வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014
 

அமெரிக்காவுடனான பகிரங்க கலந்துரையாடலுக்கு பாகிஸ்தான் ஆர்வம்


அமெரிக்காவுடன் பகிரங்க கலந்துரையாடலை நடத்த பாகிஸ்தான் விரும்புவதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அப்துல் பஷிட் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடன்  அமெரிக்கப் படைகளினால் கொல்லப்பட்ட பின்னர், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்தன. கடந்த நவம்பர்மாதம் அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதலால் பாகிஸ்தான் துருப்பினர் 24 பேர் பலியானதையடுத்து நிலைமை மேலும் மோசமடைந்தது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ரஸா கிலானியும்  இவ்வாரம் சந்தித்து பேசினர்.

அத்துடன் ஆப்கானிஸ்தான் யுத்தத்தை மேற்பார்வை செய்யும் அமெரிக்கத் தளபதியான ஜோன் அலன் மற்றும் ஜேம்ஸ் மத்திஸ் ஆகியோர் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பக் கயானியை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இச்சந்திப்பின்போதும், ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கான விநியோக பாதையை பாகிஸ்தான் திறப்பதற்கான திகதி எதுவும் தீர்மானிக்கப்படவில்லை.

இவ்விநியோக பாதை திறப்புக்குமுன் நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் மன்னிப்புக் கோரலை பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக தம்மை இனங்காட்ட விரும்பாத பாகிஸ்தான் அதிகாரியொருவர் ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளார்.


Views: 1572

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.