2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரான்ஸ்: பழையன கழிதல்

Administrator   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறும். அரசியலும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அரசியலில் மாற்றங்கள் அவ்வளவு இலகுவாக நிகழ்வதில்லை. 

       அவ்வாறான மாற்றங்கள் நீண்டகால நிகழ்வுகளின் படிநிலையின் விளைவால் நிகழ்வன. இருந்தபோதும் அரிதான அரசியல் மாற்றங்கள் அதிசயம் போல் நோக்கப்படுகின்றன. 

       அம்மாற்றங்களின் முக்கியத்துவம் அக்காலச் சூழலின் அடிப்படையில் நோக்கப்படல் வேண்டும். அப்போதே நிகழ்ந்தது பழையன கழிதலா அல்லது புதியது புகுதலா எனப் புரியும். பழையன கழிதலால் புதியது புகும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல புதியன புகுதலுக்கும் பழையன கழிய வேண்டிய தேவையும் இல்லை. 

       இரண்டும் ஒன்றையொன்று சாராது தனித்தனியாக நிகழவியலும். மாற்றங்கள் ஒருபடித்தானவையோ வரன்முறையான செயன்முறையைக் கொண்டவையோ அல்ல. இதனால் எதிர்வுகூறல் கடினம். அரசியலின் சுவாரசியமே அதன் எதிர்வுகூறவியலாமையே.   

 கடந்த வாரம் இடம்பெற்ற பிரான்ஸின் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் பிரான்ஸின் அரசியல் திசைவழிகளை கோடுகாட்டியுள்ளன.

 ஜனாதிபதித் தேர்தலின் முதலாம் சுற்று முடிவுகள் அடுத்த ஜனாதிபதியைத் தெரியவில்லை என்றபோதும் எதிர்வரும் மே மாதம் ஏழாம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றில் போட்டியிடுவதற்கு இரண்டு வேட்பாளர்களைத் தகுதியுடையவர்கள் ஆக்கியுள்ளது. 

இத்தேர்தலை உலகமே உன்னிப்பாக அவதானிப்பதற்கான காரணங்கள் பல. அதில் முதன்மையானது பிரான்ஸ் என்ற நாட்டின் அரசியல் முக்கியத்துவம். 

உலக அரசியல் அரங்கில் மேற்கு ஐரோப்பாவின் பிரதானமான மூன்று நாடுகளில் ஒன்றாகவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடாகவும் பிரான்ஸின் முக்கியத்துவம் கணிக்கப்படுகிறது. 

19 ஆம் நூற்றாண்டில் நெப்போலியன் பொனபாட்டின் எழுச்சியுடன் தோற்றம் பெற்ற பிரெஞ்சுத் தேசியவாதம், பிரான்ஸை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியாவுக்கு அடுத்த கொலனியாதிக்க சக்தியாக நிலைநிறுத்தியது.   

இவ்விடத்தில் கவனிக்க வேண்டியது யாதெனில், பிரான்ஸ் தேசத்தின் உருவாக்கத்தின் போக்கில் பல தேசங்கள் தம் அடையாளத்தை இழந்து, பிரான்ஸ் தேசத்தினுள் தம்மைக் கரைத்துக் கொண்டன. தேசம் என்ற கருத்தாக்கம் முதலாளியத்தை ஒட்டி விருத்தியான அதேவேளை, நவீன முதலாளிய அரசின் விருத்தி, பலவாறான நடைமுறைகளினூடு, பல்வேறு இனக்குழுமத் தேசிய அடையாளங்கள் நசுக்கப்பட வகை செய்தது.   

நகர் சார்ந்த ஒரு சிறுபான்மையினர் மட்டுமே சரளமாகப் பேசிய ஒரு மொழியான, ‘அதிகார பூர்வமான பிரெஞ்சு’ தவிர்ந்து, பிரான்ஸில் பேசப்பட்ட அனைத்து மொழிகளையும் அமுக்குவது நெப்போலியனின் கீழ் வடிவமைக்கப்பட்ட பிரெஞ்சுத் தேசியத்துக்குத் தேவையாயிற்று. 

இவ்வகையில் தேச அரசின் தோற்றமும் முதலாளியத்தின் விருத்தியும் சேர்ந்து, ஒவ்வொரு நாட்டிலும் ஓர் ஆதிக்க மொழியினது அல்லது பொது மொழியினது தோற்றத்துக்கு வழி செய்துள்ளன. 

சிறுபான்மை மொழிகளும் கணிசமான அளவுக்கு இனக்குழும அடையாளங்களும் ஓரங்கட்டப்பட்டதில் முதலாளியப் பொருளியல் செயற்பாடுகளின் விரிவாக்கம் தீர்மானமான பங்கு வகித்துள்ளபோதும், இனக்குழும, மொழி அடையாளங்களை நசுக்குவதில் அரசு ஒரு கருவியாக இயங்கியுள்ளது. 

இதைப் பிரான்ஸ் என்ற தேச அரசின் உருவாக்கத்தில் தெளிவாகக் காணவியலும்.    உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாகவும் அணுஆயுத வல்லரசாகவும் நேட்டோவின் முக்கிய கூட்டாளியாகவும் உள்ள பிரான்ஸின் ஜனாதிபதியானவர் உலக அலுவல்களில் தீர்மானகரமான முடிவுகளை எடுக்க வல்லவர் என்பதும் அவரது அரசியல் முற்சாய்வு அதில் செல்வாக்குச் செலுத்தும் என்பதும் இத்தேர்தல் கவனம் பெற்றமைக்கான காரணமாகும்.  

கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிறுவனமயப்பட்ட அரசியலுக்கு எதிரான சக்திகளுக்கான ஆதரவு, தீவிர வலது தேசியவாதத்தின் உருவில் வலுப்பெற்று வருவதன் பின்னணியில், இத்தேர்தல் நோக்கப்பட்டது. 

குறிப்பாக பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான ‘பிரிக்ஸிட்’ வாக்கெடுப்பு, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் தெரிவு என்பன வழமையான பாரம்பரிய நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் முறையைத் தகர்த்த நிகழ்வுகளாகிய நிலையில், பிரான்ஸும் அத்திசையில் பயணிக்க விளைகிறதா என்பதை அறியும் ஒன்றாகவே இத்தேர்தல் நோக்கப்படுகிறது.  

இரண்டாம் உலகப் போரையடுத்து பிரான்ஸில் நிலவிய ஸ்திரமின்மையை முடிவுக்குக் கொண்டு வந்த சாள்ஸ் டீகோலின் ஜந்தாவது குடியரசு யாப்பு 1958 இல் நடைமுறைக்கு வந்தது முதல் பிரான்ஸின் ஜனாதிபதியாகக் குடியரசுக் கட்சி அல்லது சோசலிசக் கட்சி வேட்பாளர்களே தெரிவாகியுள்ளனர். 

அதேவேளை இரண்டு கட்சிகளில் ஒருகட்சியின் வேட்பாளராவது குறைந்தது இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்குத் தெரிவாகியுள்ளனர். 

இம்முறை இவ்விரண்டு கட்சி வேட்பாளர்களும் முதலாம் சுற்றிலேயே தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இது பிரான்ஸின் அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகும். 

‘என்மார்ச்சே’ என பிரெஞ்ச் மொழியில் அழைக்கப்படுகின்ற ‘முன்நோக்கிய நகர்வு’ கட்சியின் வேட்பாளரான இமானுவேல் மக்ரோனும் தேசிய முன்னணியின் வேட்பாளரான மரின் லு பென்னும் இரண்டாம் சுற்றுத் தேர்தலில் போட்டியிடவிருக்கின்றனர்.

முதலாவது சுற்றில் மக்ரோன் 23 சதவீதமான வாக்குகளையும் லு பென் 22 சதவீதமான வாக்குகளையும் பெற்றனர். 

குடியரசுக் கட்சி வேட்பாளரான பொஸ்வா ஃபியோன் 20 சதவீதமான வாக்குகளையும் சோசலிசக் கட்சியின் பெனோய்ட் ஹமன் ஆறு சதவீதமமான வாக்குகளையும் பெற்றனர். பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட ‘அடிபணியா பிரான்ஸ்’ இயக்கத்தின் ஜொச்மிலோஷோன்  19 சதவீதமான வாக்குகளையும் பெற்றனர். 

இம்மானுவேல் மக்ரோன் இரண்டாம் சுற்றில் வெற்றிபெறுவார் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. தோல்வியடைந்த குடியரசுக் கட்சியின் பொஸ்வா ஃபியோன், சோசலிசக் கட்சியின் பெனோய்ட் ஹமன் ஆகியோர் தாம் மக்ரோனுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தமக்கு வாக்களித்தோர் மக்ரோனுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்கள். 

தீவிர வலதுசாரி வேட்பாளரான மரின் லு பென்னைத் தோற்கடிப்பதற்கு பிரான்ஸின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்திருப்பது ஒரு வலுவான செய்தியைச் சொல்கிறது. 

மரின் லு பென் நிறுவனமயப்பட்ட அரசியலுக்கு வெளியே இருக்கிறார். ‘பிரிக்ஸிட்’, ‘ட்ரம்ப்’ வரிசையில் மரின் லு பென்னின் வருகையை நினைத்துப் பார்க்க, கட்டமைக்கப்பட்ட நிறுவன அரசியலோ வியாபாரமோ விரும்பவில்லை. 

இதன் விளைவால் ஊடகங்கள், பெருவணிகங்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அனைத்தும் மக்ரோனுக்கு ஆதரவாக அணி திரள்கின்றன.   

நீண்டகாலமாக சோசலிசக் கட்சியின் உறுப்பினரான 39 வயதான இம்மானுவேல் மக்ரோன், தற்போதைய பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட்டின் அமைச்சரவையில் பொருளாதார அமைச்சராக இருந்தவர். 

சோசலிச விரோத திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் ஊடு, மக்களின் விரோதத்தை ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் சம்பாதித்ததில் பங்காற்றியவர். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நிலையில் தனது பதவியை இராஜினமாச் செய்துவிட்டு தான் சோசலிசக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

‘என்மார்ச்சே’ என்ற தனது கட்சியைத் தொடங்கி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகச் சொன்னதோடு, தனது கட்சி வலதும் அல்லாத, இடதும் அல்லாத மத்தியத்துவக் கட்சி எனப் பிரகடனப்படுத்தினார். 

இவரது பொருளாதாரக் கொள்கை முடிவுகளின் பலனை, இம்முறைத் தேர்தலில் சோசலிசக் கட்சி அனுபவித்தது. இதன் முரண்நகை யாதெனில் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான வாக்குகள் சோசலிசக் கட்சியின் மோசமான தோல்வியை உறுதிப்படுத்திய வேளை, அக்கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்திய மக்ரோனுக்கு வெற்றிவாய்ப்பை வழங்கியுள்ளன. 

இது மக்ரோன் ஜனாதிபதியானாலும் பிரான்ஸில் பாரிய மாற்றங்களை எதிர்பார்க்கவியலாது என்பதை தெளிவுபடுத்துகிறது.   

இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்கான களம் தயாராகி விட்ட நிலையில், குடியேற்றவாசிகளுக்கு எதிரானவரும் நவ-பாசிஸ்டுமாகிய லு பென்னுக்கும் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட்டின் கசப்புமிக்கதும் மக்கள் வெறுப்பைச் சம்பாதித்ததுமான பொருளாதாரக் கொள்கையை வடிவமைத்த முன்னாள் வங்கியாளரும் ஏற்படப் போகும் போர்களுக்காகப் பிரான்ஸைத் தயார் செய்யும் பொருட்டு கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு அழைப்பு விடுத்திருப்பவருமான மக்ரோனுக்கும் இடையில் தான் தெரிவு உள்ளது என்ற மோசமான நிலைக்கு பிரான்ஸ் வாக்காளர்கள் முகம்கொடுத்து நிற்கின்றனர்.   

பிரான்ஸின் தேசியவாதத் தேசப்பற்று அரசியலின் முகமாக மாறியுள்ள மரின் லு பென், மேற்கில் வீசுகின்ற தீவிர வலதுசாரி அலையின் இன்னொரு பிரதிநிதியாக உருவெடுத்துள்ளார். 

இவரின் வளர்ச்சி எதிர்பாராததல்ல. ஆனால், பிரான்ஸ் முதலாக மேற்குலக நாடுகள் போதிக்கின்ற பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, கூடிவாழ்தல் ஆகிய கோட்பாடுகளை முழுமையாக மறுதலிக்கின்ற வெள்ளை நிறவெறி சார்ந்த நவ-பாஸிச சிந்தனைகளின் களமான தேசிய முன்னணிக் கட்சியின் தலைவரான மரின் லு பென்னின் எழுச்சி, ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்தும் அதிலும் குறிப்பாக பன்மைத்துவ ஐரோப்பாவின் இருப்புக் குறித்த நியாயமான ஐயங்களை எழுப்பியுள்ளது.   

இந்த எழுச்சியைத் தடுப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் பிரான்ஸின் அரசியல் கட்சிகளிடம் இல்லை என்பதை முதலாவது சுற்றுத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.  இதை நன்குணர்ந்த மக்ரோன், “தேசியவாத அபாயத்துக்கு எதிரான வகையில் தேசப்பற்றாளர்களின் ஜனாதிபதியாக” உருவெடுப்பதே தனது இலட்சியம் என்று அறிவித்து, வலது, இடது என்ற வேறுபாடற்று ஒன்றிணையுமாறு தேசியவாத விண்ணப்பத்தைச் செய்தார். 

இந்த விண்ணப்பம், பிரான்ஸ் மக்கள், பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் மீதான வெறுப்பின் விளைவினாலேயே இவ்வாறனதொரு தேர்தல் முடிவு வந்ததை நன்குணர்த்தி நிற்கின்றது.    

மறுபுறம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஒரு தேசியவாத எதிர்ப்பு மற்றும் வன்முறையான புலம்பெயர்-விரோதக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியிட்டிருந்த மரின் லு பென், இரண்டாம் கட்டத் தேர்தலானது தற்போதைய அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கும் தனது பிரான்ஸைத் தேசியரீதியாகப் பாதுகாக்கின்ற கொள்கைக்கும் இடையிலான போட்டியாகும் என வர்ணித்தார். 

அதன் மூலம் பிரான்ஸின் எல்லைகளைக் பாதுகாப்பதனூடு பிரான்ஸை மீண்டும் மகத்தானதாக்கும் தனது பயணம் தொடரும் என்றார்.  

மக்ரோன் பெருமுதலாளிகளினதும், வணிக நிறுவனங்களினதும் உலகளாவிய ஆட்சியதிகாரங்களின் விருப்புக்குரிய தெரிவாக உள்ளார். பிரித்தானியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ நடந்தது போலன்றி நெதர்லாந்தில் மற்றும் ஆஸ்திரியாவில் நடந்தது போல, பெருவணிகங்களினதும் அரசகட்டமைப்பினதும் விருப்பத்துக்குரியவர் பிரான்ஸில் தெரிவாக வேண்டும் என்பதில் கவனம் காட்டப்படுகிறது.

ஊடகங்கள் மரின் லு பென்னின் தெரிவானது பிரான்ஸில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கும் என எச்சரிக்கின்றன. அவ்வாறானதொரு நிலை ஏற்படுமிடத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் விலகுவதானது அபாயகரமானது என்றும் எனவே, மக்ரோனுக்கு வாக்களிக்கும்படி பிரான்ஸ் மக்களுக்குச் சொல்லப்படுகிறது.   

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய நிலையில் ஜேர்மனிக்கு அடுத்தபடியான பிரதானமான உந்துசக்தியாக பிரான்ஸ் திகழ்கிறது. பிரான்ஸ் தேர்தல் முடிவுகள் அடுத்து நடக்கவுள்ள ஜேர்மன் தேர்தலில் வலுவாகச் செல்வாக்குச் செலுத்தும். மீள் தெரிவுக்காகப் போட்டியிடுகின்ற ஜேர்மன் தலைவர் அங்கெலா மேக்கலின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பிரான்ஸ் தேர்தல் முடிவுகள் தாக்கம் செலுத்தும். ஊடகங்கள் மக்ரோனின் வெற்றியை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டன. பிரான்ஸில் வலுவாகவுள்ள சோசலிச, சமத்துவச் சிந்தனைகள் மரின் லு பென்னின் வெற்றியை இயலாமலாக்கும். 

அவ்வகையில் மக்ரோனின் வெற்றி உறுதியாகலாம். ஆனால், அவை தீவிர-வலதுசாரிச் சிந்தனைக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளேயன்றி மக்ரோனுக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகளன்று.   

தேர்தல் அரசியல் ஒரு வினோதமான விளையாட்டு. எதிர்பாராததை எதிர்பார்க்கும் ஒரே விளையாட்டும் இதுவே. அவ்வகையில் மக்கள் மரின் லு பென்னை வெற்றிபெறச் செய்ய வைக்கக்கூடும். பிரான்ஸில் நடந்துகொண்டிருப்பது புதியன புகுதல் அல்ல, பழையன கழிதலே. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .