2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'சகல உரிமைகளும் 'மூவின மக்களுக்கு உண்டு'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

'இந்த நாட்டினுடைய சகல உரிமைகளும் பெரும்பான்மையின மக்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல என்பதுடன், மூவின மக்களுக்கும் சகல உரிமைகளும் உண்டு என' நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

'இந்த நாட்டிலுள்ள மூவின மக்களும்  ஒற்றுமையாக வாழ வேண்டும் எனத் தெரிவித்த அவர், தமிழர்களும் முஸ்லிம்களும் பேசுகின்ற மொழி எமக்குப் புரிவதில்லை. அதன் காரணமாகவே பிரச்சினை ஏற்படுகின்றது' எனக் கூறினார்.
'இந்த நாட்டின் பிரஜைகளாகிய நாங்கள்; எல்லோரும் மொழியால் மாத்திரம் வேறுபட்டுக்  காணப்படுகின்றோமே தவிர, வேறொன்றும் கிடையாது' எனவும் அவர் கூறினார்.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த  விவசாயிகளுடனான கலந்துரையாடல், அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் சனிக்கிழமை (22) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் உரையாற்றியபோது,'இந்த நாட்டுக்கு அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தபோது, பெரும்பான்மையின மக்கள்; மாத்திரம் போராடிச்  சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று இந்த நாட்டிலுள்ள அனைவரும் போராடியே சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம்' என்றார்.

'மேலும், நீர்ப்பாசனக் குளங்களை அபிவிருத்தி செய்வதற்காக கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஹெடஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். ஹெடஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கான நீர்ப்பாசனப் பிரச்சினை தீர்க்கப்படும்.

அம்பாறையிலுள்ள சேனநாயக்க சமுத்திரத்தில்  தற்போது  நிலவும் வரட்சி காரணமாக நீர்மட்டம் குறைந்துள்ளது. சேனநாயக்க சமுத்திரத்தில் 7 ஆயிரம் அடி நீர் தேக்கி வைக்கப்படுவது வழமையாகும். தற்போதையால்  வரட்சியாலும்  குறைவான மழை வீழ்ச்சியாலும் 2 ஆயிரம் அடி நீர் மட்டுமே  அச்சமுத்திரத்தில் காணப்படுகின்றது.

பழமை வாய்ந்த சேனநாயக்க சமுத்திரம் பழுதடைந்து செயலிழக்கக்கூடிய நிலையில் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இதைப்  புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, சில அரசியல்வாதிகள் தடை செய்தார்கள். சேனநாயக்க சமுத்திரத்தை விரைவாகப் புனரமைப்புச் செய்யாது விட்டால், பாரிய வெள்ள அபாய நிலைமை ஏற்படும்  என்பதுடன்,  இது  கிழக்கு மாகாணத்துக்கு பாரிய அனர்த்தமாக மாறக்கூடிய நிலைமை ஏற்படும். எனவே, சேனநாயக்க சமுத்திரத்தையும்  புனரமைப்பதற்கான நடவடிக்கையை விரைவில்  எடுக்கவுள்ளேன்' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .