2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு

Thipaan   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான் 

சைட்டம் எனப்படும், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்திலிருந்து மீட்கப்பட்ட எலும்புகள் உள்ளிட்ட உடற் பாகங்கள், தாஜுதீனினுடையது அல்ல என்று, ஜின்டெக் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (26) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் புத்திக ராகல மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 

இதேவேளை, பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்த பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டமை தொடர்பாக, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய மேலும் 14 இராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்; நீதிமன்றத்தில் அறிவித்தனர். 

பக்கங்கள் கிழிக்கப்பட்டமை தொடர்பில், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 25 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் அவர்களுடை மேலதிக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2012ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதி வரை, அப்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்புக்கான பிரிவினர் கையெழுத்திடும் பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டு, செலோடேப்பினால் ஒட்டப்பட்டுள்ளன என்று, சீ.ஐ.டியினரின் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டது. 

2011ஆம் ஆண்டு டிசெம்பர் முதல் 2012ஆம் ஆண்டு மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இது தெரியவந்துள்ளது என்றும் சீ.ஐ.டியினர் குறிப்பிட்டனர். 

இந்த விவகாரம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளுக்கு காலம் தேவைப்படுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க நீதிமன்றில் கோரினார். 

இதேவேளை, சைட்டம் நிறுவகத்திலிருந்து மீட்கப்பட்ட எலும்பு உள்ளிட்ட உடற் பாகங்கள், தாஜுதீனினுடையது அல்ல என்று, ஜின்டெக் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில், அந்த உடற்பாகங்களை ஜின்டெக் நிறுவனத்திலிருந்து நீதிமன்றத்துக்குக் கொண்டுவருவதற்கான உத்தரவினை வழங்குமாறு, சீ.ஐ.டியினர், நீதவானிடம் கோரினர். அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவின் விளக்கமறியல் மே 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவையும் அன்றையதினம் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. 

வசீம் தாஜுதீன், நாரஹேன்பிட்டிய சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குள் இறந்த நிலையில் 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .