ட்ரம்ப் பக்கம் ஜனாதிபதித் தேர்தலைத் திருப்ப புட்டினின் ஆலோசனை குழு திட்டமிட்டது
20-04-2017 11:02 PM
Comments - 0       Views - 55

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் கட்டுப்படுத்தப்படும் ரஷ்ய அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவொன்று, கடந்தாண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை டொனால்ட் டரம்ப் பக்கமாகத் திருப்பவும், அமெரிக்காவின் தேர்தல் முறைமையின் மீதான வாக்காளர்களின் நம்பிக்கையைக் குலைக்கச் செய்வதுமான திட்டத்தை தயாரித்ததாக, ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய அதிகாரிகள் மூவரும் முன்னாள் அதிகாரிகள் நால்வரும் தெரிவித்துள்ளனர்.   

கடந்த நவம்பர் எட்டாம் திகதி இடம்பெற்ற தேர்தலில் தலையீட்டை மேற்கொள்வதற்கு ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சி என ஐக்கிய அமெரிக்க புலனாய்வு முகவரகங்கள் தெரிவித்தமைக்கான காரணத்தை, மேற்கூறப்பட்ட ஆலோசனைக் குழுவிலிருந்து பெறப்பட்ட இரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்தியதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவைத் தளமாகக் கொண்ட, மூலோபாயக் கற்கைகளுக்கான ரஷ்ய நிறுவகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணங்களை, தேர்தலின் பின்பு, ஐக்கிய அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் பெற்றதாக,  அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜனாதிபதி புட்டினின் அலுவலகத்தால் நியமிக்கப்படும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட ரஷ்ய வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகளினாலேயே, குறித்த நிறுவகம் நடத்தப்படுகிறது.  

கடந்த ஜூனில் எழுதப்பட்ட முதலாவது மூலோபாய ஆவணமானது, ரஷ்ய அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் சுற்றித் திரிந்திருந்தபோதும், குறிப்பிட்ட தனிநபர்கள் எவருக்குமென குறிப்பிட்டிருக்கவில்லை. இந்த ஆவணமானது, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தை விட ரஷ்யாவை நோக்கி மென்போக்கைக் கடைப்பிடிக்கும் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கு, ஐக்கிய அமெரிக்க வாக்காளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, சமூக வலைத்தளத்திலும் ரஷ்ய அரசினால் ஆதரிக்கப்படும் பூகோள செய்தி நிறுவனங்களிலும் பிரசாரமொன்றை ஆரம்பிக்குமாறு ரஷ்யாவுக்கு பரிந்துரைத்ததாக, ஏழு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.   

கடந்த ஒக்டோபரில் எழுதப்பட்ட இரண்டாவது ஆவணமும், முதலாவதைப் போலவே விநியோகிக்கப்பட்டதோடு, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் வெற்றிபெறுவார் என எச்சரித்துள்ளது. ஹிலாரி கிளின்டன் வெற்றிபெறுவதன் காரணமாக, ட்ரம்ப்புக்கு ஆதரவான பிரசாரத்தை ரஷ்யா நிறுத்துவது சிறந்தது என குறித்த ஆவணம் வாதிட்டதுடன், ஐக்கிய அமெரிக்காவின் தேர்தல் முறைமைகளின் சட்டபூர்வமானதன்மையை கேள்விக்குட்படுத்துவதற்காக, வாக்காளர் மோசடி தொடர்பான தகவலைத்  தீவிரப்படுத்துமாறும், ஹிலாரியின் ஜனாதிபதிக் காலத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் கிளின்டன்களின் நன்மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்துமாறும் கோரியிருந்ததாக, ஏழு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.   

ரஷ்ய ஆவணங்கள் இரகசியமானவை என்பதன் காரணமாக, தற்போதைய, முன்னாள் அதிகாரிகள், தமது அடையாளங்களை வெளிக்காட்டவில்லை. இது தவிர, இந்த ஆவணங்களை, ஐக்கிய அமெரிக்கா எவ்வாறு பெற்றது என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஐக்கிய அமெரிக்க புலனாய்வு முகவரகங்களும், இந்த ஆவணங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளன.   

ஐக்கிய அமெரிக்காவின் தேர்தலில் தலையிடவில்லை என்று புட்டின் மறுத்துள்ள நிலையில், இந்த ஆவணங்கள் தொடர்பில் பதிலளிக்க, புட்டினின் பேச்சாளரும் ரஷ்ய நிறுவகமும் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளனர்.    

"ட்ரம்ப் பக்கம் ஜனாதிபதித் தேர்தலைத் திருப்ப புட்டினின் ஆலோசனை குழு திட்டமிட்டது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty