேகநபரான நந்தன பிரியந்தவுக்கு, 2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் உதிரிப்பாக விநியோகத்துக்காக முறையான கேள்விப் பத்திரங்கள் வழங்கப்பட்டனவா என, முறைப்பாட்டாளர் சார்பில் ஏற்கெனவே கேள்வியெழுப்பப்பட்டிருந்தது.  

இ.போ.ச அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய, மூன்று தடவைகளில், முதலாவது சந்தேகநபரினால் போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

அதற்கமைய, அவ்வாறு வழங்கப்பட்ட போலி ஆவணங்களை ஒப்புதலளித்து, இ.போ.சவின் நிதிப் பிரிவினூடாக பணம் வழங்க 2ஆவது சந்தேக நபரான இ.போ.சவின் முன்னாள் தலைவர் ஷஷி வெலகம உடந்தையாக இருந்துள்ளதாக முறைப்பாட்டாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  
முதலாவது சந்தேகநபரின் பிணை மனுவில் சிறப்புக் காரணங்கள் இல்லை என்பதால் பிணைக் கோரிக்கை இரத்துச் செய்யப்பட்டதுடன், இந்த வழக்கின் 2ஆவது சந்தேகநபரான இ.போ.சவின் முன்னாள் தலைவர் ஷஷி வெலகம, பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

"இ.போ.சவில் ரூ.125 மில். மோசடி: நந்தனவுக்கு மறியல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty