2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இளக்காரம்

Administrator   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முகம்மது தம்பி மரைக்கார்  

இளகிய இரும்பைக் கண்டால், கொல்லன் - ஓங்கி ஓங்கி அடிப்பான்’ என்று கிராமப் புறங்களில் கூறுவார்கள்.   

நாம் பலவீனமாக இருந்தால் மாற்றுத் தரப்பார் நமக்கெதிராக துள்ளி விளையாடுவார்கள். அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலைப் பகுதியில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.   

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு எனும் தமிழ் கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று ஒரு குழுவினரால் அடாத்தாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.   

‘பௌத்தர்கள் எவரும் வசிக்காத ஓர் இடத்தில் புத்தர் சிலை எதற்கு’ என்கிற கேள்விகள் எழுந்த போதும், அது குறித்து சிலை வைத்தவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. அந்தச் சிலையை அகற்ற வேண்டும் என்று, அங்குள்ள முஸ்லிம்களும் தமிழர்களும் கோசமெழுப்பிய போதும், அவர்கள் சார்பான ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் பொடுபோக்காக இருந்தமையினால், அங்கிருந்து சிலையை அகற்ற முடியவில்லை.  

‘தனித்து விடப்பட்ட புத்தர்’, ‘அபாயச் சங்கு’ எனும் தலைப்புகளில் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இரண்டு கட்டுரைகளை ‘தமிழ் மிரர்’ பத்திரிகையில், அப்போது எழுதியிருந்தோம். அந்தச் சிலை வைப்பு விவகாரமானது மத ரீதியான விடயமல்ல என்பதையும், மத அடையாளத்தைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் காணிகளை அபகரிக்கும் பேரினவாதத்தின் சூழ்ச்சி நடவடிக்கை என்பதையும் அந்தக் கட்டுரைகளில் பதிவு செய்யப்பட்டிருந்தது.   

மேலும், சிலை வைப்பினைத் தொடர்ந்து, அங்கு என்ன நடக்கும் என்பதையும் அந்தக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம். ‘சிறுபான்மை மக்களின் பிரதேசத்தில், புத்தர் சிலைகளை அடாத்தாகக் கொண்டுவந்து நிறுவுதல், நில ஆக்கிரமிப்பின் ஆரம்பக் கட்டமாகும்.   

பின்னர், குறித்த சிலை வைக்கப்பட்ட இடத்தில், பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்படும். அதன் பிறகு அந்த விகாரையினைப் பராமரிக்க ஒரு பிக்குவும் அவருக்கு பணிவிடைகள் செய்வதற்கு சிலரும் வருவார்கள்.

காலப்போக்கில், விகாரையைச் சுற்றிலும் குடியிருப்புகள் உருவாகும். பிறகு அது ஒரு கிராமமாக மாறிவிடும்.  

இதனால்தான், புத்தர் சிலை வைக்கப்படும் ஆரம்பச் செயற்பாடுகளின் போதே, சிறுபான்மை மக்கள் அச்சமடைவதோடு, அதனை எதிர்க்கவும் தொடங்குகின்றனர்’ என்று அந்தக் கட்டுரையொன்றில் விவரித்திருந்தோம். நாம் கூறிய அந்த விடயங்கள் இப்போது பலிக்கத் தொடங்கியுள்ளன.  

மாயக்கல்லி மலையினைச் சுற்றிலும் முஸ்லிம் மற்றும் தமிழர்களின் விவசாயக் காணிகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாயக்கல்லி மலைப் பகுதிக்கு பௌத்தர்கள் சிலரை அழைத்துக் கொண்டு பிக்குகள் நான்கைந்து பேர் வந்தனர். 

நிலத்தை பண்படுத்தும் புல்டோசர் இயந்திரமொன்றினைக் கொண்டு வந்திருந்த அவர்கள், அங்குள்ள காணியொன்றினைப் பண்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டார்கள். அந்த இடத்தில் பௌத்த விகாரையொன்றினை நிர்மாணிப்பதற்காகவே, அந்த நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.   

இதனைக் கண்ட அப்பிரதேச மக்கள் அங்கு திரண்டனர். பௌத்த விகாரையொன்றினை அந்த இடத்தில் நிர்மாணிப்பதற்கு அவர்கள் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தனர். 

குறித்த காணி, பள்ளியான் செய்னுலாப்தீன் என்பவருக்குச் சொந்தமானது என்பதால், தனது காணியில் அத்துமீறிய செயற்பாடு இடம்பெறுவதை அவரும் எதிர்த்தார்.   

இந்த நிலையில், தனது காணியில் அத்துமீறி பௌத்த விகாரை நிர்மாணிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக பள்ளியான் செய்னுலாப்தீன் எனும் நபர், தமண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். 

மேலும், இறக்காமம் பிரதேச செயலாளருக்கும் இது விடயமாகக் கடிதமொன்றினைச் சமர்ப்பித்தார்.   

இருந்தபோதும், விகாரை நிர்மாணிக்கும் தீர்மானத்துடன் வந்தவர்கள், தமது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. 

மறுநாள் வியாழக்கிழமையும் குறித்த காணிக்குள் அவர்கள் நுழைந்தனர். விகாரையினை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் அமைக்கும் ஆரம்ப வேலைகளில் அவர்கள் ஈடுபட்டார்கள். 

இதனையடுத்து, அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகலவை இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைவரத்தைக் கூறினார். சற்று நேரத்தில் பொலிஸாருடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் களத்துக்கு வந்தார். 

இவ்விவகாரம் தொடர்பில் தாம் நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளதாகவும் நீதிமன்றத் தீர்ப்புக் கிடைக்கும் வரை, விகாரை அமைக்கும் செயற்பாட்டினை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டார். பிரச்சினைக்குரியவர்கள் அங்கிருந்து அகன்று சென்றனர்.   

ஆனால், விவகாரம் அத்துடன் முடியவில்லை. மறுநாள் வெள்ளிக்கிழமையும் அங்கு பிக்குகளும் அவர்களின் ஆட்களும் வந்தனர். இவர்களைக் கண்ட அப்பிரதேச மக்கள் அங்கு திரண்டார்கள். இதன்போது, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்தநிலையில், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை உள்ளிட்ட அந்தப் பிராந்தியத்திலுள்ள சில அரசியல்வாதிகளும் அங்கு வருகை தந்திருந்தனர். அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்படப் பொலிஸாரும் களத்துக்கு வந்தனர்.  

பொலிஸ் அதிகாரிகளிடம் அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை தெளிவுபடுத்தினார். 

தனியார் காணியொன்றில், அதுவும் பௌத்தர்கள் எவருமில்லாத இடத்தில் விகாரையொன்றினை அமைப்பதிலுள்ள நியாயமற்ற தன்மையினை உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார். இவ்வாறான செயற்பாடுகளால் பௌத்தர்களுக்கும் சிறுபான்மை மக்களுக்குமிடையில் தேவையற்ற இனமுரண்பாடுகள் தோன்றலாம் என்பதை உதுமாலெப்பை விளக்கினார்.  

 இதனையடுத்து, அங்கு எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாமென அங்கு வந்திருந்த பௌத்த பிக்குமாரிடம் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறினார். 

அதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆயினும், பொலிஸாரின் உறுதியான நடவடிக்கை காரணமாக அங்கிருந்து பிரச்சினைக்குரியவர்கள் அகன்றனர்.  

இந்த நிலையில், மாயக்கல்லி மலைக்கு அருகாமையிலுள்ள சர்ச்சைக்குரிய காணியினுள் யாரும் நுழையக் கூடாதென, அம்பாறை மேலதிக மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று இடைக்காலத் தடை உத்தரவொன்றினைப் பிறப்பித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு மே 17ஆம் திகதிவரை நீடிக்கும்.  

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட போது, அதிகாரத்திலுள்ள சிறுபான்மை அரசியல்வாதிகள் எவரும், அது விடயத்தில் பெரிதாக அக்கறையெடுத்துக் கொள்ளவில்லை.   

அம்பாறை மாவட்டத்தில் ஆளுந்தரப்பைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மூவரும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இவர்களில் இருவர் பிரதியமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர். 

ஆயினும், மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டபோது, அதற்கு எதிராக, இவர்கள் உருப்படியான காரியங்கள் எவற்றிலும் ஈடுபடவில்லை என்று மக்கள் குறை கூறுகின்றனர்.   

ஆனால், “மலையில் வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டால், எனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வேன்” என்று, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாகமகே, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் வைத்து ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையின் பின்னணியில் அமைச்சர் தயாகமகே உள்ளார் என்கிற குற்றச்சாட்டொன்று, அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களிடையே உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

நியாயமற்ற முறையில், பௌத்தர்கள் எவருமற்ற ஓர் இடத்தில் புத்தர் சிலையை வைத்து விட்டு, அதனை அகற்றினால் எனது அமைச்சர் பதவியைத் துறப்பேன் என்று தயாகமகே என்பவருக்கு சொல்ல முடியுமென்றால், ‘அந்தச் சிலையை அகற்றா விட்டால், எங்கள் பிரதியமைச்சர் பதவிகளைத் துறந்து விடுவோம்’ என்றோ, ‘நாங்கள் நாடாளுமன்றில் எதிரணிக்குச் சென்று விடுவோம்’ என்றோ, அம்பாறை மாவட்டத்திலுள்ள மேற்படி மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் ஏன் கூற முடியாமல் போனது என, இங்குள்ள மக்கள் கேட்பது நியாயமானதாகும்.   

மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்ட போதும், அதனைத் தீர்த்து வைப்பதில், ஆட்சியாளர்கள் எதுவித அக்கறைகளையும் காட்டவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூழுக்கும், மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்படுகின்றார்கள். தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டே, தமது சமூகப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வுகளைக் காண வேண்டுமென அவர்கள் நினைக்கின்றார்கள் போலதான் தெரிகிறது.  

அம்பாறை மாவட்டமானது அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று கூறப்படுகிறது. அந்த மாவட்டத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் மூவரும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். 

இதனால், மாயக்கல்லி மலை விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ்தான் முன்னின்று மும்முரமாகச் செயற்பட வேண்டும் என எதிர்பார்ப்பதில் எவ்வித தவறுகளுமில்லை.   

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட போது, அங்கு மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் சென்று, நிலைமைகளைப் பார்வையிட்டமை நினைவுகொள்ளத்தக்கது. 

அநேகமான அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் ஊடகப் பிரபல்யம் தேடிக்கொள்வதற்கே முயற்சிக்கின்றனர்.  

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஆரவாரத்துடன் அரங்கேறிய முஸ்லிம் விரோத பேரினவாதச் செயற்பாடுகள், நல்லாட்சியில் சத்தமில்லாமல் நடந்தேறுகின்றதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற பேரினவாத செயற்பாடுகள் எவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.   

இன்னொருபுறம், பேரினவாதிகளின் பேச்சுக்கு அடிபணிந்து, முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் அவ்வப்போது நடந்து கொண்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. வில்பத்து விவகாரம் இதற்கு உதாரணமாகும். 

இவற்றினையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது, ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் இளக்காரமான நடவடிக்கைகளும் அவர்கள் தொடர்பில் ஆட்சியாளர்கள் கொண்டுள்ள குறை மதிப்பீடுகளும்தான், இவற்றுக்கெல்லாம் காரணமாக இருக்கும்போல் தெரிகிறது.  

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசமொன்றில் வைக்கப்பட்டுள்ள ஒரு புத்தர் சிலையினை தமது ‘அரசியல் சாணக்கியத்தின் ஊடாக’ அப்புறப்படுத்த முடியாத முஸ்லிம் அரசியல் தலைமைகள், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களிடமிருந்து அரச இயந்திரங்களின் துணையுடன் பேரினவாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ள 32 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் எவ்வாறு விடுவித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்கிற கேள்விகளுக்கு இங்கு விடைகளில்லை.  

தமிழர்களிடத்தில் இருக்கும் அரசியல் ஓர்மம், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இல்லை என்றே கூறவேண்டும்.
இந்த நிலையில், மாயக்கல்லி மலை விவகாரத்தில் இளக்காரமான தமது அரசியல் தலைமைகளை முஸ்லிம்கள் நம்பியிருப்பதில் பயனில்லை. 

“சிலை வைத்தது வைத்ததாகவே இருக்கட்டும், அதையும் மீறி, அங்கு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், நான் கடுமையாகச் செயற்படுவேன். அந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன்; அதற்கான செலவுகளையும் நானே பொறுப்பெடுப்பேன்” என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என மக்கள் கேட்கின்றார்கள்.  

மாயக்கல்லி மலை விவகாரத்தில் மக்கள்தான் களமிறங்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .