அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் வெனிசுவேலாவில் மூவர் பலி
20-04-2017 09:35 PM
Comments - 0       Views - 9

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் சுடப்பட்டதையடுத்து, வெனிசுவேலா மாணவர்கள் இருவரும் தேசிய காவல் சார்ஜன்ட் ஒருவரும், நேற்று  (19) இறந்துள்ளனர்.  

தலைநகர் கராகஸ்ஸிலும் ஏனைய நகரங்களிலும் ஜனாதிபதி மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள்,  ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து, ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதில், மதுரோவின் ஆதரவாளர்களும் கராகஸ்ஸில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.  

இந்நிலையில், மேற்கூறப்பட்ட இறந்தவர்களுடன் சேர்த்து, ஆர்ப்பாட்டங்களில், இம்மாதம் எட்டுப் பேர் வெனிசுவேலாவில் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படைகளையும் துணை இராணுவக் குழுக்களையுமே, இறப்புக்களுக்கு எதிரணி குற்றஞ்சாட்டுகிறது.  

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது 400க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், எதிரணி மீண்டும் அழைப்பு விடுத்திருந்த பிறிதோர் ஆர்ப்பாட்டம், இன்று இடம்பெற்றிருந்தது.

எதிரணி கூடியதை நெருங்கிய ஆயுதந்தரித்த அரசாங்க ஆதரவாளர்கள் சுட்டபோது, கால்பந்து விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய மாணவனொருவன்,  தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளான். மற்றைய சம்பவத்தில் எதிரணியின் தளமான சான் கிறிஸ்டோபலில், பல்கலைக்கழக மாணவியொருவரைத் தொடர்ந்தோர்,  அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.   
தேசிய காவல் சார்ஜன்ட், மிராண்டா மாநிலத்தில் இடம்பெற்ற வன்முறை ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்ற ஸ்னைப்பர் பிரயோகமொன்றின்போது கொல்லப்பட்டுள்ளதுடன், கேணல் ஒருவர் காயமடைந்ததாக, மனித உரிமைகள் ஒம்புட்ஸ்மன் தாரேக் சாப் தெரிவித்துள்ளார்.    

"அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் வெனிசுவேலாவில் மூவர் பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty