2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ட்ரம்ப்பை வாட்டிவதைக்கும் ரஷ்ய விசாரணை

Administrator   / 2017 மே 18 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவியென்பது, மிகவும் அதிகாரமிக்க ஜனாதிபதிப் பதவிகளுள் ஒன்றாகும். அதனால் தான், ஐ.அமெரிக்க ஜனாதிபதிப் பதவியில் இருப்போரை, “சுதந்திர உலகின் தலைவர்” என்று அழைப்பர்.

அந்ததளவுக்கு, ஒட்டுமொத்த உலகையும் வழிநடத்தும் பொறுப்பு, அந்தப் பதவிக்கு உள்ளதெனக் கருதப்படுகிறது.  
இந்த நிலைக்கு, எவ்வாறு தள்ளப்பட்டோம்; இந்த நிலைமையைப் பயன்படுத்தி, உள்நாட்டு விவகாரங்களில் ஐ.அமெரிக்கா எவ்வாறு தலையிட்டது; இதனால் ஏற்பட்ட பாதக நிலைமைகள் போன்றன எல்லாம், ஒருபுறமிருக்கட்டும்.  

ஆனால், ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக, டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட போது ஏற்பட்ட அச்சங்களில் ஒன்று, அவரது வெறுப்புப் பேச்சுகளும் தடாலடியான தன்மையும் இனவெறி கொண்டவர்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆதரவும், உலகெங்கும் பரவி விடும் என்பது தான். “ஐ.அமெரிக்காவிலேயே நடக்கிறது. இதிலென்ன பிழை?” என்ற கேள்விகள் எழுப்பப்படும் என்பது தான். எனவே தான், ஜனாதிபதி ட்ரம்ப்பை விரும்பாதவர்கள் கூட, அவர் மோசமாகத் தோல்வியடையக்கூடாது என்று விரும்பினர். அந்தளவுக்கு முக்கியமானது அவரது பதவி.  

இவையெல்லாம் அடிப்படைகளாக இருக்க, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது, தலைகீழானதாக இருக்கிறது என்பது தான், குறிப்பிட வேண்டியதாக உள்ளது.  

ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்யாவின் வெளிநாட்டமைச்சர் சேர்ஜெய் லவ்ரோவையும் ஐ.அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதுவர் சேர்ஜெய் கிஸ்லியாக்கையும், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வைத்து, கடந்த வாரம் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பே, பல கேள்விகளை எழுப்பியிருந்ததுடன், புருவங்களை உயர்த்தியிருந்தது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள செய்தி, முழுமையான கேள்விகளை எழுப்பிச் சென்றிருக்கிறது. 

இந்தச் சந்திப்பின் போது, ஐ.அமெரிக்காவின் தோழமை நாடொன்றால் வழங்கப்பட்ட, அதி இரகசியமான புலனாய்வுத் தகவலை, ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தினார் என்பது தான் தற்போதுள்ள செய்தி. இந்தச் செய்தியை, வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, முதன்முதலில் வெளிப்படுத்தியது.  

ஐ.எஸ்.ஐ.எஸ் சம்பந்தமான இந்தத் தகவலை, தோழமை நாடுகளுக்கிடையிலான புலனாய்வுத் தகவல் பகிர்வு அடிப்படையில், குறித்த நாடு வழங்கியதாகவும், அதை, ரஷ்யாவிடம் பகிர்வதற்கு, அந்நாடு அனுமதி வழங்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் குறிப்பாக, நாடொன்றின் குறித்த நகரத்திலிருந்து தான், இந்தப் புலனாய்வுத் தகவல் பெறப்பட்டது என்பதை, ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம், புலனாய்வுத் தகவல் மூலம் வெளிப்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாகக் கருதப்படுகிறது. அதேபோல், தோழமை நாட்டுடனான புலனாய்வுத் தகவல் பகிர்வும் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.  

இதில் முக்கியமாக, ஜனாதிபதி என்ற அடிப்படையில், தான் விரும்பும் தகவலை, விரும்பும் நபரிடம் தெரிவிக்கும் அதிகாரம், ட்ரம்ப்புக்கு உண்டு. எனவே, இது, சட்டத்தை மீறிய ஒன்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

மாறாக, நாட்டின் அமைதியையும் தோழமை நாட்டின் புலனாய்வையும் பாதிக்கக்கூடிய வாய்ப்பையே இது ஏற்படுத்தும்.  

இந்தத் தகவல் வெளியானதும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆலோசகர்களும் தொடர்பாடல் ஆளணியினரும், பல்வேறு ஊடகச் சந்திப்புகளுக்கும் அனுப்பப்பட்டனர். “சந்திப்பு நடந்த அறையில் நான் இருந்தேன். அப்படியான ஒன்று நடக்கவேயில்லை” என்பது தான், அனேகரின் கருத்தாக இருந்தது.  

இவ்விடயத்தில் வொஷிங்டன் போஸ்ட், உறுதியுடன் இருந்தது. “ஜனாதிபதி ட்ரம்ப், என்ன விடயத்தைக் கதைத்தார், எந்த நகரத்திலிருந்து அந்தத் தகவல் கிடைத்தது என்று கூறினார் என்றுகூடத் தெரியும். ஆனால், புலனாய்வு மூலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற ஐ.அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், அத்தகவல்களை வெளியிடுவதிலிருந்து தவிர்க்கிறோம்” என்பது, அப்பத்திரிகையின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது.  

இவற்றுக்கு மத்தியிலேயே, “அப்படி ஒன்று நடக்கவேயில்லை” என, ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஊடக ஆளணியினர், தங்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வந்தனர்.  

ஆங்கிலத்தில், தனிப்பட்ட சுயநல நோக்கங்களுக்காக நெருங்கிய ஒருவரைக் காட்டிக் கொடுத்தல்  என்ற அர்த்தத்தில், “ஒருவரை பஸ்ஸுக்கு அடியில் எறிதல்” என்ற சொற்றொடர் காணப்படுகிறது.

அவ்வாறு செய்வது போல, அவர்களையெல்லாம் காட்டிக் கொடுப்பது போல, தனது டுவிட்டரின் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், “ஜனாதிபதியாக நான், எனக்குச் செய்வதற்கு உரிமையுள்ள வகையில், ரஷ்யாவிடம் (வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட வெள்ளை மாளிகைச் சந்திப்பில்), பயங்கரவாதம், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்தேன்.

மனிதாபிமானக் காரணங்கள் தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ், பயங்கரவாதத்துக்கு எதிரான அவர்களது போராட்டத்தை, ரஷ்யா உயர்த்த வேண்டுமென நான் விரும்புகிறேன்.  கோமியிடமும் ஏனையோரிடமும், எனது நிர்வாகத்தின் ஆரம்பத்திலிருந்து, புலனாய்வுச் சமூகத்தில், தகவல்களைக் கசியவிடுவோரைக் கண்டுபிடிக்குமாறு கோரிவந்தேன்” என்று தெரிவித்தார்.  

இதன்மூலம், ரஷ்யர்களிடம் இரகசியத் தகவல்களை வழங்கினார் என்ற விடயத்தை அவர் மறைமுகமாக உறுதிப்படுத்தியதோடு, தனது ஆலோசகர்களையும் ஊடகத் தொடர்பாளர்களையும் காட்டிக் கொடுத்தார். அவரைப் பொறுத்தவரை, ஏனையோரால் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதை அவர் விரும்புவதில்லை. “எனக்கு அதிகாரமிருக்கிறது, நான் செய்கிறேன். அதைக் கேட்க நீங்கள் யார்?” என்ற மனநிலையே அது.  

இவ்வாறு அவரது ஆலோசகர்களும் ஊடகத் தொடர்பாளர்களும் காட்டிக் கொடுக்கப்பட்டமை, இதுவே முதன்முறை கிடையாது. இதற்கு முன்னர், புலாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்.பி.ஐ) பணிப்பாளராக இருந்த ஜேம்ஸ் கோமி, தடாலடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது, சர்ச்சை எழுந்தது. ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் தொடர்புகள் காணப்பட்டனவா என்று, எப்.பி.ஐ-ஆல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதைத் திசைதிருப்புவதற்காக அல்லது நிறுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என, கடுமையான விமர்சனம் எழுந்தது.

எனினும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆலோசகர்களும் ஊடகத் தொடர்பாளர்களும், “அதற்கும் இதற்குமிடையில் தொடர்பு கிடையாது” என்று, உரத்தச் சொல்லி வந்தனர். ஆனால், தொலைக்காட்சியொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கிய ஜனாதிபதி ட்ரம்ப், இரண்டுக்குமிடையில் தொடர்பு காணப்படுவதை உறுதிப்படுத்தினார்.  

நேற்று வெளியான செய்தியொன்றின்படி, ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து, ரஷ்யர்களுடனான தனது தொடர்பை வெளிப்படுத்தாதன் காரணமாக, பதவியிலிருந்து விலகுவதற்குப் பணிக்கப்பட்ட மைக்கல் பிளின் மீதான விசாரணையை நிறுத்துமாறு, ஜனாதிபதி ட்ரம்ப், அப்போதைய எப்.பி.ஐ பணிப்பாளர் ஜேம்ஸ் கோமியிடம் கோரியிருந்தார் எனத் தெரிகிறது. இது, இவ்விடயத்தை மேலும் சிக்கலாக்குகிறது.  
இவ்வாறு, ஜனாதிபதி ட்ரம்ப்பின் கீழ் பணியாற்றுவது என்பது, மிகவும் கடினமானதாக மாறி வருகிறது என்பதே, அனைவரதும் கருத்தாக இருக்கிறது. அவர், எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்பது, தெளிவில்லாமல் காணப்படுகிறது. எனவே, அவரது செயற்பாடுகளை நியாயப்படுத்துவதென்பது, இன்னமும் கடினமானதாகவே மாறிவிடுகிறது.  

ஜனாதிபதி ட்ரம்ப்பைப் பற்றி வெளிவரும் செய்திகள், எவ்வளவு நிலையில்லாதவராக அவர் காணப்படுகிறார் என்பதைக் காட்டுகின்றன. அவர், உடற்பயிற்சி செய்வதில்லை. கல்லூரிக் காலத்துக்குப் பின்னர், உடற்பயிற்சியே செய்ததில்லை. ஏனென்று கேட்டால், உடல் என்பது மின்கலம் (பற்றறி) போலவெனவும், உடற்பயிற்சி செய்யும் போது அதிலுள்ள சக்தி தீர்ந்துவிடுமெனவும் தெரிவிக்கும் அவர், சக்தியைச் சேமிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கிறார்.  

வெள்ளை மாளிகையில் உணவுண்ணும் போது கூட, ஏனையோருக்குத் தண்ணீர் வழங்கப்பட, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு மாத்திரம் குளிர்பானம் வழங்கப்படுகிறது. ஏனையோருக்கு ஒரு “ஸ்கூப்” வனிலா ஐஸ்கிறீம் வழங்கப்பட, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு 2 “ஸ்கூப்” வழங்கப்படுகின்றன. கோழியிறைச்சி உண்ணும் போது, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு மாத்திரம், மேலதிக தட்டில் சுவைச்சாறு (சோஸ்) வழங்கப்படுகிறது.  

இவ்வாறு, அனைத்திலும் தனியான கவனம் செலுத்தப்பட்டு, அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில், குழந்தைகளைப் போல, இலகுவில் தனது விருப்பப்படி விடயங்கள் நடைபெறாவிட்டால், கோபமடையும் பழக்கத்தை, ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டிருக்கிறார்.  இவ்வாறான ஒருவர் தான், ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கிறார்.

அதன்மூலம், உலகம் முழுவதற்கும் வழிகாட்டியாகச் செயற்பட வேண்டியவராக இருக்கிறார். எனவே தான், ஐ.அமெரிக்காவில் நடப்பவை பற்றியும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.   

அடம்பிடிக்கும் குழந்தையொன்றை, நாட்டின் ஜனாதிபதியாக, அமெரிக்கர்கள்  தெரிவுசெய்திருக்கின்றனர். அந்தக் குழந்தை, தன் பதவியின் முக்கியத்துவம் பற்றி அறியாமல் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகம், ஓரளவு அமைதியாக இயங்க வேண்டுமானால், சிறந்த வழிகாட்டல் தேவைப்படுகிறது.

இந்நிலையில் தான், பிரான்ஸின் புதிய பிரதமர் இமானுவேல் மக்ரோன், ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல் போன்றோர், நவீன உலகின் புதிய வழிகாட்டிகளாக மாற வேண்டிய தேவையிருக்கிறது. ஏனென்றால், இங்கு ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளே, போதுமானவை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X