'வெப்பம் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் பெருக்கம் அதிகரிப்பு'
21-04-2017 11:53 AM
Comments - 0       Views - 29

-எஸ்.நிதர்ஷன்

“நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது” என்று,  யாழ்.போதனா வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஜமுனாந்தா தகவல் தெரிவித்துள்ளார்.

நோய் கிருமிகளின் பெருக்கத்தினால் ஏற்படும் ஆஸ்மா, கண்நோய்கள் தொடர்பிலும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர்  எச்சரிக்கை செய்துள்ளார்.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும் தற்காலத்தில் அதிகரித்துக் காணப்படும் வெப்பத்தினால் ஏற்படும் உடல் பாதிப்புத் தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வெப்ப நிலையானது அதிகரிக்கும் போது பற்றீரியா பெருக்கமும், வைரஸ் பெருக்கமும் காணப்படும். அத்துடன் இக் காலப்பகுதியில் சுவாசம் தொடர்புபட்ட நோய்கள் அஸ்மா நோய்கள் மற்றும் தூசுகளால் கண்நோய்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு.

எனவே, முடியுமான அளவு காலை 11 மணியளவில் இருந்து பிற்பகல் 3 மணிவரை வெயில் சூழலில் செல்வதை தவிர்ப்பதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்.

இக் காலப் பகுதியில் வயது முதிர்ந்தவர்கள் உயிரிழக்க கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. குறிப்பாக 75 வயது தொடக்கம் 80 வயதானவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.

எனினும், வெப்பத்தால் உயிரிழக்கும் நிலமை இந்தியாவிலேயே காணப்படுகின்றது. இங்கே அவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதில்லை.

மேலும், வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு நாளொன்றுக்கு சராசரியாக ஒருவர் 2 லீற்றர் தொடக்கம் 3 லீற்றருக்கு அதிகமான நீரை அருந்த வேண்டும்.

இவற்றைவிட, நீராகாரம் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதனூடாகவும் குறிப்பாக பழவகைகள், கூள், கஞ்சி, மரக்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதனூடாக இவ் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ள முடியும்” என்றார்.

 

"'வெப்பம் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் பெருக்கம் அதிகரிப்பு'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty