“வசந்தகால ஏற்பாடுகளில் குளறுபடி: குழுவமைத்து ஆராயவும்”
21-04-2017 05:04 PM
Comments - 0       Views - 65

பா.திருஞானம்

நுவரெலியா வசந்தகால ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதுத் தொடர்பில் ஆராய்வதற்கு, குழுவொன்றை அமைக்க, மத்திய மாகாண முதலமைச்சர்  சரத் ஏக்கநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும்,  மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நுவரெலியா வசந்தகால ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளது. மாகாணசபையில் எடுக்கப்பட்ட எந்த ஒருத் தீர்மானமும் முறையாக நடைமுறைபடுத்தப்படவில்லை.  மத்திய மாகாண ஆளுநரை  மலர் கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக அழைப்பதற்கு அழைப்பிதழ் அச்சிடப்பட்டப் போதிலும், அவர் முறையாக அழைக்கப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு,  பலலேகலையில் அமைந்துள்ள மாகாண சபை கட்டடத்தின் கேட்போர் கூடத்தில்,  இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

“மாகாண சபையில் எடுக்கப்படுகின்ற  தீர்மானங்கள் முறையாக நடைமுறைபடுத்தப்படுவது இல்லை. இதற்கு பல உதாரணங்களை  கூறமுடியும். தற்போது நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. வசந்த காலத்தின்போது, வாகன தரிப்பிடத்துக்கு மாநகர சபையே பணம் அறவிடும் என  தீர்மானிக்கப்பட்டிருந்தப் போதிலும்  தனியார் ஒருவருக்கு அந்த பணத்தை அறவிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை யார் தீர்மானித்தர்கள் என்று தெரியவில்லை. தனிப்பட்டவர்கள் சம்பாதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது.

நுவரெலியா வசந்த காலத்தில்  அங்கிருக்கின்ற மக்களுக்கு வருமானம் கிடைக்கின்ற வகையில் கடந்த காலங்களில் மாநகர சபையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இம்முறை   நுவரெலியாவில் இருக்கின்ற மக்களுக்கோ அல்லது  வர்த்தகர்களுக்கோ எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. அனைத்து வருமானமும் வெளியாருக்கு சென்றிருக்கின்றது. நுவரெலியா மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை.

கந்தப்பளையிலுள்ள பாடசாலையொன்றில் மலசலகூட வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதற்காக 19 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தின் பெறும் பகுதி, எந்தவிதமான நிபந்தனையுமின்றி, எழுத்து மூல ஒப்பந்தமோ இல்லாமல் தனிப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதுத் தொடர்பில் ஆராயப்பட வேண்டும். மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் மூலம் எமக்கு அனுப்பப்படுகின்ற பணத்தை, முறையாகப் பயன்படுத்தி அதன் பயன்களை எமது மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மத்திய மாகாணத்தில் பல தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"“வசந்தகால ஏற்பாடுகளில் குளறுபடி: குழுவமைத்து ஆராயவும்”" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty