வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதிக்கு மகஜர்
21-04-2017 03:05 PM
Comments - 0       Views - 18

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“முசலி பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் அபகரிப்புச்  செய்யும் புதிய வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்தல் மற்றும் முள்ளிக்குளம் மக்களின் நிலங்களில் இருந்து கடற்படை வெளியேற்றப்பட வேண்டும்” என, கோரி மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம், இன்று (21) வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் மகஜரை கையளித்துள்ளனர்.

மன்னார் ஜம்மியத்துல் உலமா சபை செயலாளர் மௌவி எஸ்.ஏ.அசீம் தலைமையில், மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் தலைவர் அப்துல் அசீஸ் மற்றும் சம்மேளன உறுப்பினர்கள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை(21) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்துள்ளனர்.

மகஜரை கையளித்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் ஜம்மியத்துல் உலமா சபை செயலாளர் மௌவி எஸ்.ஏ.அசீம், “மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனத்துடன் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி, கரடிக்குழி, பாலைக்குழி, முள்ளிக்குளம், சிலாபத்துறை போன்ற பகுதிகளில் மக்களின் குடியிருப்பு நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பிரதேசத்தில் மக்களின் பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

மக்கள் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார்களோ அவ்வாரே அவர்கள் சுதந்திரமாக வாழவேண்டும். எனவே புதிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதனை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது” என, அவர் மேலும் கூறினார்.

"வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதிக்கு மகஜர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty