2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

நீதிமன்றக் கட்டளையை அவமதித்தவர்களை, உடனடியாக கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி, சட்டத்தரணிகள் பலர், திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக,  இன்றுக் காலை  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த வேலையில்லாப்பட்டதாரிகள், திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த கட்டளை அடங்கிய ஆவணத்தை, பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொண்டதுடன்,  அதனைக் கிழித்து, காலால்  மிதித்தமையை கண்டித்தே, இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை அமர்வு, கடந்த செவ்வாய்க்கிழமை (24)  நடைபெற்றுக்கொண்டிருந்த போது, கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த வேலையில்லாப்பட்டதாரிகள், மாகாண சபையின் பின்கதவுகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தினால், போக்குவரத்துக்கு தடையேற்படலாம் என்றுக் கருதிய திருகோணமலை பொலிஸார்,  ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு வழங்குமாறு,  நீதிமன்றைக் கோரினர்.

அக்கோரிக்கையை விசாரித்த திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதான  நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, அமைதியான முறையிலும் பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படாத வகையிலும்,  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு, ஆர்பாட்டத்தை தலைமை தாங்குபவர்களுக்கு கட்டளை பிறப்பித்தார்.

கட்டளை உள்ளடங்கிய ஆவணத்தை, திருகோணமலை பொலிஸார்  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கையளித்தபோது அதனை பெற்றுக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆவணத்தை கிழித்து காலால் போட்டு மிதித்தனர்.

இது நீதிமன்ற கட்டளையை அவமதிக்கும் செயற்பாடு என்றும் அக்கட்டளையை உதாசீனம் செய்தவர்களுக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தே,  சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்ல பட்டதாரிகள், நீதிமன்றக் கட்டளையை பொலிஸாருக்கு முன்பே அவமதித்துள்ளனர்.  எனினும், பொலிஸார் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைதுசெய்யாமல் அசமந்தப்போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.  வேலையில்லாப்பட்டதாரிகளை மட்டுமல்ல பொலிஸாரையும் நாங்கள் கண்டிகின்றோம்.

பொலிஸார் முன்னிலையில் பாரிய குற்றம் நிகழ்ந்திருக்கின்றது. எனவே, பொலிஸார் குற்றத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்திருக்க வேண்டும். பொலிஸார் அவ்வாறு செய்யாமல்,   வெறுமனே ஓர் அறிக்கையை மட்டும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து, சந்தேக நபர்களுக்கு அழைப்புக்கட்டளை விடுக்குமாறு வேண்டியிருப்பதானது, சட்டத்தை அவமதிக்கும் செயற்பாடாகும்” என்று  கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X