2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஹாவிலச்சிய விவசாய பயிற்சி நிலையத்தினூடாக 3,000 குடும்பங்களுக்கு அனுகூலம்

Gavitha   / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுர மாவட்டத்தின், மஹாவிலச்சிய, பேமதுவ பகுதியிலுள்ள விவசாய பயிற்சி நிலையம் மற்றும் விவசாய போதனாசிரியர் அலுவலகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம் மற்றும் பயிற்சிகள்) எஸ்.ஏ.அருணப்பிரியவினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவியின் (EU-SDDP) கீழ் இந்த நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்த மறுசீரமைப்புப் பணிகளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (FAO) நடைமுறைப்படுத்தியிருந்தது.  

விவசாய திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் விவசாய பயிற்சி நிலையம், சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், பல ஆண்டுகளாக யுத்தம் காரணமாக இயங்காத நிலையில் காணப்பட்டது. எனவே, மஹாவிலச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான பயிற்சிகள் கிராமிய சமூக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் மூலமாக, விவசாய பயிற்சி நிலையம் மற்றும் விவசாய போதனாசிரியர் அலுவலகத்தின் புனரமைப்பு செயற்பாடுகள் ஆரம்பமாகின. இந்த நிலையம் தற்போது மறுசீரமைக்கப்பட்டு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது. சுமார் 3,000 விவசாய குடும்பங்களுக்கு அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.  

மஹாவிலச்சியில் அமைந்துள்ள இந்தப் பயிற்சி நிலையத்தின் மூலமாக, விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு, பயிர் உற்பத்தி, விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்களின் உபயோகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல் பற்றிய நடைமுறைப் பயிற்சிகள் என்பன வழங்கப்படும். பெண் விவசாயிகளுக்கு விவசாய பொருட்கள் மற்றும் உள்ளூர் உணவு உற்பத்தி தொடர்பான பயிற்சிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.  

FAO SDDP செயற்றிட்டத்தின் முகாமையாளர் றோகினி சிங்கராயர் கருத்துத் தெரிவிக்கையில்,“மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவியை நடைமுறைப்படுத்துவதற்கான பங்காண்மையினூடாக விவசாயத்திணைக்களத்துடன் FAO கொண்டுள்ள உறுதியான உறவுகள் தற்போதும் மேலும் முக்கிய கட்டத்தை எய்தியுள்ளன. விவசாய அபிவிருத்தியினூடாக வறுமையைக் குறைப்பது என்பது எமது இலக்காகும்.

இதனை மேற்கொள்ளக்கூடிய ஒரு வழிமுறையாக, வளங்களை மேம்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது, விவசாய ஆய்வு மற்றும் விரிவாக்க சேவைகளை முன்னெடுப்பதற்கு அமைந்துள்ளது. அதனூடாக விவசாயிகளுக்கு தொடர்ச்சியான பயிற்சி வசதிகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தி, உற்பத்தியை அதிகரித்து, வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் முடியும்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .