வெள்ளிக்கிழமை, 18 மே 2012

தாய்லாந்தில் குண்டுவீசிய நபர் கால்களை இழந்தார் ; ஈரானியர் என சந்தேகமாம்

 

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இன்று செவ்வாய்க்கிழமை குண்டொன்றை வீசிய நபர் அக்குண்டுவெடிப்பினால் தனது இரு கால்களையும் இழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவீசிய நபருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கடவுச்சீட்டு மூலம் அவர் ஈரானைச் சேர்ந்த சயீட் மொராடி என சுட்டுக்காட்டுவதாக தாய்லாந்து பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து தாய்லாந்து பொலிஸார் மேலும் பல வெடிபொருட்களை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவரின் இலக்கு எது எனத் தெரியவில்லை எனவும் தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவீச்சுக்கு முன்னர் மொராடி தங்கியிருந்த வீட்டில் இன்று மாலை குண்டொன்று தற்செயலாக வெடித்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.

'அந்நபர் டெக்ஸியொன்றை நிறுத்த முயன்றார். எனினும் அவரின் உடலில் இரத்தம் காணப்பட்டதால் டெக்ஸி சாரதி வாகனத்தை நிறுத்தவில்லை. அப்பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்தபோது, அந்நபர் தன்னை பாதுகாப்பற்காக கிரனேற் ஒன்றை எறிந்தார். எனினும் அது திரும்பிவந்து அவரின் கால்களுக்கடியில் விழுந்துவெடித்தது' என தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக ஈரான் மீது இஸ்ரேல் குற்றம்சுமத்தியுள்ளது.

ஏற்கெனவே நேற்று திங்கட்கிழமை இந்தியாவிலும் ஜோர்ஜியாவிலும் இஸ்ரேலிய தூதரக வாகனங்களில் குண்டுவைக்கப்பட்டிருந்தமைக்கு ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்துள்ளது. அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஈரான் கண்டிப்பதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரமின் மெஹ்மன்பரஸ்ட் கூறியுள்ளார்.
 

Views: 401

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.