2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விகாரை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்

Thipaan   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையை அண்டிய பகுதியில் தனியார்க் காணியொன்றில், விகாரைக்கான நிர்மாணப் பணிகள்  தொடங்கப்பட இருந்ததால் அங்கு ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து, நிர்மாணப் பணிகள் அனைத்தும் பொலிஸாரினால், இன்று (21) இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை அப்பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்றநிலையை அடுத்து, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பெருமளவில் அழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாயக்கல்லி மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பௌத்த தேரர்களினால் பலாத்காரமாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. சிங்களவர் எவரும் வாழாத இப்பகுதியில் இச்சிலை அமைக்கப்பட்டமை தொடர்பில் பலத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் அது அகற்றப்படவில்லை.

எனினும், அப்பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தேர்கள் குழுவொன்றினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், இறக்காமம் பிரதேச செயலாளரிடம் விகாரை அமைப்பதற்கான காணிக்குரிய அனுமதியும் கோரப்பட்டிருந்தது.

நேற்றயதினம், அங்குள்ள தனியார்க் காணியில் அத்துமீறி விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தேரர்களினால் முன்னெடுக்கப்பட்ட போது, அப்பகுதி மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக பொலிஸார் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும், இன்று காலை தொடக்கம் குறித்த இடத்தில் மீண்டும் விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதனால், அங்கு  திரண்ட மக்கள் தமது எதிர்ப்பபை வெளியிட்டதுடன், பொதுமக்களுக்கும் தேரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், முறுகல் நிலையம் தோன்றியது.

இதனைத் தொடர்ந்து, அங்கு மேலதிக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டதுடன், பௌத்த தேரர்களும் மக்கள் பிரதிநிதிகளும் தமண பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டதுடன், மக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் உத்தரவிட்டனர்.

அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் கே.வெதசிங்க, அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் போன்றோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .