2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டில்ஷான் சரணடைந்தார்: வழக்கும் ஒத்திவைப்பு

Kogilavani   / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலகரட்ண டில்ஷானைக் கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (25) இரத்துச் செய்தது.  

தனது முந்தைய மனைவியான நிலங்கா விதாங்கிக்கு மாதாந்தப் பராமரிப்புப் பணமாக 20,000 ரூபாயையும் தனது மகனுக்கான காப்புறுதிப் பணத்தையும் டில்ஷான் செலுத்தி வந்தார்.   

அந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமாக, அவருடைய முன்னாள் மனைவியால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நேற்று முன்தினம் (24) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, திலகரட்ண டில்ஷான் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

இதனால் அவரையும் அவருக்கான பிணை தாரரையும் கைதுசெய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார, அன்றைய தினம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், டில்ஷான், தனது சட்டத்தரணியூடாக நேற்றையதினம் மன்றில் ஆஜராகியிருந்தார்.   

வழக்குத் தவணை தினமான ஏப்ரல் 24ஆம் திகதியை, 25ஆம் திகதியென்று தான் குறித்துக் கொண்டதாலேயே, தனது சேவை பெறுநர் மன்றுக்கு சமுகமளித்திருக்கவில்லை என  டில்ஷானின் சட்டத்தரணி மன்றில் அறிவித்தார்.  

முறைப்பாட்டாளரும் மன்றில் ஆஜராகியிருக்காத நிலையில், பிடியாணை உத்தரவை இரத்துச் செய்த நீதவான், வழக்கை எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .