2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மோடிக்கு தொண்டா கடிதம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பெருந்தோட்ட மக்கள் சார்பாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை கையளிக்கவுள்ளார்.  
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யும் போதே, குறித்த கடிதம் கையளிக்கப்படவுள்ளது என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

இந்திய சமுதாயத்துக்குக் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு கல்வி, தொ​ழில்நுட்பம், வீடமைப்பு, கலாசாரத் தேவைகள் எனப்பல வகையிலும் இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகளை நாம் மனதார மதிக்கிறோம்.   

ஆயினும், வீடமைப்பு, கல்வி, தொழில்நுட்ப அறிவு என்ற துறைகளில் எமக்கு மேலும் இந்தியாவின் உதவிகள் தேவையாக உள்ளது. வீடமைப்பு, கல்வித் தேவைகளை நிறைவேற்ற பெருந்தோட்ட சமுதாயத்துக்கு அதிகரித்த தேவையுள்ளது.   

அந்த வகையில் அரசாங்கத்தின் பங்களிப்பு குறைவாக இருப்பது இதற்கான காரணமாகும்.   

கடந்த 2 வருடங்களில் க.பொ.த (சா/த), (உ/த) பெருந்தோட்டத்துறை மாணவர்களின் பெறுபேறுகளின் ஊக்கமும் நம்பிக்கையும் அளிப்பவையாக உள்ளன. ஆனால், அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் 24,000 மாணவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.   

பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு போராடுவதில் முன்னிற்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தங்களிடம் பின்வரும் வேண்டுதல்களை முன்வைக்கின்றது.   

வீடமைப்பு

பெருந்தோட்டத்துறைக்கு 4,000 வீடுகளை தரப்பட்டதையிட்டு நாம் இந்திய அரசாங்கத்துக்கு நன்றி கூறுகின்றோம். ஆயினும், மேலும் பல வீடுகளைக் கட்டம் கட்டமாக கட்ட வேண்டிய தேவையுள்ளது.   

இந்திய அரசாங்கப் புலமைப்பரிசில்கள்

இலங்கைத் தோட்டத்தொழிலாளர்களின் கல்வி, நம்பிக்கை நிதியம், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் புலமைப்பரிசில்கள் குறைவாக உள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி அடைவுகள் கணிசமாக அதிகரித்துச் செல்லும் நிலையில் அதிக புலமைப்பரிசில்கள் தேவையாக உள்ளன.   

பல்கலைக்கழகம் உருவாக்கல்

பெருந்தோட்டப் பகுதியிலிருந்து உயர் கல்விக்குத் தகைமை பெறும் பிள்ளைகளின் தொகை மிகவும் கூடுதலாக அதிகரித்துள்ளமையினால் பெருந்தோட்டப் பகுதிக்கென ஒரு பல்கலைக்கழகம் அமைவது தேவையாகவுள்ளது.   

எனவே, பெருந்தோட்டப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் அமைய, இந்திய அரசாங்கத்தின் உதவியை நாம் கோருகின்றோம்.   

தலைமன்னார் - தனுஷ் கோடி கப்பல் சேவை

தற்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடினமானதாகவும் செலவு கூடியதாகவும் உள்ளது.   
எனவே, தலைமன்னார் – தனுஷ்கோடி கப்பல் சேவை, விசேடமாக பெருந்தோட்டத்துறை சமுதாயத்தினருக்குப் பேருதவியாக அமையும்.   
கனம் பிரதம அமைச்சர் அவர்கள் மேற்படி எமது வேண்டுகோளை கவனத்திலெடுத்து, பெருந்தோட்ட மக்கள் பிரதான இலங்கை சமூகத்துடன் இணைந்து முன்னேற உதவுவீர்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X