2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தீர்வு விரைவில் வரும்: பிரதமர்

Menaka Mookandi   / 2017 மே 19 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“மன்னார் மாவட்டத்துக்கு இன்று ஒரு விசேட தினமாகும். யுத்தத்தின் போது இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோன ஒரு நாள் என்பதனை நாங்கள் நினைவுகூற வேண்டும். இரு தரப்பில் இருந்தும் யுத்தத்தில் போரிட்டவர்கள், உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகளும் அப்பாவிப் பொதுமக்களுமே ஆவர்” என, பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.

மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதியை, இன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோர், நாடாளுமன்றத்தில் என்னை சந்திக்கின்றபோது, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மாவட்டத்தின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்கும்  மாகாண சபையூடாக நிதித் திட்டங்களை வழங்குவதற்குமான அவகாசத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். யுத்தத்தினால் சேதமடைந்த மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தினை, பல்வேறு வகையிலும் முன்னேற்றுவதற்காக மாகாண சபை, மத்தியரசு எனப் பார்க்காது இரண்டு தரப்பக்களினூடாகவும் இணைந்து, குறித்த திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் இடம் பெறக்கூடாது. அதற்கான வழி வகைகளை நாம் மேற்கொள்ளக்கூடாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் ரீதியில் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த இளைஞர், யுவதிகளுக்கு இவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. வேறு வழிகளும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே, அவர்களையும் நாங்கள் இந்த சமூகத்தோடு இணைத்துக்கொண்டு, அவர்களுக்கான கௌரவத்தை வழங்க ஒத்துழைக்க வேண்டும். அதற்கு அவகாசத்தை எமக்கு வழங்க வேண்டும்.

அதற்காக இந்தப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை நாங்கள் பூரணப்படுத்துவது போல, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், தம்புளை போன்ற பிரதேசங்களுக்கான பெருந்தெருக்களை நிர்மாணிப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டுள்ளோம்.

அதேபோன்று, வீடமைப்புத் திட்டங்களையும் நிர்மாணிப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். வடக்கு பிரதேசங்களுக்கு கைத்தொழில் முன்னெற்ற நடவடிக்கைகளுக்கு விசேட சலுகைகளை வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதேபோன்று, சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறையை விருத்திசெய்யத்  தீர்மானித்துள்ளோம். ஒரு சில மாதங்களில், சுற்றுலாத் துறையை விருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும், யுத்தத்தினால் காணாமல் போனவர்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் முன்வந்துள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய யாப்பு ஒன்றை ஒழுங்குசெய்ய வேண்டும். இது தொடர்பில், வடமாகாண முதலமைச்சருடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மிக விரைவாக, ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும் என அங்கு வழியுறுத்தப்பட்டது.

ஆகவே, இவ்விடயம் தொடர்பில் ஒரு சில மாதங்களில் அடிப்படை விடயங்கள் ஆராயப்பட்டு, இறுதியாக பூரண அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம். இந்த விடயத்தை நாங்கள் இழுத்தடித்துக்கொண்டு செல்ல முடியாது. இனவாதம், மதவாதம் என்று கதைத்துக்கொண்டு, இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. இந்த நாட்டில் பிளவை ஏற்படுத்துகின்ற விடையங்களைக் கலந்துரையாட முடியாது.

நாங்கள் அனைவரும், இந்த விடயத்தில் ஒருமித்து கலந்துரையாடி முடிவுகளை எடுக்கவேண்டும். சிறந்த நல்லிணக்கம் உள்ள சமாதானமுள்ள ஒரு தீர்வையே, மக்கள் எங்களிடம் எதிர்ப்பார்க்கின்றனர்.

மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய, மக்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க வேண்டிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். செயற்பாடு ரீதியாக, நாடாளுமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே, இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர்.

ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும், நானும், இவ்விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்திருக்கின்றோம். எனவே, யாப்பு ஒன்றையும் அறிக்கை ஒன்றையும் தாயரிப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். அவ்வாறான நிலைமை தோன்றுமாக இருந்தால், நாங்கள் இயல்பான நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X