2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தெரேசா மே-க்கு 50% ஆதரவு

Shanmugan Murugavel   / 2017 ஏப்ரல் 23 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில், பிரதமர் தெரேசா மே-இன் பழைமைவாதக் கட்சி, இலகுவான வெற்றியைப் பெறுமென, கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அவரது கட்சிக்கு, 50 சதவீதமான ஆதரவு காணப்படுகின்றது எனவும் எதிரணியான தொழிலாளர் கட்சிக்கு, அதன் அரைவாசி ஆதரவே காணப்படுகிறது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜூன் 8ஆம் திகதி, தேர்தலை நடத்துவதற்காக மே விடுத்த அழைப்பு, எதிர்க்கட்சிகளைத் தடுமாற வைத்திருந்தது. ஆனால் அந்த அழைப்பு, மே-க்கு, சிறப்பான ஆதரவை வழங்கியுள்ளதாகவே கருதப்படுகிறது.

தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ள ஆதரவு, 1991ஆம் ஆண்டுக்குப் பின்னர், பழைமைவாதக் கட்சிக்குக் கிடைக்கும் உச்ச அளவிலான ஆதரவாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கான வாக்கெடுப்பு வெற்றியான பின்னர், நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்ட மே, அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர், தனது அரசியல் பலத்தை அதிகரிப்பதற்காக, இந்தத் தேர்தலைக் கோரியிருந்தார்.

பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்குள், தலைவர் ஜெரெமி கோர்பன் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் காரணமாக, அக்கட்சிக்கான ஆதரவு, குறைவடைந்து காணப்படுகிறது.

அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக அமைந்த, தேசியவாதக் கட்சியான ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சிக்கான ஆதரவும் குறைவடைந்து, அந்த ஆதரவு, பழைமைவாதக் கட்சிக்குச் சென்றுள்ளது.

தவிர, இன்னொரு கருத்துக்கணிப்பில், ஸ்கொட்லாந்திலும், பழைமைவாதக் கட்சியின் ஆதரவு அதிகரித்துள்ளது. ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் ஆதரவு குறைவடைந்தே, இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிய வேண்டுமென, ஸ்கொட்லாந்து தேசிய கட்சி கோரிவரும் நிலையில், அவர்களின் எண்ணத்துக்கு, பாதிப்பை வழங்குவதாக, இந்நிலைமை அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X