2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

க(அ)ழிவு களஞ்சியம்

Administrator   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.பி. மதன்

வருமுன் காப்போம் என்பார்கள். ஆனால், எமது நாட்டைப் பொறுத்தமட்டில் வந்தபின்தான் தீர்வை நோக்கி நகர்வார்கள். இதுதான் எமது தலைவிதி. இதைத் தலைவிதி என்பதிலும் பார்க்க சாபக்கேடு என்பதே பொருத்தமாக இருக்கும்.   

இயற்கை அனர்த்தங்களினால் பலரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அப்பொழுதெல்லாம், இயற்கையின் சீற்றத்துக்கு எம்மால் எதுவும் செய்யமுடியாது என்பதுபோல் கையை விரித்தார்கள். ஆனால், மீதொட்டமுல்லை அனர்த்தத்துக்கு மூலகாரணம் மனித மடையர்கள்தான்.   

சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்நாட்டின் மதுரை பக்கத்தில் அகழ்வாராய்ச்சி ஒன்று இடம்பெற்றது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட, சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித வாழ்விடத் தடையங்களில் கழிவு அகற்றல் என்பது பிரதான இடம்பிடித்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. நவீன சாதனங்கள் இல்லாத அக்காலத்திலேயே அதி உன்னதமான கழிவகற்றல் முறைமை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  

ஆனால், அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி கழிவகற்றல் முறைமைகளைப் பல நாடுகள் மேற்கொண்டுவரும் இக்காலத்தில், எம்மக்களைக் குப்பை மலை பறித்தெடுத்திருக்கிறது. இதற்காக, அரசாட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் சுமார் 40பேர்வரை இறந்திருக்கலாம் என்று உறுதிபடக் கூறப்படுகிறது. இருப்பினும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கூற்றுப்படி, 200 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  

இப்படியொரு பாரிய அனர்த்தம் நடந்தபின்னர்தான், அரசாங்கம் விழித்துக்கொண்டது. ஜப்பானிய நிபுணர் குழு தாமாகவே முன்வந்து, ஆய்வுகளைச் செய்தது. அவ்வாய்வின் முடிவில், குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால யோசனைகள் அடங்கிய பரிந்துரைகளை, ஜப்பானிய நிபுணர்குழு கையளித்துள்ளது. Reduce - குறைத்தல், Reuse - மறுபயன்பாடு மற்றும் Recycle - மீள்சுழற்சி ஆகிய, 3R பரிந்துரை மிகவும் முக்கியமானது என்றும் அந்த நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.  

ஆனால், இதேபோன்ற பல தீர்வுகளை அவ்வப்போது பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். புளுமென்டலில் இருந்த குப்பை மலை அகற்றப்பட்டதன் பின்னர், 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான் மீதொட்டமுல்லயில் பாரிய குப்பைமலை உருவாகத் தொடங்கியது. இதனை எதிர்த்து அன்றுதொட்டு இன்றுவரை பல அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனால், அவர்களுக்கு மிஞ்சியது அடியும் உதையும்தான். இன்று, அவர்களில் பலர் பலியாகியிருக்கிறார்கள்.  

கடந்த வருடம், சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய ஊடகவியலாளர் ஐக்கியத்தில் நானும் கலந்துகொண்டேன். தெமாசேக் பவுன்டேஷனின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் ஒழுங்கு செய்யப்படும் ஊடகக் கற்கைநெறியில், ஆசியாவைச் சார்ந்த 18 ஊடகவியலாளர்கள் கலந்துகொள்வர். மூன்று மாதங்கள் சிங்கப்பூரில் தங்கி, ஊடக கற்கைநெறியைத் தொடரும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்திருந்தது.   

இத்தகைய சந்தர்ப்பத்தில், சிங்கப்பூரின் கழிவகற்றல் தொடர்பாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பமும் எமக்குக் கிடைத்தது. சிங்கப்பூரைப் பொறுத்தமட்டில், சுத்த பூமி என்ற கருத்து பலரது மத்தியிலும் காணப்படுகிறது.

இப்பெயரை இலகுவில் பெற்றுவிடமுடியாது. அதற்கான திட்டங்கள் வலுவானதாக இருக்க வேண்டும். அப்படியான திட்டத்தினை, சிங்கப்பூர் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.  

Pulau Semakau (புலாவ் செமகாவ்) என்ற ஒரு தீவில், சிங்கப்பூரின் கழிவுகள் புதைக்கப்படுகின்றன. செமகாவ் தீவு என்பது சிங்கப்பூரின் தெற்கே, சுமார் 7 கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள ஒரு சிறிய தீவாகும். இந்தத் தீவு முழுவதுமாக, குப்பைகள் புதைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 1989ஆம் ஆண்டில், மீன்பிடித் தீவாக இருந்த புலாவ் சாகேங் என்னும் தீவையும், அதன் அருகிலுள்ள சிறிய தீவையும் இணைத்தே, புலாவ் செமகாவ் உருவாகிவருகிறது.  

புலாவ் சாகேங் தீவில் குடியிருந்த மீனவர்களை, சிங்கப்பூரின் நில கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் அத்தீவிலிருந்து அகற்றி, பிரதான நிலப்பகுதியில் குடியேற்றப்பட்டனர். அதன் பின்னர்தான் புலாவ் சாகேங் தீவில் கழிவகற்றல் திட்டம் பற்றிச் சிந்தித்தனர்.   

சிங்கப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பிரதான மூன்று எரியூட்டு நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு அவை அனைத்தும், அதீத வெப்பத்தில் எரியூட்டப்பட்டு சாம்பராக்கப்படுகின்றன. அதன் பின்னர், அந்தச் சாம்பர்கள் அனைத்தும் கப்பல்களில் ஏற்றப்பட்டு, புலாவ் செமகாவ் தீவில் புதைக்கப்படுகின்றன. இதுவொரு நீண்டகாலத் திட்டமாகும்.   

1999ஆம் ஆண்டு ஏப்ரல் 01ஆம் திகதி, இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. புலாவ் செமகாவ் தீவை மக்கள் பாவனைக்கு உட்படுத்துவதுதான் நீண்டகாலத் திட்டம். அதனடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பாரிய நிதியொதுக்கீட்டில், இத்தீவு அழகுற வடிவமைக்கப்படுகிறது.   

புலாவ் செமகாவ் மீள்நிரப்புத் தீவின் முதற்கட்டப் பணிகள், கடந்த வருடத்துடன் நிறைவடைந்துள்ளன. 350 ஹெக்டெயர் விஸ்தீரணத்தைக் கொண்ட புலாவ் செமகாவ் திட்டத்தின் முதற்கட்டமானது 178 ஹெக்டெயர் விஸ்தீரணத்தைக் கொண்டது. இந்த மீள்நிரப்புத் தீவுத் திட்டத்துக்காக, 610 மில்லியன் சிங்கப்பூர் டொலர்களை அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. 1999ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது, 2045ஆம் ஆண்டுவரை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

ஆகவே, சிங்கப்பூரில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளுக்கான நிரந்தரத் தீர்வை அவர்கள் தாமாக உருவாக்கியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுமாத்திரமன்றி, தம்மக்களுக்கான புதிய தீவையும் அவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.   

புலாவ் செமகாவ் திட்டத்தின் முதற்கட்டமான 178 ஹெக்டெயர் விஸ்தீரணத்தில் சிறிய பல தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தொட்டிகளுக்குள் தான் சாம்பர் கொட்டப்படுகிறது. இதனைச் செய்வதற்கு கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1999ஆம் ஆண்டில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, சுமார் 2700 தொன் குப்பைகள் நாளொன்றுக்குச் சேகரிக்கப்பட்டன. ஆனால், கடந்த வருடத்தில் சுமார் 8550 தொன்  குப்பைகள் நாளொன்றில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.   

சனத்தொகை அதிகரிப்பும் குடியிருப்புகளின் அதிகரிப்பும், குப்பைகள் தேங்குவதை அதிகரித்திருக்கின்றன. ஆகையினால், இக்குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனங்களை அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. கேள்விப்பத்திர அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் தெரிவுசெய்யப்படுகின்றன. இவர்களது பணி, இரவு வேளையில் குப்பைகளை அகற்றி, எரியூட்டு நிலையங்களில் ஒப்படைப்பதுதான்.  

குப்பைகளைப் பிரிக்கும் முறைமையை குடிமக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை சிங்கப்பூர் அரசாங்கம் எடுத்து வருகின்றமை சிறப்பானதாகும். உக்கக்கூடிய குப்பைகள் வேறாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் வேறாகவும், கண்ணாடிப் பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை எரியூட்டும் பணியை மூன்று பிரதான தளங்கள் மேற்கொள்கின்றன.  

இதுபோன்றதொரு எரியூட்டல் நிலையம், இலங்கையின் கிருளப்பனையில் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். 1955ஆம் ஆண்டுகளில் இந்நிலையம் இயங்கியிருக்கிறது. ஆனால், பிற்காலத்தில் சூழல் மாசடைவு காரணமாக இந்நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. ஆனால், சிங்கப்பூரில் குப்பைகளை எரியூட்டும் நிலையங்கள் அதிநவீன வசதிகளைக் கொண்டவை. உயரிய மின்சக்தியில் எரிக்கப்படும் குப்பைகளிலிருந்து வெளிவரும் புகையை நீராவியாக்கும் முறைமை பின்பற்றப்படுகிறது. அதுமாத்திரமன்றி, புபைபோக்கியின் உயரமும் அதிகமாக இருப்பதால், சூழல் மாசடைவு தவிர்க்கப்படுகிறது.   

ஆகவே, இவை அனைத்தும் தூரநோக்குச் சிந்தனையுடன் மிகத் தரமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. புலாவ் செமகாவ் மீள்நிரப்புத் தீவின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டாம்கட்ட மீள்நிரப்பு நடவடிக்கைகள், 2035ஆம் ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து வரும் பத்து வருடங்களில், புலாவ் செமகாவ் தீவு, அழகுபடுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படும்.   

அதன் பின்னர், 2050ஆம் ஆண்டளவில் ஆகாய நகரம் அமைக்கும் திட்டம்பற்றி சிங்கப்பூர் அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. ஆகவே, அவர்களின் தூரநோக்குத் திட்டம் நிரந்தரமானது. ஆனால், எமது நாட்டைப் பொறுத்தமட்டில் குறுகிய காலத்திட்டங்களை மனதில் வைத்தே இயங்குகின்றனர்.

மீதொட்டமுல்லயில், நாளொன்றுக்கு 800 தொன் முதல் 1,200 தொன் வரை குப்பைகள் கொட்டப்படுவதாக, கொழும்பு மாநகர சபையின் தகவல் தெரிவிக்கின்றது. அப்படியான குப்பைகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் தூரநோக்கும் திட்டமற்ற வங்குரோத்து நிலையிலேயே எமது அரசாங்கம் இருப்பது வெட்கப்படவேண்டிய விடயம்தான். 

ஆகவே, இனியாவது இவ்விடயம் தொடர்பில் தூரநோக்கத்துடன் செயற்படுவது கட்டாயமாகிறது. தகுந்த நிபுணர்களை நியமித்து, நிரந்தரமான தீர்வுக்காகப் பாடுபடுவதே காலத்தின் தேவை என்பதை அரசாங்கமும் அதன் அங்கத்தவர்களும் உணர்வது சாலப்பொருந்தும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .